மாவட்டம்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட கணவன்; துடிதுடித்த இறந்த மனைவி!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாமிலால் (20) – நமிதா (18) தம்பதியர், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதூரில் தங்கி, சத்தி – கோவை சாலையில் உள்ள எக்ஸல் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தனர். நேற்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக சத்தியமங்கலம் வந்தவர்கள், அதன்பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர். ஆட்டோவில் செல்லும்போது தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. இதில் கோபமடைந்த யாமிலால் அவரது மனைவி நமிதாவை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் நமிதாவுக்கு தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோவிலேயே தூக்கி போட்டுக்கொண்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நமீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாமிலாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி… அரிவாளால் வெட்டிய கணவன் – நாமக்கல்லில் நடந்த பகீர் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன் (41). இவரது மனைவி புனிதா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். புனிதா மோகனூர் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கார்த்திகேயன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சமீபத்தில் மனைவி புனிதாவுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் ராஜாஜி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கடந்த அக்.12-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது காரை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு புனிதாவைத் தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை புனிதாவின் அண்ணன் வேலுமணி (42) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் வேலுமணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலுமணியில் தலையில் ஓங்கி வெட்டியதோடு, தடுக்கச் சென்ற புனிதாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். படுகாயமடைந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

நகை, பணம் இல்லைன்னா விட்டுடுவோமா? – வீட்டு உரிமையாளர்களை அதிரவைத்த விசித்திர திருட்டு!

கரூர் மாவட்டம், புகழூர் நான்கு ரோடு அருகேயுள்ள மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (67). தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆண்டாள் (60). சென்னையில் வசிக்கும் தங்களது மகனைப் பார்ப்பதற்காக, செப்டம்பர் 27-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மகன் வீட்டில் 10 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அக்டோபர் 7-ம் தேதிதான் கரூருக்கு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்தபோது வீட்டின் காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் மெயின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீடு அலங்கோலமாகக் கிடந்ததோடு, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20,000 பணம் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வெளியே வந்து பார்த்தபோது தான் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த ஹூன்டாய் வென்யூ காரும் காணமல் போனது தெரியவந்திருக்கிறது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர். வீட்டினுள் புகுந்த கில்லாடித் திருடர்கள், பீரோ, அலமாரி என வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பணமோ, தங்க நகைகளோ சிக்கவில்லை. ‘வந்த மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சே!’ எனத் திருடர்கள் அப்செட்டில் கிளம்ப நினைத்த நேரத்தில்தான், அந்த வீட்டின் கதவருகே உள்ள சுவரில் மாட்டியிருந்த கார் சாவி அவர்களின் கண்ணில் பட்டுள்ளது. அந்தச் சாவியை எடுத்து வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் வெனியூ காரை, சொந்த காரைப் போல கேஷூவலாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் திருடப்பட்ட காரின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர். வீட்டில் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடையாமல், வீட்டிலிருந்த சாவியை வைத்து காரையே தூக்கிச் சென்ற இந்த விசித்திரத் திருட்டுச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை! – மனைவியின் பிரிவால் விபரீத முடிவு 

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). சேலம் லீ பஜாரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வித்யா. இந்தத் தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சாய் ரித்விக் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. குடிப்பழக்கம் உள்ள விஜயகுமார், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, ஒரு மாதத்திற்கு முன்பு வித்யாவிடம் இருந்த குழந்தையை விஜயகுமார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆட்டையாம்பட்டியில் வசிக்கும் தனது தந்தை மற்றும் சகோதரிகளின் பராமரிப்பில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், விஜயகுமார் தனது மகன் சாய் ரித்விக்கை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த விஜயகுமார், நள்ளிரவு சுமார் 12 மணியளவில், தனது பெரியப்பா மகள் ரூபாஸ்ரீக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாததால் குழந்தையுடன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்ததுடன், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மனைவி வித்யாவையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் பதறிப்போய் விஜயகுமாரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தனர். அதற்குள் அவர் மகுடஞ்சாவடி – வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கூட்ஸ் ரயில் முன், தன் பிஞ்சு மகனுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த கோர விபத்தில் விஜயகுமாரும், ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை சாய் ரித்விக்கும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஈரோடு ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பிஞ்சு மகனுடன் சேர்ந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்டம், விளையாட்டுச் செய்திகள்

