தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய டிரைவர்; கொடூரமாகத் தாக்கி கோமாவில் தள்ளிய கணவன்

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் கோகுல்ராஜ் (34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் தேவராஜூக்கு தெரிய வந்துள்ளது. அதையடுத்து தன்னுடைய மனைவியைக் கண்டித்தவர், கோகுல்ராஜையும் நேரில் சந்தித்து ‘இனிமேல் என்னுடைய மனைவிக்கு நீ மெசேஜ் அனுப்பினால் நடப்பதே வேறு’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், அதன்பிறகும் கோகுல்ராஜ், தேவராஜின் மனைவிக்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தேவராஜ், அக்.11-ம் தேதி தனது நண்பர்களான நந்தகுமார் (19), பிரசாந்த் (23), தரனேஷ் (23) ஆகியோருடன் சென்று, தனியாக பேச வேண்டுமெனச் சொல்லி கோகுல்ராஜை அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து பேச்சு மூச்சற்று கீழே விழுந்த கோகுல்ராஜை, தூக்கி வந்து அவரது வீட்டினருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.  தகவலறிந்த வந்த கோகுல்ராஜின் குடும்பத்தினர், அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, கோகுல்ராஜ் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக கோகுல்ராஜின் தந்தை சிவராஜ், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவராஜ், நந்தகுமார், பிரசாந்த், தரனேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்… ‘கூகுள்பே’ மூலம் சிக்கியதன் பின்னணி! 

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவர்களுக்கான டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் நாமக்கல் பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ‘நாமக்கல்லுக்கு வந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம்’ என நிவாஸ் ஆசை காட்டவே, அதை நம்பி கபிலர் மலையைச் சேர்ந்த அந்த இளைஞர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திற்கு வந்த அவரை பைக்கில் பிக்கப் செய்துகொண்ட நிவாஸ், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாக்கியுள்ளார். அவரை மிரட்டி அவரது செல்போனில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.7 ஆயிரத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்தக் கும்பல், இதே செயலியைப் பயன்படுத்தி நாமக்கல் அருகேயுள்ள வி.ஜி.பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி வலை வீசியது. அக். 9-ம் தேதி அந்த இளைஞரையும் நாமக்கல்லுக்கு வரவழைத்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, ரூ.10 ஆயிரத்தை பறித்தது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞரும் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பணம் பறித்த கும்பலின் கூகுள்பே விவரங்களை வைத்து தேடினர். இதில், பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19), தீபக் (20), ஜீவ பாரதி (20) மற்றும் சேந்தமங்கலம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த விஜய் (20) ஆகிய நால்வரும் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸ் விசாரணையின் போது, கைதான நால்வரும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்ததும், உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், செய்திகளில் வந்த இதேபோன்று ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களைப் பார்த்து, தாங்களும் இப்படிச் செய்ததாகத் தெரிவித்துள்ளனர். நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“யார்கிட்டதான் போன் பேசுவியோ?” – கண்டித்த தாய்; இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவரது கணவர் சின்னப்பையன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் நதியா (வயது 19), பெரியசோரகையில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நதியாவுக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உள்ளனர். ராஜாத்தி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த 10-ந் தேதி வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றிருந்த ராஜாத்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது நதியா வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் ராஜாத்தி, “லீவ் நாளிலாவது வீட்டில் வேலைகளைச் செய்யக்கூடாதா? ஆடு, மாடெல்லாம் தீவனம் இல்லாம இருக்கு… அப்படி நாள் முழுக்க யார்கிட்டதான் போன் பேசுவியோ?” என நதியாவைக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதன்பின், நதியா வீட்டின் உள் அறையில் படுக்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை 7.30 மணி ஆகியும் அவர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. தாய் ராஜாத்தி அறைக் கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே பார்த்தபோது, நதியா வீட்டின் கூரையில் இருந்த இரும்பு ஆங்கிளில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு  அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து நதியாவை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நதியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு தூக்கிய ‘கில்லாடி திருடர்கள்’! – போலீசிடம் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் கலாமணி. இவர் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த செப்.16-ம் தேதி இரவு வழக்கம்போல பன்றிகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து கலாமணி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். செப்.17ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் பட்டியின் அருகே பிக்-அப் வாகனம் ஒன்று பின்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் கடந்து சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் பன்றிகளை பிக்-அப் வாகனத்தில் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிசிடிவியில் பதிவான பிக்-அப் வாகனத்தின் நம்பரை வைத்து போலீசார் தேடிவந்த நிலையில், விஜயமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (28) மற்றும் அவிநாசியைச் சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கலாமணியின் பட்டியில் இருந்த பன்றிகளைத் திருடி அவர்களுக்குத் தெரிந்த பண்ணையில் விற்று பணம் பார்த்தது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் விற்ற பண்ணையில் இருந்த 35 பன்றிகளையும், திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய பிக்-அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்டச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது. மற்றொரு குற்றவாளியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய யானை… காப்பாற்றத் துடித்த வனத்துறை… கடைசியில் நடந்த சோகம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (அக்.10) இரவு வயதான பெண் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, அணைப் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் மாட்டிக் கொண்டது. நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் சேற்றில் சிக்கிய யானையை பெல்ட் கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் சக்கரம் சேற்றில் சிக்கவே மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, சோர்ந்து போயிருந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். காலையிலிருந்து மாலை வரை போராடியும், யானையை சேற்றிலிருந்து மீட்க முடியவில்லை. சுமார் 35 வயதான யானை என்பதால், சேற்றிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டுள்ளது. மாலை நேரத்திற்குப் பிறகு அணைப் பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதி மீட்புப் பணிகளை கைவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர். இன்று காலையில் வந்து பார்த்தபோது, சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. யானையை எப்படியாவது உயிருடன் மீட்டு வனத்துக்குள் அனுப்பிவிடலாம் என்று பல மணி நேரங்களாகப் போராடியும் அது முடியாமல் போனது, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பின் அணையை ஒட்டிய வனப்பகுதியில் யானையை அடக்கம் செய்தனர்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“எப்படி எனக்கு துரோகம் பண்ணலாம்?” – தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது அம்மிக் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொன்ற கணவன்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்டோபர் – பவிலா தம்பதியினர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள், திருப்பூர் வஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.  மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்த கிறிஸ்டோபர், குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவி பவிலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்றிரவு (அக்.10) குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபர், ‘எப்படி எனக்கு துரோகம் பண்ணலாம்!’ என மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே வார்த்தைகள் முற்றி கடும் வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி பவிலாவின் தலையின் மீது, கிறிஸ்டோபர் அம்மிக் கல்லை போட்டுள்ளார். இதில்,மண்டை உடைந்து ரத்தம் கொட்டி பவிலா இறந்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்துவிட்டு வீரபாண்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த கிறிஸ்டோபர், எந்தவித சலனமும் இல்லாமல் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் விவரித்துள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியின் நடந்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரது தலையில் கல்லைப் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

