TW Exclusive

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: முட்டி மோதும் மூவர்; திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ரேஸில் முந்துவது யார்?

ஈரோடு மாவட்ட திமுகவில் கட்சி ரீதியாக பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் தற்போது ‘ஈரோடு வடக்கு மாவட்டம்’ ஆக உள்ளது. இதன் மாவட்டச் செயலாளராக என்.நல்லசிவம் இருக்கிறார். கட்சி மறுசீரமைப்பில், இரண்டு தொகுதிளை ஒரு மாவட்டமாகப் பிரிப்பது என்ற அடிப்படையில் பவானி, அந்தியூர் தொகுதிகள் ‘ஈரோடு வடக்கு மாவட்டம்’ ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கும் இந்தப் பகுதிகள், தற்போது வரை அதிமுகவின் வலுவான கோட்டையாகவே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக அலைக்கு மத்தியிலும் பவானி, அந்தியூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதே அதற்கு சாட்சி. இப்பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சரான கே.சி.கருப்பணனை எதிர்த்து வலுவாக அரசியல் செய்ய ஆட்கள் இல்லாதது, திமுக மாவட்டச் செயலாளரான நல்லசிவம் மீது சொந்தக் கட்சியினரிடையே நிலவும் அதிருப்தி ஆகியவையே இந்தத் தொகுதிகளில் திமுகவின் பின்னடைவுக்குக் காரணமாக இருக்கிறது. இப்படியான சூழலில், திமுகவின் மறுசீரமைப்பில் மாவட்டச் செயலாளராகி கட்சிக்கு வலுசேர்க்கப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இங்கு ரேஸில் இருக்கும் மூன்று பேரில் முந்தப் போவது யார்? முதலாவது, பவானி வடக்கு ஒன்றியச் செயலாளரான கே.ஏ.சந்திரசேகர். இவரின் தந்தை 1964ஆம் ஆண்டே பவானி குருப்பநாயக்கன்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தவர். மொழிப்போர் தியாகியும் கூட. அதேபோல, இவரது தாயார் பவானி வடக்கு ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளராக இருந்தவர். இப்படி பாரம்பரியமான திமுக குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர், தன்னுடைய 13ஆவது வயதிலிருந்து திமுகவில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். 24 ஆண்டுகளாக ஈரோடு திமுக இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் பவானி தொகுதியின் வேட்பாளராகவும் களம் கண்டார். இரண்டாம் நபர், அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். இவருக்கு 2026 தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது அந்தியூர் மத்திய ஒன்றியச் செயலாளாராக உள்ள வெங்கடாசலத்திற்கு 66 வயதாகிறது. புதிய விதிகளின்படி ஒன்றியச் செயலாளர் பதவியும் பறிபோவதால், “இந்த ஒரே ஒருமுறை மட்டும் மாவட்டச் செயலாளர் வாய்ப்பு கொடுங்கள்” என மிகத் தீவிரமாக தலைமையிடத்தில் பேசி வருகிறாராம். எம்.எல்.ஏவாக இருந்தபோது அந்தியூர் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்தவர் என்பதும், தொகுதியில் அடர்த்தியாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு ப்ளஸ். ஆனால், தன்னை வளப்படுத்திக் கொண்டவர், கட்சி நிர்வாகிகளை கவனிக்காதது மிகப்பெரிய ‘மைனஸ்’. அடுத்தவர், டி.என்.பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளரான சிவபாலன். இவர் ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தவர் என்பதால், தொகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் நன்கு பரிச்சயம் உள்ளவர். தன்மையான குணம் கொண்டவர்.  கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சிட்டிங் மாவட்டச் செயலாளரான நல்லசிவத்தின் ஆதரவு இவருக்கு இருப்பது ப்ளஸ். அதேதான் இவரின் மைனஸூம் கூட! “இவர் மாவட்டச் செயலாளரானால், நல்லசிவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார், இதனால் கட்சியின் வளர்ச்சி சந்தேகமே! மேலும், கட்சியில் சீனியர்கள் பலர் இருக்கும்போது, தேமுதிகவிலிருந்து வந்தவரை ஆதரித்து மாவட்டச் செயலாளராக்க வேண்டுமா?” என்கின்றனர் உள்ளூர் உடன்பிறப்புக்கள். ரேஸில் இருக்கும் மூவரில், கால் நூற்றாண்டு காலம் இளைஞரணியில் பொறுப்பில் இருந்தவர், ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடனான நெருக்கம், தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இணக்கமாகச் செல்பவர் என்ற அடிப்படையிலும், நிர்வாகிகளின் ஆதரவை தீவிரமாகத் திரட்டிவருவதால் தற்போதைய நிலவரப்படி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ரேஸில் சந்திரசேகரின் கரமே ஓங்கியுள்ளது. 

