ஆந்திராவிலிருந்து ரயில் மூலமாக ஈரோட்டிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் நின்ற இடத்தைச் சுற்றி சோதனை செய்தனர்.
அப்போது ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே முட்புதரில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 111 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கறிக்காடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (29) மற்றும் சேலம் மாவட்டம் தின்னப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பதும், ரமேஷ் பெருந்துறையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களாக மாறியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து ஈரோட்டில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சூர்யா, ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.