August 19, 2026

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: மூடப்பட்ட கதவுகள்… அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் தோப்பு வெங்கடாச்சலம்?

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். சமீப காலமாக, அவரின் அரசியல் கணக்குகள் எதுவும் கைகூடாமல் போனதால், அரசியலுக்கு ‘முழுக்கு’ போட்டுவிடலாமா என, தீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஷயம் அறிந்தவர்களிடம் பேசினோம்.  தேர்தல் தோல்வி… கொந்தளித்த தோப்பு! “2026 சட்டமன்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் தான் தோற்றதற்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி தரப்பின் உள்ளடி வேலைகள் தான் முக்கியக் காரணம் என தோப்பு நம்புகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆராய தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வுக்குழு பெருந்துறை வந்தபோது, ‘நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு ஏதவாது தெரிய வேண்டுமென்றால், தொகுதி மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றதோடு, இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினால் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன், கட்சித் தலைமை தான் முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக, 2026 பொதுத்தேர்தலுக்கு செலவு செய்த தொகையையும் கட்சி கொடுக்க வேண்டும்’ என்று கள ஆய்வுக் குழுவினரிடம், தோப்பு கறாராகப் பேசியுள்ளார். ‘ராஜினாமா’ அஸ்திரம்…  தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடனே, தி.மு.க தலைவர் ஸ்டாலின், செல்வராஜை அழைத்துப் பேசி சமாதானப்படுத்த, தன்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இதே உத்தியை தோப்பு கையாள நினைத்தார். ராஜினாமா அஸ்திரத்தை கையிலெடுத்தால் தலைமை சமாதானத்திற்கு வரும். அப்போது முத்துசாமி ஆதரவாளர்களைத் தூக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்கச் சொல்லி ‘டிமாண்ட்’ வைக்கலாம் என திட்டமிட்டார். தலைமை இதற்கு இணங்காவிட்டால், தி.மு.க-விலிருந்து விலகி, கட்சி மாறுவதற்கும் தயாராகி வந்தார். தோப்புவின் எதிர்த்தரப்பு, இந்தத் தகவல்களை எல்லாம் அறிவாலயத்தில் போட்டுக் கொடுத்தது. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி! தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் த.வெ.கவுக்கு படையெடுத்துவரும் நிலையில், தி.மு.க-வில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இப்படியான நிலையில், தோப்பு கட்சி தாவினால் தி.மு.க-வின் இமேஜ் ‘டேமேஜ்’ ஆகும் என நினைத்த தலைமை, தோப்பு வகித்து வந்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியைப் பிடுங்கியது. இந்த அதிரடி பதவி பறிப்பால் தோப்பு அரண்டு போனதாகச் சொல்கின்றனர். த.வெ.க எண்ட்ரியை தடுத்த அரசியல் எதிரி! த.வெ.க-வில் ஐக்கியமாகிவிட தோப்பு காய்நகர்த்தி வந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த, தனது அரசியல் எதிரியான பெருந்துறை ஜெயக்குமாருக்கு, பெருந்துறை தொகுதியை மட்டும் கொண்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை த.வெ.க., தலைமை கொடுத்தது. இதனால் தோப்புவின் த.வெ.க திட்டமும் கானல் நீரானது.   ‘தோப்பு வேண்டாம்’ – கறார் எடப்பாடி! மீண்டும் அ.தி.மு.க-விற்கு யூ-டர்ன் அடிக்க நினைத்த தோப்பு, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பினாராம். எடப்பாடியோ, ‘பெருந்துறை ஜெயக்குமார் நம்பிக்கை துரோகி என்றால், தோப்பு நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்க!  எப்ப வேணும்னாலும் அவர் நம்ம காலை வாரி விடுவாரு. இப்போ இருக்குற பிரச்னையே போதும்’ என, ஒரு பெரிய கும்பிடு போட்டிருக்கிறார். இதனால், தோப்புவின் அ.தி.மு.க பிளானும் சுக்குநூறாக உடைந்துள்ளது. அண்ணாமலையிடம் அடைக்கலமா? மற்றொரு பக்கம், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் தோப்பு இணையப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதற்கு துளியும் வாய்ப்பில்லை. ஏனென்றால், 2026 தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணாமலை பெருந்துறை வந்தபோது, தோப்பு வெங்கடாசலம் தரப்பு கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டதாக கடுமையாக விளாசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவும் தன்னுடைய தேர்தல் தோல்விக்குக் காரணம் என நினைத்த தோப்பு, கடந்த ஜூலை மாதம், அண்ணாமலை மீது வழக்கு தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் திட்டம் எதுவும் கைகூடாததால், பறிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவியை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என, தன்னுடைய நண்பரான செந்தில்பாலாஜியை தோப்பு நாடியிருக்கிறார். ஆனால் அவரோ, ‘நானே இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறேன். எனவே, இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்துவிட்டாராம்”. அரசியலில் இருந்து ஓய்வு? பதவியைப் பிடுங்கி தூக்கிக் கிடாசிய தி.மு.க; துளியும் மதிக்காத அ.தி.மு.க; அடைக்கப்பட்ட த.வெ.க கதவு போன்றவற்றால், என்ன செய்வதெனத் தெரியாமல் தோப்பு கடும் விரக்தியில் இருக்கிறாராம். பதவி – அதிகாரம் என அனைத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோப்பு, ‘சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாமா? அல்லது முழுமையாக அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாமா?’ என தீவிர யோசனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து, தோப்பு வெங்கடாச்சலத்தின் கருத்தை அறிய, அவரிடம் பேசினோம். “நான் த.வெ.க-வில் சேர்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல, அ.தி.மு.க-வில் சேர்வதற்கு எடப்பாடியிடம் தூது அணுப்பியதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. என்னுடைய தேர்தல் தோல்விக்கு சில நிர்வாகிகளின் உள்ளடி வேலையும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தான் இதற்குக் காரணம் என நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை.  நான் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என்னை நம்பி கொடுத்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்ல நான் நினைக்கவில்லை. அது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகும். அப்படியொரு தவறை நான் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தப் பதவியும் வேண்டாம் என கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். எனவே, பதவி பறிக்கப்பட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் தற்போது தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராகவே தொடர்கிறேன். என்னை நம்பி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பேனா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார்.  தனிமரம் ‘தோப்பு’ ஆகாது. ஆனால், தன்னுடைய செயல்பாடுகளினால் ‘தோப்பு’ தனிமரமாகி நிற்கிறது!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோட்டுக்கு அடித்தது ஜாக்பாட்! ₹130 கோடி முதலீடு செய்யும் நிறுவனம்! 