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: லெஃப்டில் இண்டிகேட்டர், ரைட்டில் டர்ன்? – தோப்பு வெங்கடாச்சலத்தின் அடுத்த ‘மூவ்’! 

மாவட்டப் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது; திடீரென திமுகவிலிருந்து விலகியது… என சமீபகாலமாக ஈரோடு அரசியலில் ‘ஹாட் டாபிக்’ ஆக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். திமுகவிலிருந்து விலகியபோது, “தற்போதைக்கு வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை!” என கூறியிருந்தார். ஆனால், லெஃப்டில் இண்டிகேட்டரைப் போட்டு, ரைட்டில் திரும்பும் சுபாவமுள்ள தோப்பு வெங்கடாச்சலம், கருப்பு சிவப்பு வேட்டியை கழற்றிப் போட்ட கையோடு, அடுத்த கரைவேட்டியைக் கட்டுவதற்கான ‘டீலிங்’கை தொடங்கிவிட்டாராம். இதுகுறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். அதிமுகவில் ஐக்கியம்?   “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் தொடர விரும்பாத தோப்பு, அதிமுகவுக்கு ‘யூடர்ன்’ அடிக்க, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது விட்டார். ஆனால், எடப்பாடியிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை. இதற்கிடையே, திமுக தலைமை தோப்புவின் கட்சிப் பதவியை பிடுங்கியது. ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்குமா? உள்ளூரிலுள்ள எடப்பாடியின் நெருங்கிய உறவினர் மூலம் அதிமுகவில் இணைவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியைத் தொடங்கினார். பெருந்துறை தொகுதியுடன் கோபி அல்லது மொடக்குறிச்சி தொகுதியை இணைத்து, அதற்கு தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் அதிமுக தலைமை, ‘முதலில் கட்சியில் இணையச் சொல்லுங்கள். மற்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டது. இதனால் அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காதோ? எனச் சந்தேகப்பட்ட தோப்பு, மற்ற வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தார்.  தாமரையில் தஞ்சம்! அந்தவகையில், சமீபத்தில் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த, உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் காவி பிரமுகரை நேரில் சந்தித்துப் பேசினார். காவி பிரமுகரின் நெருங்கிய உறவினரும், தோப்புவின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமான தொழிலதிபர் மூலமாக இந்தச் சந்திப்பு நடந்ததாகச் சொல்கின்றனர். அப்போது, அதிமுகவில் இணைவதற்காக தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், அது கைகூடாத பட்சத்தில், தனக்கு மாநில அளவிலான முக்கியப் பதவி வழங்கினால், காவிக்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு ‘மேலிடத்தில் பேசி, பாசிட்டிவ் பதில் சொல்வதாக’ காவிப் பிரமுகரும் நம்பிக்கை அளித்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தர, எடப்பாடி கன்வின்ஸ் ஆனால் அதிமுக; அல்லது உச்சப் பிரமுகரின் ஆசியுடன் காவிக் கட்சியில் மாநிலப் பதவி என முடிவு செய்துள்ளார். இந்த அரசியல் கணக்குகளுக்குப் பிறகே, திமுகவிலிருந்து விலகும் முடிவை தோப்பு எடுத்தார்” என்றனர். தோப்பில் ‘இலை’ துளிர்க்குமா..? அல்லது ‘தாமரை’ மலருமா..? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.  