8 ஆயிரம் ரூபாய் செல்போன் தகராறு… கல்லூரி மாணவனை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற +2 மாணவன்! – திருப்பூரில் பயங்கரம்  

திருப்பூர் ஏபிடி சாலை, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்பவரது மகன் ஸ்ரீ ஹரி (வயது 19). தாய் இல்லாததால் பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தவர், கொடுவாய் அருகேயுள்ள ஏ.ஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் மூலமாக இவருக்கு திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த 17 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பள்ளி மாணவன், தான் செல்போன் வாங்க உள்ளதாக ஸ்ரீஹரியிடம் தெரிவித்தபோது, ‘ஒரு ஐபோன் குறைந்த விலைக்கு வருகிறது. அதை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீஹரியிடம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பள்ளி மாணவன் ஐபோன் வாங்கியுள்ளான்.  ஆசையாய் வாங்கிய ஐபோன் வேலை செய்யாமல் பழுதாகி இருந்தது. எனவே, செல்போனை மாற்றிக் கொடுக்குமாறு ஸ்ரீஹரியிடம் கேட்டுள்ளார். செல்போனைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ஸ்ரீஹரி, பணத்தையோ மாற்றுச் செல்போனையோ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பள்ளி மாணவன் ஸ்ரீஹரியை சந்தித்து செல்போன் அல்லது பணத்தைக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஸ்ரீஹரி பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது எனச் சொல்லி, அந்த பள்ளி மாணவனை அடித்ததோடு, அசிங்கமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார்.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த பள்ளி மாணவனின் பெற்றோர், திருப்பூர் பேருந்து நிலையத்தில் சாலையோரம் செருப்புக் கடை வைத்துள்ளனர். இப்படியிருக்க, செல்போன் வாங்க சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, தன்னையும் அடித்த ஆத்திரத்தில் இருந்துவந்த பள்ளி மாணவன், ஸ்ரீஹரியை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டான். இதற்காக தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புதிய கறி வெட்டும் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு, நேற்று மதியம் (அக்.10) சுமார் 2 மணியளவில் ஸ்ரீஹரி வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது வீட்டினருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீஹரியை சந்தித்த பள்ளி மாணவன், சிறிதுநேரம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீஹரியை சரமாரியாக வெட்டத் தொடங்கினான். இதனைக் கண்ட ஸ்ரீஹரியின் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி மாணவன் வெட்டியதில் தலை, கை, கால், கழுத்து, வயிறு என பல இடங்களிலும் பலத்த காயமடைந்து ஸ்ரீஹரி கீழே சரிந்தார். இதையடுத்து பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், கேவிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஹரியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீஹரி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக கேவிஆர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவன் திருப்பூர் நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்தான்.  பணத் தகராறில் கல்லூரி மாணவன் ஒருவன் பள்ளி மாணவனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