அரசு மருத்துவர்கள் அலட்சியம்… பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை – தேசியக் கொடியுடன் தர்ணா செய்த தந்தை! 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). கோவை தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக பிரியதர்ஷினி கடந்த அக்டோபர் 7-ம் தேதி உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.  குழந்தையின் எடை 4 கிலோ அளவிற்கு இருந்ததால், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனக்கருதி, சிசேரியன் முறையில் குழந்தையை எடுக்குமாறு மருத்துவர்களிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர்கள் காத்திருந்து சுகப் பிரசவம் செய்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு, அதன் வலது கையில் பிரச்னை இருப்பதையும், கையில் உணர்வுத் திறன் இல்லாததையும் சந்தோஷ்குமார் கவனித்துள்ளார்.  பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், உரிய சிகிச்சை அளித்து அதனை சரிசெய்யாதது ஏன் எனவும் சந்தோஷ்குமார் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை தரப்பிலிருந்து சரியான விளக்கம் கொடுக்காமல் மழுப்பியுள்ளனர். ஒருமாதத்திற்குப் பிறகு தான் குழந்தையின் பிரச்னை குறித்து என்ன செய்யலாம் என தெரியவரும் என மருத்துவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்பு தேசியக் கொடியுடன் தரையில் அமர்ந்து, தன்னுடைய பச்சிளம் குழந்தைக்கு உண்டான பிரச்சினைக்கு நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த உடுமலைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய டிரைவர்; கொடூரமாகத் தாக்கி கோமாவில் தள்ளிய கணவன்

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் கோகுல்ராஜ் (34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் தேவராஜூக்கு தெரிய வந்துள்ளது. அதையடுத்து தன்னுடைய மனைவியைக் கண்டித்தவர், கோகுல்ராஜையும் நேரில் சந்தித்து ‘இனிமேல் என்னுடைய மனைவிக்கு நீ மெசேஜ் அனுப்பினால் நடப்பதே வேறு’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், அதன்பிறகும் கோகுல்ராஜ், தேவராஜின் மனைவிக்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தேவராஜ், அக்.11-ம் தேதி தனது நண்பர்களான நந்தகுமார் (19), பிரசாந்த் (23), தரனேஷ் (23) ஆகியோருடன் சென்று, தனியாக பேச வேண்டுமெனச் சொல்லி கோகுல்ராஜை அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து பேச்சு மூச்சற்று கீழே விழுந்த கோகுல்ராஜை, தூக்கி வந்து அவரது வீட்டினருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.  தகவலறிந்த வந்த கோகுல்ராஜின் குடும்பத்தினர், அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, கோகுல்ராஜ் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக கோகுல்ராஜின் தந்தை சிவராஜ், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவராஜ், நந்தகுமார், பிரசாந்த், தரனேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்… ‘கூகுள்பே’ மூலம் சிக்கியதன் பின்னணி! 