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: கடத்தப்பட்ட ‘கொங்கு கல்லூரி’ மாணவன்: வழக்குப்பதிவு செய்யாத போலீஸ்! – பின்னணியில் நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துவரும் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல் இந்த விவகாரம் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்ன நடந்தது? கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் கல்லூரிக்கு வெளியே உள்ள உணவகத்தின் அருகில் நின்று, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு கார் மற்றும் பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்த ஒரு மாணவரை அடித்து உதைத்ததோடு, காப்பாற்றச் சென்ற நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.  அத்தோடு விடாமல், அந்த மாணவரை தரதரவென இழுத்துச் சென்று, காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வெள்ளோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாகக் களமிறங்கி, கடத்தப்பட்ட மாணவனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், கடந்தலில் ஈடுபட்டவர்கள் சக மாணவர்கள் என்பதும், இருதரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துவந்ததும், அதன்காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்தது. வழக்கு பதியாதது ஏன்? பொது இடத்தில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருந்தும், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருதரப்பும் பேசி ‘சமரசம்’ செய்துகொண்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. கடத்தல் என்பது ஜாமீனில் வர முடியாத தீவிரமான குற்றமாகும். கடத்தப்பட்ட மாணவர் புகார் அளிக்கத் தயங்கினாலும், சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று காவல்துறையே சுயமாக வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமுண்டு. கட்டப்பஞ்சாயத்து நிலையமான காவல் நிலையம்! கடத்தப்பட்ட மாணவர் போலீசில் புகார் கொடுக்கத் தயங்கியது ஏன்? என்பது குறித்து விசாரித்தோம். அதில், கடத்தப்பட்ட மாணவர் திமுக முக்கியப் பிரமுகர் ஒருவரின் மகன் என்பதும், விஷயம் வெளியே தெரிந்தால் தேவையில்லாத சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே, வழக்குப்பதிய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகச் சொல்கின்றனர். அதேவேளையில், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல், சில அரசியல் புள்ளிகள் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கடத்தல் வழக்கு ‘கப்சிப்’பென வெளியே கசியாமல் சுமுகமாக (!) முடித்து வைக்கப்பட்டிருக்கிறதாம். கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்? சாதாரண ஏழை எளிய மாணவர்கள் இதுபோன்று தவறு செய்திருந்தால் போலீசார் இதேபோல ‘சுமுகத் தீர்வு’ கண்டு வழக்கை முடித்திருப்பார்களா? அல்லது இந்த விவகாரத்தில் பெரிய இடத்து வாரிசுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சட்டம் தன் கண்களை மூடிக் கொண்டதா? ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாது, தமிழக அளவில் முக்கியக் கல்லூரியாக கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும், அதனை கல்லூரி நிர்வாகம் அதனை கட்டுப்படுத்தத் தவறினால், எல்லைமீறிய வன்முறைக்கு முக்கியக் காரணியாக அமைந்துவிடும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. வன்முறையில் ஈடுபட்டவர்களை “அறிவுரை கூறி அனுப்புவது” அவர்களுக்கு மேலும் துணிச்சலையே தரும். நாளை இதே கும்பல் வேறு ஒரு பெரிய குற்றத்தைச் செய்தால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்களா? கல்வி நிலையங்களில் ரவுடியிசமும், அதை மூடி மறைக்க அரசியல் அதிகாரமும் கைகோர்க்கும்போது பாதிக்கப்படுவது சாதாரண மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாப்புமே ஆகும். காவல் நிலையம் ‘கட்டப் பஞ்சாயத்து நிலையமாக’ மாறாமல், சட்டத்தின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: ‘பிரித்துப் போடு!’ – கட்சி மறுசீரமைப்பில் எம்.