தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

விக்ரம் வீடியோ… ஈரோடு பண்ணை… அடுத்தடுத்து சிக்கிய அரிய விலங்குகள்! 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரிய வகை ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) குரங்குடன் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் கேசவநாதனிடம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை என நடிகர் விக்ரம் மற்றும் ரங்கநாதன் தரப்பில் வனத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் பெருந்துறை பண்ணையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெருந்துறை பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகை குரங்குகளை வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் தொழிலதிபர் கேசவநாதனிடம் இல்லாதது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த 3 லார் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகக் தொழிலதிபர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட 7 ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது பண்ணையிலேயே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஒரு பெரும் நெட்வொர்க் சிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோட்டுக்கு அடித்தது ஜாக்பாட்! ₹130 கோடி முதலீடு செய்யும் தனியார் நிறுவனம்! 

பிரபல விளையாட்டு மற்றும் ‘ஆக்டிவ்வேர்’ உடைகள் உற்பத்தி நிறுவனமான டெக்னோஸ்போர்ட் (TechnoSport), ஈரோட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசுடன் ₹130 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் கணிசமாக உயருவதுடன், ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் தனது ஆடைகளின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 25 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெக்னோஸ்போர்ட், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் மாடலை பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 66 பிரத்யேக ஷோரூம்கள் மூலம் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், வரும் 2027 நிதியாண்டிற்குள் தனது வருவாயை ₹1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய ₹130 கோடி விரிவாக்க முதலீடு, கொங்கு மண்டலத்தின் ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, தலைப்புச் செய்திகள்

26 ஆண்டுகள் ‘டிமிக்கி’… காட்டிக் கொடுத்த கைரேகை: போலீஸில் மாட்டிய ‘பில்டர்’ கைதியின் கதை!

1995-ல் நடந்த ரூ.1 கோடி கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், 26 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ரிஷி சேத்தி என்பவரை கடத்தி, அவரது குடும்பத்திடம் ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்ட வழக்கில் அமித் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். போலீசாரின் பொறி மூலம் அவர் பிடிபட்டதுடன், கடத்தப்பட்ட நபரும் பத்திரமாக மீட்கப்பட்டார். 1999-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டின்போது கிடைத்த ஒரு மாத இடைக்கால ஜாமீனை பயன்படுத்தி தப்பியவர், அதன் பிறகு 26 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்துள்ளார்.  தலைமறைவான பிறகு பழைய அடையாளத்தை முற்றிலும் மறைத்து, புதிய பெயரில் டேராடூனில் கட்டிட ஒப்பந்ததாரராக மாறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அமித் யாதவ். சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் இல்லாததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்த நிலையில், 1999-ம் ஆண்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை போலீசார் மீண்டும் கையில் எடுத்தனர். அந்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 13-ம் தேதி டேராடூனில் அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்துள்ளனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பெயர், வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி ‘புதிய மனிதராக’ வாழ்ந்த ஆயுள் கைதியின் ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது!

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

ரூ.5.54 கோடி முதல்வர் அலுவலகம்… டெண்டருக்கு முன்பே வேலை தொடங்கியதா?

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும் முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

கோவளத்தில் கூடும் தென் மாநிலங்கள்… விஜய்யை சந்திக்கிறாரா அமித்ஷா?

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென்மாநில முதல்வர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சனைகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இக்கூட்டத்தின் ஊடே மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் இடையே தனியாகவோ அல்லது சந்திப்பின் போதோ ஆலோசனைகள் நடைபெறக்கூடும் என்ற அரசியல் பேச்சுக்கள் மேலெழுந்துள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இம்மாநாடு தேசிய அளவிலும், மாநில அரசியல் தளத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா, தலைப்புச் செய்திகள்

“மோசமான படம்” என்ற ஒரே வார்த்தையால் நடந்த அதிசயம்! – ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடிக்கு எகிறிய வசூல்

“இது 2026-ம் ஆண்டின் மோசமான படமாக இருக்கலாம்!” — சீனாவில் வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பற்றி ரசிகர்கள் வைத்த கமெண்ட் இதுதான். ஆனால், அதுவே அந்தப் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான ‘நியூ லாய்’ (Niu Lai) திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் — இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது. நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே டிக்கெட் வாங்கியிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதன்பிறகு கதாபாத்திரங்களின் அசைவுகள், அனிமேஷன் தரம், குரல், கதை என அனைத்தையும் ரசிகர்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர். “மாணவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது”, “AI-யைவிட மோசம்” என விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வமும் அதே வேகத்தில் அதிகரித்தது. “இவ்வளவு மோசமா? அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வமே திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அழைத்து வந்தது. அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்! Maoyan வசூல் தரவுகளின்படி, தற்போது ‘நியூ லாய்’ 1.49 கோடி யுவானைத் தாண்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ.19–20 கோடி வசூலைக் குவித்துள்ளது. அதாவது, வெறும் ரூ.1 லட்சத்தில் தொடங்கிய வசூல் சில நாட்களில் ரூ.20 கோடியை நெருங்கியிருக்கிறது! பிரம்மாண்ட படங்களுடன் வசூல் பட்டியலில் இந்தப் படத்தின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. அதைவிட ஆச்சரியம், இந்த 86 நிமிட அனிமேஷன் படத்தை உருவாக்கியது வெறும் இருவர் மட்டுமே — சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங். தாய்–மகன் எனக் கூறப்படும் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் உழைத்து, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளை தாங்களே கவனித்துள்ளனர். நல்ல படம் என்ற விளம்பரம் தோல்வியடைந்த நிலையில், “மோசமான படம்” என்ற விமர்சனமே ஒரு படத்தை ரூ.20 கோடி வசூல் செய்ய வைத்திருக்கிறது! சினிமாவில் சில நேரங்களில் எதிர்மறை விளம்பரம்கூட எவ்வளவு பெரிய ஆயுதமாக மாறும் என்பதற்கு ‘நியூ லாய்’ ஒரு வித்தியாசமான உதாரணமாகியுள்ளது.

Scroll to Top