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவர்களுக்கான டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் நாமக்கல் பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ‘நாமக்கல்லுக்கு வந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம்’ என நிவாஸ் ஆசை காட்டவே, அதை நம்பி கபிலர் மலையைச் சேர்ந்த அந்த இளைஞர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திற்கு வந்த அவரை பைக்கில் பிக்கப் செய்துகொண்ட நிவாஸ், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாக்கியுள்ளார். அவரை மிரட்டி அவரது செல்போனில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.7 ஆயிரத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்தக் கும்பல், இதே செயலியைப் பயன்படுத்தி நாமக்கல் அருகேயுள்ள வி.ஜி.பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி வலை வீசியது. அக். 9-ம் தேதி அந்த இளைஞரையும் நாமக்கல்லுக்கு வரவழைத்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, ரூ.10 ஆயிரத்தை பறித்தது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞரும் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பணம் பறித்த கும்பலின் கூகுள்பே விவரங்களை வைத்து தேடினர். இதில், பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19), தீபக் (20), ஜீவ பாரதி (20) மற்றும் சேந்தமங்கலம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த விஜய் (20) ஆகிய நால்வரும் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸ் விசாரணையின் போது, கைதான நால்வரும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்ததும், உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், செய்திகளில் வந்த இதேபோன்று ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களைப் பார்த்து, தாங்களும் இப்படிச் செய்ததாகத் தெரிவித்துள்ளனர். நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“யார்கிட்டதான் போன் பேசுவியோ?” – கண்டித்த தாய்; இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவரது கணவர் சின்னப்பையன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் நதியா (வயது 19), பெரியசோரகையில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நதியாவுக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உள்ளனர். ராஜாத்தி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த 10-ந் தேதி வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றிருந்த ராஜாத்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது நதியா வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் ராஜாத்தி, “லீவ் நாளிலாவது வீட்டில் வேலைகளைச் செய்யக்கூடாதா? ஆடு, மாடெல்லாம் தீவனம் இல்லாம இருக்கு… அப்படி நாள் முழுக்க யார்கிட்டதான் போன் பேசுவியோ?” என நதியாவைக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதன்பின், நதியா வீட்டின் உள் அறையில் படுக்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை 7.30 மணி ஆகியும் அவர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. தாய் ராஜாத்தி அறைக் கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே பார்த்தபோது, நதியா வீட்டின் கூரையில் இருந்த இரும்பு ஆங்கிளில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு  அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து நதியாவை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நதியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு தூக்கிய ‘கில்லாடி திருடர்கள்’! – போலீசிடம் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் கலாமணி. இவர் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த செப்.16-ம் தேதி இரவு வழக்கம்போல பன்றிகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து கலாமணி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். செப்.17ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் பட்டியின் அருகே பிக்-அப் வாகனம் ஒன்று பின்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் கடந்து சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் பன்றிகளை பிக்-அப் வாகனத்தில் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிசிடிவியில் பதிவான பிக்-அப் வாகனத்தின் நம்பரை வைத்து போலீசார் தேடிவந்த நிலையில், விஜயமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (28) மற்றும் அவிநாசியைச் சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கலாமணியின் பட்டியில் இருந்த பன்றிகளைத் திருடி அவர்களுக்குத் தெரிந்த பண்ணையில் விற்று பணம் பார்த்தது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் விற்ற பண்ணையில் இருந்த 35 பன்றிகளையும், திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய பிக்-அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்டச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது. மற்றொரு குற்றவாளியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய யானை… காப்பாற்றத் துடித்த வனத்துறை… கடைசியில் நடந்த சோகம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (அக்.10) இரவு வயதான பெண் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, அணைப் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் மாட்டிக் கொண்டது. நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் சேற்றில் சிக்கிய யானையை பெல்ட் கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் சக்கரம் சேற்றில் சிக்கவே மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, சோர்ந்து போயிருந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். காலையிலிருந்து மாலை வரை போராடியும், யானையை சேற்றிலிருந்து மீட்க முடியவில்லை. சுமார் 35 வயதான யானை என்பதால், சேற்றிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டுள்ளது. மாலை நேரத்திற்குப் பிறகு அணைப் பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதி மீட்புப் பணிகளை கைவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர். இன்று காலையில் வந்து பார்த்தபோது, சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. யானையை எப்படியாவது உயிருடன் மீட்டு வனத்துக்குள் அனுப்பிவிடலாம் என்று பல மணி நேரங்களாகப் போராடியும் அது முடியாமல் போனது, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பின் அணையை ஒட்டிய வனப்பகுதியில் யானையை அடக்கம் செய்தனர்

Scroll to Top