இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளம் ‘கட்’! அசாம் அரசின் அதிரடி எச்சரிக்கை!

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். முதல் மனைவியை கைவிட்டு, விவாகரத்து பெறாமலேயே மற்றொரு பெண்ணுடன் திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முதல் மனைவி அரசிடம் விண்ணப்பித்தால், பிடித்தம் செய்யப்படும் 20 சதவீத சம்பளம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், திருமண விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலத்திலும் இந்த பிடித்தம் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அசாம் அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே அசாமில் பலதாரத் திருமணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மனைவி ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற பாதுகாப்பை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

பிற செய்திகள்

Scroll to Top