தாய், இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து பலி;  பிரசவத்தில் நடந்த விபரீதம் – கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மீது பகீர் புகார்!  

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). வெளிநாட்டில் பணியாற்றி வரும் இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா இரட்டைக் குழந்தைகளைக் கருவுற்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர் மாலினியே முன்னின்று சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடுத்து மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. இதற்கிடையே, பிரசவத்தின்போதே பிரியங்கா சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலைக்குச் சென்றார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்குத் தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், பிரசவத்தின்போது சுயநினைவை இழந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தாய் பிரியங்காவும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 12 வருடக் காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவான சூழலில், தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகள் என மூன்று உயிர்களும் அடுத்தடுத்துப் பறிபோன சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் வள்ளிப்பட்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவின் கருத்தரித்தல் மருத்துவமனையின் அலட்சியமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர் மாலினி மீதும் விசாரணை நடத்தி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 thought on “தாய், இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து பலி;  பிரசவத்தில் நடந்த விபரீதம் – கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மீது பகீர் புகார்!  ”

  1. Subramanian Ramasamy

    It is not fair to blame the doctor for what happened to the patient. In any major surgery the patient may develop complications ascribable to various reasons.It is but a tragedy.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top