Author name: admin

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“மூனு வாரத்துல அப்படி என்னடி லவ்வு..?” – காவல் நிலையத்தில் காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்! 

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (23). புஷ்பா ஜங்ஷன் பகுதியில் உள்ள செல்போன் ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த ஷோரூமில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் சாலையைச் சேர்ந்த மதுஸ்ரீ (20) என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த 3 வார காலத்திற்குள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருப்பூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, தங்களது மகளைக் காணவில்லை என மதுஸ்ரீயின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேவேளையில், மதுஸ்ரீ தனது காதலர் உதயகுமாருடன் திருமணக் கோலத்தில் பாதுகாப்பு கேட்டு அதே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதைக்கண்டதும் அங்கிருந்த மதுஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ‘மூனு வாரத்துல உனக்கு அப்படி என்னடி லவ்வு?’ என ஆவேசமாகக் கேட்டபடி போலீசார் முன்பாகவே காதல் ஜோடியைச் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதனைக்கண்டு பதறிய போலீசார், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து காதல் ஜோடியை மீட்டு, பாதுகாப்பாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் மதுஸ்ரீயின் பெற்றோர், திருமணத்தை ஏற்க மறுத்ததால் உதயகுமாருடன் அனுப்பி வைத்தனர். காவல் நிலைய வளாகத்தில், போலீஸ் கண்முன்னே காதல் ஜோடி தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஆந்திர சிறையில் நட்பு… ரயிலில் கஞ்சா கடத்தி போலீசில் சிக்கிய கூட்டாளிகள்!

ஆந்திராவிலிருந்து ரயில் மூலமாக ஈரோட்டிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் நின்ற இடத்தைச் சுற்றி சோதனை செய்தனர்.  அப்போது ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே முட்புதரில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 111 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கறிக்காடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (29) மற்றும் சேலம் மாவட்டம் தின்னப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பதும், ரமேஷ் பெருந்துறையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களாக மாறியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து ஈரோட்டில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சூர்யா, ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘டார்ச்சர்’ செய்த கள்ளக்காதலி… 15 வயது மகளுடன் சேர்ந்து கதையை முடித்த கள்ளக்காதலன்!