லேப்டாப்பில் இருந்த அக்கா, தங்கையின் ஆபாசப் படங்கள்; கணவரை கம்பி எண்ண வைத்த மனைவி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப்பெண், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதால், குமாரபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் தங்கி, அங்குள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து வந்த இளங்கோ, அவ்வப்போது லீவ் போட்டு மனைவியைப் பார்ப்பதற்காக குமாரபாளையத்திற்கு வந்து சென்றுள்ளார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மனைவியை பார்ப்பதற்காக இளங்கோ குமாரபாளையம் வந்துள்ளார்.  அப்போது இளங்கோவின் லேப்டாப்பை பயன்படுத்துவதற்காக அவரது மனைவி திறந்து பார்த்தபோது, அதில் தன்னுடைய அக்கா மற்றும் தங்கையின் புகைப்படங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாக மாற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரின் செல்போனிலும் இந்த ஆபாச படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்.  ஆனால், இது எதுவுமே தனக்கு தெரியாது என்பதைப் போல காட்டிக்கொண்டவர், இந்த விஷயத்தை தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்கள் இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பட்டியலினத்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் ஆதிக்க சாதியினர் அட்டூழியம்; ஆதரவாக நின்ற அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த திங்களூர் அருகேயுள்ள பெரும்பாளி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு நீண்ட காலமாகவே பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டு வந்ததோடு, மயானத்திற்குச் செல்லும் வழியும் ஆதிக்கச் சாதியினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாராவது இறந்தால் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சடலத்தைச் சுமந்து சென்று, திங்களூர் ஊராட்சியில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் அடக்கம் செய்யும் அவல நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த சென்னி என்பவர் காலமானார். மயானத்தில் உடலத்தை அடக்கம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்ததால், இறுதிச் சடங்கின்போது இடையூறு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  மதியம் 1.30 மணியளவில் இறந்தவரின் உடலை ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கு திரண்ட 20-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் உடலை மயானத்திற்குள் எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்ற ரிதுபரன் என்பவர், போனில் யாரோ ஒருவரிடம் பேசிவிட்டு, பட்டியலின மக்களை நோக்கி, “இங்கதான் புதைப்பீங்களா… பண்ணாடிச்சிக்கிட்ட நாளைக்கு எதுக்கும் நீங்க வரக்கூடாது!” என அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நடக்கும்போது, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்புப் பிரிவு காவலர் கைலாஷ், நில வருவாய் ஆய்வாளர் அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி, கிராம உதவியாளர் கவிதா என அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அதிகாரிகள் கண்முன்னே, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் ரிதுபரனின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால், அங்கு நின்ற காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இப்பகுதி மக்களுக்காக ஊராட்சி நிதியிலிருந்து 2.90 லட்சம் செலவில் மயானத்திற்கு சுற்றுச்சுவர், போர்வெல், எரிமேடை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், சர்வே எண் 74/5-ல் உள்ள 0.17 ஹெக்டர் நிலம் ‘சர்க்கார் புறம்போக்கு மயானம்’ என கிராமக் கணக்கில் தாக்கலாகியுள்ளதோடு, இந்த மயானம் ‘அனைத்து மக்களுக்கும் பொதுவானது’ என பெருந்துறை வட்டாட்சியர் 17.02.2025-ல் அறிக்கை அளித்துள்ளார். இருப்பினும், அந்த மயானத்தைப் பயன்படுத்த விடாமல் ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். பொது மயானத்தில் சடலத்தைப் புதைக்க விடாமல் தடுத்து, பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்கொடுமையைத் தடுக்கத் தவறிய திங்களூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர் கைலாஷ், வருவாய் ஆய்வாளர் அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி, உதவியாளர் கவிதா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை அளிக்கக் கோரி மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பது, ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய அவமானம். இது வெறும் சம்பவம் மட்டுமல்ல; ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

துப்பாக்கியுடன் ரீல்ஸ்; செங்கோட்டையனுடன் தொடர்பு? – பாலியல் புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் புரோக்கரின் பகீர் பின்னணி! 