பி பிரகாஷின் சித்து விளையாட்டு… கொந்தளிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற  திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியை மறுசீரமைக்க நிர்வாக ரீதியான பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனையடுத்து, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என 110 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து தலைமை அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகள் ஈரோடு கிழக்கு மாவட்டம் (ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி), ஈரோடு மத்திய மாவட்டம் (ஈரோடு மேற்கு, பெருந்துறை), ஈரோடு வடக்கு மாவட்டம் (பவானி, அந்தியூர்), ஈரோடு மேற்கு மாவட்டம் (கோபி, பவானிசாகர்) என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தான் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும் மாநகராட்சிகளைத் தவிர, மற்ற மாநகராட்சிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள், ஒரே கட்சி மாவட்டத்தில் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு கிழக்கு மாவட்டத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மத்திய மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது மாநகர திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில், ஈரோடு  எம்.பி-யும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ.பிரகாஷ்  இருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகள் மற்றொரு மாவட்டமாகவும் பிரிக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊர் அமைந்துள்ள மொடக்குறிச்சி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்தி வரும் பிரகாஷ், மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டால், மாவட்ட தலைநகரத்தில் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாது என நினைக்கிறார். எனவே, மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, பெருந்துறை தொகுதியை மத்திய மாவட்டத்தில் தள்ளிவிட்டு, ஈரோடு கிழக்கு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் . மாநகராட்சியில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு கட்சி மாவட்டங்களில் சேர்க்கப்பட்டால், கட்சி நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுவதுடன், கட்சிப் பணிகளிலும் தொய்வு ஏற்படும். எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் பிரகாஷ் தன்னுடைய சுயநலத்திற்காக மாநகராட்சியில் உள்ள இரண்டு தொகுதிகளையும் பிரித்துப் போட்டு ‘கேம்’ ஆடியுள்ளார். இந்த மாவட்ட பிரிப்பு பின்னணியில், மாநகரில் ஆதிக்கம் செலுத்துவதைத் தாண்டி, மற்றொரு கணக்கும் இருக்கிறது.  அதாவது, தனது சொந்தத் தொகுதியான மொடக்குறிச்சியில் எம்.பி பிரகாஷின் செயல்பாடுகள் மீது கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பிரகாஷ் போட்டியிட்டால் தேறுவது சிரமம். அதேபோல, அதிமுகவின் கோட்டையான பெருந்துறையில் களமிறங்கினாலும் அவருக்குத் தோல்வி உறுதி. எனவே, மாவட்ட தலைநகரும், சிறிய தொகுதியுமான ஈரோடு கிழக்கு தொகுதியை தன்னுடைய மாவட்டத்தில் சேர்த்துக் கொண்டால், மொடக்குறிச்சி தொகுதி இல்லையென்றால் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு வென்றுவிடலாம் என்ற சுயநலக் கணக்கோடு, கட்சியின் மறு சீரமைப்பிலும் தன்னுடைய சித்து விளையாட்டை பிரகாஷ் அரங்கேற்றியுள்ளார். கட்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஈரோடு கிழக்கு மட்டும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை ஒரே மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சியை மற்றொரு மாவட்டமாகவும் தலைமை மாற்றி அறிவிக்க வேண்டும்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மறு சீரமைக்க முயற்சிக்கும் திமுக தலைமை, மறுபடியும் உள்ளடி அரசியலுக்கு ஆதரவு கொடுக்குமா? அல்லது தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: ‘அம்பானி’ வரை நட்பு? ‘யார் இந்த ஈரோடு கேசவநாதன்?’ – விக்ரமின் ‘லார் கிப்பான்’ வீடியோவால் சிக்கும் பெரும்புள்ளிகள்!

சர்வதேச அளவில் பாதுகாக்கப்படும் அரிய வகை உயிரினமான ‘லார் கிப்பான்’ குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோவை, நடிகர் விக்ரம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக வனத்துறை விசாரணையில் இறங்க, விக்ரம் வீடியோவில் இருந்த ‘லார் கிப்பான்’, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்தில் இருந்ததும், அது, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனின் பண்ணையில் இருந்து பெறப்பட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு, வனத்துறையின் விசாரணை கேசவநாதன் பக்கம் திரும்பியது. பெருந்துறையில் உள்ள அவரது பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டு வந்த 7 ‘ஆப்பிரிக்கன் சர்வல்’ பூனைகள், 2 ‘லார் கிப்பான்’ குரங்குகள், 2 ‘டஃப்டட் கேப்புசின்’ குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், கேசவநாதனின் பின்னணி அறிந்தவர்களிடம் நாம் விசாரணையில் இறங்க, அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ‘யார் இந்த கேசவநாதன்?’ – வெளிச்சத்திற்கு வரும் சர்வதேச தொடர்புகள்! “பெருந்துறை அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்வலசு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கேசவநாதன். குவாரி தொழில் செய்து வருகிறார். இவர் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் இதை பொழுதுப்போக்காக தொடங்கியவர், நாளடைவில் தனது சொந்த ஊரில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்த்ததோடு, அதன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. கென்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்ற பறவைகள் மற்றும் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் விற்பனையில் இயங்கிவந்த பல்வேறு வெளிநாட்டவர்களின் தொடர்பும் கேசவநாதனுக்குக் கிடைத்துள்ளாகத் தெரிகிறது. ‘அம்பானி’ திருமணத்தில் கேசவநாதன்? இதில் அதிரவைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், 2024-ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற, ஆசியாவின் முன்னணிப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணத்தில், கேசவநாதன் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டதுதான். மல்டி-மில்லியனர்கள் மற்றும் உலகளாவிய பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த திருமண விழாவில், ஈரோட்டில் குவாரி பிசினஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஃபார்ம் நடத்தி வரும் கேசவநாதன் பங்கேற்றார் என்றால், அவரது தொடர்புகளின் எல்லைகளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்(!) ‘முக்கியப் புள்ளிகள்’ சிக்க வாய்ப்பு? கேசவநாதன் என்ற ஒரு தனி நபரிடம், உரிய ஆவணங்கள் இன்றி இத்தனை அரிய வகை உயிரினங்கள் எப்படி வந்தது? அவற்றை எங்கிருந்து பெற்றார்? தற்போது பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களைப் போல, வேறு ஏதாவது உயிரினங்களை இதற்கு முன் வைத்திருந்தாரா? அவற்றை வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? அவரது பின்னணி மற்றும் தொடர்புகள் என்ன? என்பவை எல்லாம் பெரும் கேள்விகளாக எழுகின்றன. இதையெல்லாம் வனத்துறை அதிகாரிகள் ஆழமாக விசாரித்தால், இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு ‘முக்கியப் புள்ளிகள் (!)’ உள்ளனரா என்பது தெரியவரும்” என்றனர். ‘பிள்ளையார் பிடிக்கப்போய்.. குரங்கான கதை’ என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு குரங்கை பிடிக்கப்போய் பல ‘முதலைகள்’ பிடிபடும் போல!

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: மூடப்பட்ட கதவுகள்… அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் தோப்பு வெங்கடாச்சலம்?

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். சமீப காலமாக, அவரின் அரசியல் கணக்குகள் எதுவும் கைகூடாமல் போனதால், அரசியலுக்கு ‘முழுக்கு’ போட்டுவிடலாமா என, தீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஷயம் அறிந்தவர்களிடம் பேசினோம்.  தேர்தல் தோல்வி… கொந்தளித்த தோப்பு! “2026 சட்டமன்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் தான் தோற்றதற்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி தரப்பின் உள்ளடி வேலைகள் தான் முக்கியக் காரணம் என தோப்பு நம்புகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆராய தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வுக்குழு பெருந்துறை வந்தபோது, ‘நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு ஏதவாது தெரிய வேண்டுமென்றால், தொகுதி மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றதோடு, இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினால் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன், கட்சித் தலைமை தான் முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக, 2026 பொதுத்தேர்தலுக்கு செலவு செய்த தொகையையும் கட்சி கொடுக்க வேண்டும்’ என்று கள ஆய்வுக் குழுவினரிடம், தோப்பு கறாராகப் பேசியுள்ளார். ‘ராஜினாமா’ அஸ்திரம்…  தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடனே, தி.மு.க தலைவர் ஸ்டாலின், செல்வராஜை அழைத்துப் பேசி சமாதானப்படுத்த, தன்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இதே உத்தியை தோப்பு கையாள நினைத்தார். ராஜினாமா அஸ்திரத்தை கையிலெடுத்தால் தலைமை சமாதானத்திற்கு வரும். அப்போது முத்துசாமி ஆதரவாளர்களைத் தூக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்கச் சொல்லி ‘டிமாண்ட்’ வைக்கலாம் என திட்டமிட்டார். தலைமை இதற்கு இணங்காவிட்டால், தி.மு.க-விலிருந்து விலகி, கட்சி மாறுவதற்கும் தயாராகி வந்தார். தோப்புவின் எதிர்த்தரப்பு, இந்தத் தகவல்களை எல்லாம் அறிவாலயத்தில் போட்டுக் கொடுத்தது. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி! தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் த.வெ.கவுக்கு படையெடுத்துவரும் நிலையில், தி.மு.க-வில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இப்படியான நிலையில், தோப்பு கட்சி தாவினால் தி.மு.க-வின் இமேஜ் ‘டேமேஜ்’ ஆகும் என நினைத்த தலைமை, தோப்பு வகித்து வந்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியைப் பிடுங்கியது. இந்த அதிரடி பதவி பறிப்பால் தோப்பு அரண்டு போனதாகச் சொல்கின்றனர். த.வெ.க எண்ட்ரியை தடுத்த அரசியல் எதிரி! த.வெ.க-வில் ஐக்கியமாகிவிட தோப்பு காய்நகர்த்தி வந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த, தனது அரசியல் எதிரியான பெருந்துறை ஜெயக்குமாருக்கு, பெருந்துறை தொகுதியை மட்டும் கொண்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை த.வெ.க., தலைமை கொடுத்தது. இதனால் தோப்புவின் த.வெ.க திட்டமும் கானல் நீரானது.   ‘தோப்பு வேண்டாம்’ – கறார் எடப்பாடி! மீண்டும் அ.தி.மு.க-விற்கு யூ-டர்ன் அடிக்க நினைத்த தோப்பு, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பினாராம். எடப்பாடியோ, ‘பெருந்துறை ஜெயக்குமார் நம்பிக்கை துரோகி என்றால், தோப்பு நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்க!  எப்ப வேணும்னாலும் அவர் நம்ம காலை வாரி விடுவாரு. இப்போ இருக்குற பிரச்னையே போதும்’ என, ஒரு பெரிய கும்பிடு போட்டிருக்கிறார். இதனால், தோப்புவின் அ.தி.மு.க பிளானும் சுக்குநூறாக உடைந்துள்ளது. அண்ணாமலையிடம் அடைக்கலமா? மற்றொரு பக்கம், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் தோப்பு இணையப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதற்கு துளியும் வாய்ப்பில்லை. ஏனென்றால், 2026 தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணாமலை பெருந்துறை வந்தபோது, தோப்பு வெங்கடாசலம் தரப்பு கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டதாக கடுமையாக விளாசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவும் தன்னுடைய தேர்தல் தோல்விக்குக் காரணம் என நினைத்த தோப்பு, கடந்த ஜூலை மாதம், அண்ணாமலை மீது வழக்கு தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் திட்டம் எதுவும் கைகூடாததால், பறிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவியை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என, தன்னுடைய நண்பரான செந்தில்பாலாஜியை தோப்பு நாடியிருக்கிறார். ஆனால் அவரோ, ‘நானே இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறேன். எனவே, இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்துவிட்டாராம்”. அரசியலில் இருந்து ஓய்வு? பதவியைப் பிடுங்கி தூக்கிக் கிடாசிய தி.மு.க; துளியும் மதிக்காத அ.தி.மு.க; அடைக்கப்பட்ட த.வெ.க கதவு போன்றவற்றால், என்ன செய்வதெனத் தெரியாமல் தோப்பு கடும் விரக்தியில் இருக்கிறாராம். பதவி – அதிகாரம் என அனைத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோப்பு, ‘சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாமா? அல்லது முழுமையாக அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாமா?’ என தீவிர யோசனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து, தோப்பு வெங்கடாச்சலத்தின் கருத்தை அறிய, அவரிடம் பேசினோம். “நான் த.வெ.க-வில் சேர்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல, அ.தி.மு.க-வில் சேர்வதற்கு எடப்பாடியிடம் தூது அனுப்பியதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. என்னுடைய தேர்தல் தோல்விக்கு சில நிர்வாகிகளின் உள்ளடி வேலையும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தான் இதற்குக் காரணம் என நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை.  நான் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என்னை நம்பி கொடுத்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்ல நான் நினைக்கவில்லை. அது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகும். அப்படியொரு தவறை நான் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தப் பதவியும் வேண்டாம் என கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். எனவே, பதவி பறிக்கப்பட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் தற்போது தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராகவே தொடர்கிறேன். என்னை நம்பி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பேனா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார்.  தனிமரம் ‘தோப்பு’ ஆகாது. ஆனால், தன்னுடைய செயல்பாடுகளினால் ‘தோப்பு’ தனிமரமாகி நிற்கிறது!

Scroll to Top