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (52). இவரது மனைவி கீதா (38). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கோவையைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடன், கீதா திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவர் கணேசன் முதல் மாடியில் வசிக்க, கீதாவும் மூர்த்தியும் தரைத்தளத்தில் வசித்துள்ளனர். இதில், கீதா கர்ப்பமடைய 7வது மாதத்திலேயே மூர்த்தி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மூர்த்தி மூலம் கீதாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தற்போது 15 வயது ஆகிறது. இதற்கிடையே, வட்டித் தொழில் செய்துவந்த கீதா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் கதிரவன் (36) என்பவருக்கு கடன் கொடுத்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  காதலன் கதிரவன் அவசரச் செலவுக்கு என பணம் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக 27.5 பவுன் நகைகளை கீதா அள்ளிக் கொடுத்துள்ளார். கீதாவின் செல்வச் செழிப்பான பின்னணியை நன்கு அறிந்த கதிரவன், அந்த நகைகளை எல்லாம் விற்று ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார்.  ஒருகட்டத்தில் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டு கீதா தொந்தரவு செய்ய ஆரம்பித்ததோடு, வாய்க்கு வந்தபடி அசிங்கமாகத் திட்டியுள்ளார். கடந்த 2023-ல் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கதிரவன் கீதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து கீதா கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாரளித்து, கதிரவனை சிறையில் தள்ளியுள்ளார். ஆனால், அடுத்த சில நாட்களில் கீதாவே கதிரவனை ஜாமீனில் எடுத்துள்ளார்.  கதிரவனை ஜாமீனில் வெளியே எடுத்த பிறகும் நகைகளைக் கேட்டு கீதா டார்ச்சர் கொடுக்க, கதிரவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். ஆனால், அவரை விடாமல் தேடிச்சென்ற கீதா பொது இடங்களில் வைத்து அசிங்கமான வார்த்தைகளால் பேசி கதிரவனை அவமானப்படுத்தி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கதிரவன், கள்ளக்காதலி கீதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது மெக்கானிக் நண்பரான சண்முகவடிவேலுவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். சண்முகவடிவேலுவின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தில் கீதாவின் நகைகள் இருப்பதாகவும், நகைகளை திருப்பித் தருவதாக குடிமங்கலம் அழைத்துச் சென்று அங்குள்ள பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவர் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறி தப்பித்து விடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, கீதாவின் கடுமையான சுபாவத்தினால் கடும் மன உளைச்சலில் இருந்த அவரது 15 வயது மகளிடம், ‘உன்னுடைய அம்மா இல்லாவிட்டால் அவரிடன் டார்ச்சர் இல்லாமல் நீ ஜாலியாக இருக்கலாம். விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்’ என ஆசைகாட்டி சம்மதிக்க வைத்துள்ளனர். தங்கள் திட்டப்படி, குடிமங்கலத்தில் உள்ள நண்பன் சண்முகவடிவேலுவிடம் இருந்து நகைகளை வாங்கித் தருவதாகக் கூறி, நவம்பர் 16ஆம் தேதி கீதாவையும், அவரது 15 வயது மகளையும் கதிரவன் காரில் கூட்டிச் சென்றுள்ளார். கீதாவிற்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவரை இரவுக் காட்சிக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சினிமா முடிந்தபிறகு நள்ளிரவில் குடிமங்கலத்திற்குக் கிளம்பியுள்ளனர். அதிகாலையில் குடிமங்கலம் அருகேயுள்ள பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு காத்திருந்த சண்முகவடிவேலுவுடன் சேர்ந்து கீதாவின் தலையில் கல்லால் தாக்கி, வாய்க்காலில் தூக்கி வீசியுள்ளனர். வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கீதாவை அரசூர் ஷட்டர் அருகே மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டார் என நாடகமாடியுள்ளனர். கீதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கீதாவின் உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குடிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேதப் பரிசோதனையின் போது கீதாவின் தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கதிரவன், சண்முகவடிவேலு மற்றும் கீதாவின் 15 வயது மகள் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து மூவரையும் தீவிரமாக விசாரித்ததில், கீதாவை வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் கதிரவன், அவரது நண்பர் சண்முகவடிவேலு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கீதாவின் 15 வயது மகள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பெற்ற தாயக் கொலை செய்ய அவரது மகளே துணை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘கருப்புசாமி கனவில் வந்து கருணாநிதி சிலையை உடைக்கச் சொன்னார்’… சிலையை உடைத்தவரின் ‘குபீர்’ வாக்குமூலம்!

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கலைஞர் சிலை, மொடக்குறிச்சியில் உள்ள கலைஞர் சிலை மற்றும் அதன் கீழே உள்ள ‘அன்பகம் உதயம்’ இளைஞரணி அலுவலகம், ஈரோடு முனிசிபல் காலனி கலைஞர் சிலை கீழேயுள்ள நூலகக் கட்டிடம் மற்றும் மணல்மேட்டில் உள்ள திமுக அலுவலகம் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று (நவ.24) அதிகாலை பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இந்தச் செயலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகளுடன் திமுகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் மொடக்குறிச்சியில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகேயுள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஹரி விக்னேஷ் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நேற்றிரவு (நவ.23) மது போதையில் தனது வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் அவர் சேதப்படுத்தியதும், அவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஹரி விக்னேஷின் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருமுறை சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டதால், ஹரி விக்னேஷ் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.  இந்நிலையில், வீட்டினருகே உள்ள ஒரு தனியார் ரீவைண்டிங் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த மறுநாளே, சக ஊழியர்களுக்கு சிறிய கிப்ட் பாக்ஸ்களை ஹரி விக்னேஷ் கொடுத்துள்ளார். அதை பிரித்துப் பார்த்தபோது அதனுள் ‘சூடம்’ இருந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற விசித்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், நிறுவனத்தினர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனால், கடந்த 4 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இப்படியான சூழலில் தான் கலைஞர் சிலையையும், திமுக அலுவலகத்தையும் உடைத்து போலீசில் சிக்கியுள்ளார். அதன்பிறகு தான் ஹரி விக்னேஷ் நம்மிடம் சிக்கவில்லை, அவரிடம் தான் நாம் வசமாகச் சிக்கியுள்ளோம் என போலீசாரே நொந்துபோகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. கலைஞர் சிலையை எதற்காக உடைத்தாய் என்று போலீசார் கேட்க, ‘கருப்புசாமி தான் கனவில் வந்து கருணாநிதி சிலையை உடைக்கச் சொன்னார்’ எனச் சொன்னதோடு,  போலீசார் கேட்ட பல கேள்விகளுக்கும் அவர் சொன்ன கோக்குமாக்கான பதில்களைக் கேட்டு போலீசாரே ஆடிப்போயுள்ளனர். இதையடுத்து ஹரி விக்னேஷை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது மனநிலை குறித்து பரிசோதித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பூட்டைத் திருடும் புது டிஸைன் திருடர்கள் – திருப்பூரில் நடந்த சுவாரஸ்யம்!

திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தை அடுத்த வலசுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் அப்பகுதியில் சொந்தமாகப் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி இவரது நிறுவனத்திற்கு வந்த நபர் ஒருவர் ‘கம்பெனியில் ஏதாவது வேலை கிடைக்குமா?’ எனக் கேட்டுள்ளனர். இப்போதைக்கு ஆட்கள் தேவையில்லை என கருப்புசாமி சொல்ல, வேலை கேட்டு வந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளனர்.  அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, நிறுவனத்தின் வெளிப்புறக் கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பூட்டு காணாமல் போனதைக் கண்டு சந்தேகமடைந்த கருப்புசாமி, நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் நிறுவனத்தின் முன்பு வந்து இறங்குவதும், அதில் ஒருவர் தன்னிடம் வந்து வேலை கேட்பது போலப் பேச்சுக் கொடுத்துக் கவனத்தைத் திசைதிருப்பிய நேரத்தில், இன்னொருவர் கேட்டில் தொங்கிய பூட்டை நைசாகக் கழற்றி எடுத்துக்கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது. இதேபோல, அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் கேட்டில் இருந்த பூட்டையும் இந்தக் கும்பல் திருடிச் சென்றுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  திருடர்களிடம் இருந்து பாதுகாக்க உபயோகப்படுத்தும் பூட்டையே திருடிக்கொண்டு போனால் என்ன செய்வது என திருப்பூர்வாசிகள் புலம்புகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சரக்கு டிரைவரால் ‘சரக்கு லாரி’ கவிழ்ந்து விபத்து!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது ஸ்விஃப்ட் காரில் சென்று கொண்டிருந்தார்.  குண்டடம் காவல் நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, பல்லடத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று, மூர்த்தியின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணித்த மூர்த்தி உட்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர். கார் மீது மோதிய அதிர்ச்சியில் நிற்காமல் தப்பிக்க முயன்ற டிரைவர், லாரியை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதாமல் இருக்க, லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் லாரியை ஓட்டிவந்த சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த டிரைவர் முத்துப்பாண்டி (54) படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மதுபோதையில் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

தாய், இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து பலி;  பிரசவத்தில் நடந்த விபரீதம் – கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மீது பகீர் புகார்!  

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). வெளிநாட்டில் பணியாற்றி வரும் இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா இரட்டைக் குழந்தைகளைக் கருவுற்றிருந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் மாலினியே முன்னின்று சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடுத்து மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. இதற்கிடையே, பிரசவத்தின்போதே பிரியங்கா சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலைக்குச் சென்றார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்குத் தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பிரசவத்தின்போது சுயநினைவை இழந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தாய் பிரியங்காவும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 12 வருடக் காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவான சூழலில், தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகள் என மூன்று உயிர்களும் அடுத்தடுத்துப் பறிபோன சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் வள்ளிப்பட்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவின் கருத்தரித்தல் மருத்துவமனையின் அலட்சியமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர் மாலினி மீதும் விசாரணை நடத்தி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியர் அதிரடி கைது! 