10 காரில் பந்தாவாகப் போய் மாஸ் காட்டுவது, பவுன்சர் புடை சூழ வலம் வருவது, அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக தன்னை ப்ரமோட் செய்வது என இன்ஸ்டாகிராமில் அலப்பறை செய்துவந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் வெற்றிவேல் என்பவர், பாலியல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.என்.பாளையம் ராமர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 33). இவர், ‘வி.கே. புரமோசன்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்ததுடன், குறைந்த விலையில் வீட்டுமனைகள், தோட்டங்களை வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தார். இவரது அலவலகத்தில் 10 பேர் பணியாற்றி வந்துள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி தனது அலுவலகத்தில் பணியாற்றும் 21 வயது இளம்பெண் ஒருவரிடம், “அக்கவுண்ட்ஸ் நோட்டுக்களை எடுத்துக்கிட்டு என்னோட வீட்டுக்கு வா!” என வெற்றிவேல் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்ற பெண் ஊழியரிடம் வெற்றிவேல் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து கூச்சலிடவே “வெளியே சொன்னால் நடப்பதே வேறு” என்று மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட அந்தப் பெண்ணிடம், அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் விசாரித்தபோது தான் விஷயம் வெளியே வந்தது. இருவரும் சேர்ந்து வெற்றிவேலிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் அநாகரிகமாகப் பேசியதுடன், அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேறச் சொல்லி தாக்க முற்பட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெற்றிவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெற்றிவேலின் பின்புலத்தை ஆராய்ந்த போது, ஷாக்கிங் ஆன பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்தன. பணம் சம்பாதிக்க பயிற்சி! வெற்றிவேல், 2 வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கத்தில் ‘பண்ணாரியம்மன் மென்ஸ் வேர்’ என்ற பெயரில் சிறியதாக ஒரு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமான மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சமீபகாலமாக ரியல் எஸ்டேட் புரோக்கராக வலம்வரத் தொடங்கியவர், குறைந்த விலையில் வீட்டுமனை, நிலம் வாங்கித் தருவதாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி பத்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்று, ஏராளமான கிரயங்களை முடித்து லட்சக் கணக்கில் கமிஷன் பார்த்துள்ளார்.   மேலும், தன்னைப்போலவே ரீல்ஸ் போட்டு பணம் சம்பாதிப்பது எப்படி? என 50-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி கொடுத்ததுடன், அவர்களிடம் தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரான்சைஸை எடுத்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனச் சொல்லி பணத்தைக் கறந்துள்ளார். ஆளுங்கட்சி அடையாளம்! இவ்வாறு, ரியல் எஸ்டேட் கமிஷன், பிரான்சைஸ் தொகை என குறுகிய காலத்தில் பல லட்சங்களைக் குவித்த வெற்றிவேல், தனது அலுவலகத்தில் விஜய் படம், காரில் தவெக கொடி என தன்னை ஒரு தவெக பிரமுகராக அடையாளப்படுத்தி வந்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனான சந்திப்பை ரீல்ஸ் போட்டு, தனக்கு மிகப்பெரிய அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதைப் போல சீன் காட்டியுள்ளார். செங்கோட்டையன் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக இருப்பதால் அவருடன் நெருக்கமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு, நில விவகாரங்களில் அதனைப் பயன்படுத்தி ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது. ‘கருணை வள்ளல்’ அவதாரம்! ரியல் எஸ்டேட் புரோக்கர், ஆளுங்கட்சி பிரமுகர் என்ற பில்டப்புகளைத் தாண்டி தன்னை ஒரு கருணை வள்ளலாகக் காண்பிப்பதற்காக, கோயில்களுக்கு நன்கொடை அளிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது போன்றவற்றையும் ரீல்ஸ் ஆகப் போட்டு, தன்னை ஓர் கலியுகக் கர்ணனாக புரமோட் செய்திருக்கிறார். மேலும், தன்னுடைய வீடியோவிற்கு கமெண்ட்டில் ஹார்ட்டின் விடும் பெண்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 2.5 செண்ட் நிலத்தை இலவசமாகத் தருவதாக விநோத ஆஃபர்களையும் அள்ளிவிட்டுள்ளார்.      இத்துடன் நிறுத்தாமல், மேலாடையின்றி ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, பவுன்சர் பாதுகாப்போடு வலம் வருவது, தன்னை ஒரு டான் போல பாவித்து துப்பாக்கியைக் காட்டி கெத்தாக ரீல்ஸ் போடுவது என இவரின் ரீல்ஸ் அட்ராசிட்டிகளின் பட்டியல் நீள்கிறது. இப்படிப்பட்ட பில்டப் ரீல்ஸ்களால் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக்கொண்ட வெற்றிவேலின் சுயரூபம் பெண் ஊழியரிடம் அத்துமீறிய விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது.   வெற்றிவேலின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆராய்ந்தால், வேறு ஏதாவது பெண்களிடமும் தவறாக நடந்துள்ளாரா? என்பது தெரியவரும்.  சிறிய துணிக்கடை வைத்திருந்தவர், மிகக் குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாகி செல்வச் செழிப்புடன் வலம் வந்தது எப்படி? என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்தால், வெற்றிவேல் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. 

Scroll to Top