8 ஆயிரம் ரூபாய் செல்போன் தகராறு… கல்லூரி மாணவனை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற +2 மாணவன்! – திருப்பூரில் பயங்கரம்  

திருப்பூர் ஏபிடி சாலை, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்பவரது மகன் ஸ்ரீ ஹரி (வயது 19). தாய் இல்லாததால் பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தவர், கொடுவாய் அருகேயுள்ள ஏ.ஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் மூலமாக இவருக்கு திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த 17 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பள்ளி மாணவன், தான் செல்போன் வாங்க உள்ளதாக ஸ்ரீஹரியிடம் தெரிவித்தபோது, ‘ஒரு ஐபோன் குறைந்த விலைக்கு வருகிறது. அதை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீஹரியிடம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பள்ளி மாணவன் ஐபோன் வாங்கியுள்ளான். 

ஆசையாய் வாங்கிய ஐபோன் வேலை செய்யாமல் பழுதாகி இருந்தது. எனவே, செல்போனை மாற்றிக் கொடுக்குமாறு ஸ்ரீஹரியிடம் கேட்டுள்ளார். செல்போனைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ஸ்ரீஹரி, பணத்தையோ மாற்றுச் செல்போனையோ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பள்ளி மாணவன் ஸ்ரீஹரியை சந்தித்து செல்போன் அல்லது பணத்தைக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஸ்ரீஹரி பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது எனச் சொல்லி, அந்த பள்ளி மாணவனை அடித்ததோடு, அசிங்கமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். 

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த பள்ளி மாணவனின் பெற்றோர், திருப்பூர் பேருந்து நிலையத்தில் சாலையோரம் செருப்புக் கடை வைத்துள்ளனர். இப்படியிருக்க, செல்போன் வாங்க சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, தன்னையும் அடித்த ஆத்திரத்தில் இருந்துவந்த பள்ளி மாணவன், ஸ்ரீஹரியை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டான். இதற்காக தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புதிய கறி வெட்டும் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு, நேற்று மதியம் (அக்.10) சுமார் 2 மணியளவில் ஸ்ரீஹரி வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது வீட்டினருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீஹரியை சந்தித்த பள்ளி மாணவன், சிறிதுநேரம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீஹரியை சரமாரியாக வெட்டத் தொடங்கினான். இதனைக் கண்ட ஸ்ரீஹரியின் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி மாணவன் வெட்டியதில் தலை, கை, கால், கழுத்து, வயிறு என பல இடங்களிலும் பலத்த காயமடைந்து ஸ்ரீஹரி கீழே சரிந்தார். இதையடுத்து பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். 

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், கேவிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஹரியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீஹரி உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக கேவிஆர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவன் திருப்பூர் நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்தான். 

பணத் தகராறில் கல்லூரி மாணவன் ஒருவன் பள்ளி மாணவனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிற செய்திகள்

Scroll to Top