ஈரோடு – பெருந்துறை சாலை குமலன்குட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் விஜயசாரதி (45). இவர், கடந்த நவ.19-ல் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் பள்ளியின் தலைமையாசிரியர் தங்கமணியிடம் சென்று தங்களுக்கு நடந்தவற்றை விவரித்துள்ளனர். என்ன நடந்தது? என மாணவிகளிடம் அவர் முழுமையாக விசாரித்த பிறகு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் விஜயசாரதியை அழைத்து விசாரித்துள்ளனர். இதற்கிடையே, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்துள்ளனர். இதில், ஆசிரியர் விஜயசாரதியின் அத்துமீறல்கள் உறுதியானது. அதன்பின்னர், விஜயசாரதியை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பெருந்துறை ஒரு கோடி கொள்ளை வழக்கு: 4 பேர் அதிரடி கைது! – ரூ.70 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பவானி ரோட்டைச் சேர்ந்த கார் டீலர், ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள்குமார் மற்றும் காஞ்சிக்கோயில் ரோடு தாய் நகரைச் சேர்ந்த அவரது நண்பர் சிவராஜ் ஆகியோர் காஞ்சிக்கோயில் ரோட்டில் சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனர். இதற்காக ‘ஸ்ரீ சாய்’ என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கி நன்கொடை திரட்டி வந்த நிலையில், ரூ. 1 கோடி ரொக்கம் கொடுத்தால் வங்கிக் கணக்கிற்கு ரூ. 1.15 கோடியாக மாற்றித் தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த புரோக்கர் கும்பல் ஒன்று ஆசை வார்த்தை காட்டியுள்ளது. இதை நம்பி கடந்த அக்டோபர் 28-ம் தேதி கோயில் கட்டும் இடத்தில் ரூ. 1 கோடி ரொக்கத்தைக் கொடுத்தபோது, அந்த புரோக்கர் கும்பல் ஒரு கோடி ரூபாயுடன் காரில் தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி 6 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கம், 2 கார் மற்றும் 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை வழக்கில், ஒரு கோடி ரூபாயுடன் தலைமறைவான முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் உப்பிலிபாளையம் ரோலக்ஸ் (எ) விக்னேஸ்வரன் (30), பல்லடம் கணபதிபாளையம் கனகு (எ)கனகராஜ் (25), திருப்பூர் நொச்சிபாளையம் ரோடு 2-வது வீதி விஷ்ணு (எ) வைஷ்ணவ் (28), திருப்பூர் வலையன்காடு விஓசி நகர் ஷாருக்கான் (29) ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூ. 70 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்… திருமண விருந்துக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சேர்ந்தவர் பூ வியாபாரி முஜிபூர் ரஹ்மான். இவரது மகளுக்கும், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று (நவம்பர் 19) மணமகன் ஊரான கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் ‘மறுவீட்டு விருந்து’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த விருந்தில் பங்கேற்பதற்காகப் பழனி மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மானின் உறவினர்கள் 24 பேர் ஒரு டூரிஸ்ட் வேனில் கொடைக்கானலுக்குச் சென்றனர். பழனியைச் சேர்ந்த சிலம்பரசன் (40) வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.  விருந்தை முடித்துக்கொண்டு, நேற்றிரவு அனைவரும் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரே வரும் பாதை சரியாகத் தெரியாமல் சவரிக்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த சுமார் 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனி மற்றும் கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி 100 அடி பள்ளத்திற்குள் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், கடும் குளிர் மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததாலும் பெரும் போராட்டத்திற்குப் பிறகே விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில், மணமகளின் தாத்தா நிஜாமுதீன் (75), பெரியப்பா அப்பாஸ் (61) மற்றும் சித்தப்பா மகன் ஷேக்பரித் (25) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Scroll to Top