பிரபல விளையாட்டு மற்றும் ‘ஆக்டிவ்வேர்’ உடைகள் உற்பத்தி நிறுவனமான டெக்னோஸ்போர்ட் (TechnoSport), ஈரோட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசுடன் ₹130 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் கணிசமாக உயருவதுடன், ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் தனது ஆடைகளின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 25 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெக்னோஸ்போர்ட், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் மாடலை பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 66 பிரத்யேக ஷோரூம்கள் மூலம் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், வரும் 2027 நிதியாண்டிற்குள் தனது வருவாயை ₹1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய ₹130 கோடி விரிவாக்க முதலீடு, கொங்கு மண்டலத்தின் ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டம்

72-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பவானிசாகர் அணை!

தமிழ்நாட்டின் விவசாயப் புரட்சிக்கும் குடிநீர் தேவைகளுக்கும் என்றும் வற்றாத ஊற்றாக விளங்கும் பவானிசாகர் அணை, இன்று 72-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் மாயாறு ஆகிய இரு ஆறுகளும் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் அமைந்துள்ள இந்த அணை, 105 அடி கொள்ளளவுடன் கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த விவசாயப் பொருளாதாரத்தையும் தாங்கிப்பிடிக்கும் முதன்மை நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் (1948 – 1955) பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, அன்றைய இந்தியப் பொறியாளர்களின் ஒப்பற்ற திறமைக்குச் சான்றாக நிற்கிறது. ஆசியாவிலேயே மிக நீளமான “மண் அணை” (Earthen Dam) என்ற உலகளாவிய பெருமையைக் கொண்ட இதன் மொத்த நீளம் சுமார் 8.8 கிலோமீட்டர் ஆகும். அக்காலத்தில் நவீன இயந்திரங்கள் அதிகம் இல்லாத நிலையிலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பால் உருவான இந்த அணை, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதில் இன்றளவும் இணையற்ற தொழில்நுட்ப அதிசயமாக விளங்குகிறது. 72 ஆண்டுகளைக் கடந்த போதிலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் 2.47 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு வாழ்வாதாரமாக இந்த அணை திகழ்ந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் நீலகிரி மலையிலிருந்து ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீரைக் கட்டிப்போட்டு, லட்சம் குடும்பங்களின் தாகம் தீர்க்கும் இந்த அணை தனது 72-வது பிறந்தநாளில் மேலும் பல தலைமுறைகளைக் காக்கும் கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.

மாவட்டம்

நடுரோட்டில் ‘ஹாயாக’ படுத்திருந்த சிறுத்தை… வாகன ஓட்டிகள் ஷாக்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியையொட்டிய திம்பம் மலைப்பாதையில், அதிகாலை நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நடுரோட்டிலேயே ‘ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே இந்த எதிர்பாராத காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.  சுமார் 10 நிமிடங்கள் சாலையிலேயே படுத்திருந்த சிறுத்தை, பின்னர் எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக வாகனங்களை நிறுத்தி சிறுத்தைக்கு அருகில் செல்லவோ, வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தலைப்புச் செய்திகள்

26 ஆண்டுகள் ‘டிமிக்கி’… காட்டிக் கொடுத்த கைரேகை: போலீஸில் மாட்டிய ‘பில்டர்’ கைதியின் கதை!

1995-ல் நடந்த ரூ.1 கோடி கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், 26 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ரிஷி சேத்தி என்பவரை கடத்தி, அவரது குடும்பத்திடம் ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்ட வழக்கில் அமித் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். போலீசாரின் பொறி மூலம் அவர் பிடிபட்டதுடன், கடத்தப்பட்ட நபரும் பத்திரமாக மீட்கப்பட்டார். 1999-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டின்போது கிடைத்த ஒரு மாத இடைக்கால ஜாமீனை பயன்படுத்தி தப்பியவர், அதன் பிறகு 26 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்துள்ளார்.  தலைமறைவான பிறகு பழைய அடையாளத்தை முற்றிலும் மறைத்து, புதிய பெயரில் டேராடூனில் கட்டிட ஒப்பந்ததாரராக மாறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அமித் யாதவ். சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் இல்லாததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்த நிலையில், 1999-ம் ஆண்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை போலீசார் மீண்டும் கையில் எடுத்தனர். அந்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 13-ம் தேதி டேராடூனில் அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்துள்ளனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பெயர், வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி ‘புதிய மனிதராக’ வாழ்ந்த ஆயுள் கைதியின் ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது!

இந்தியா

இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளம் ‘கட்’! அசாம் அரசின் அதிரடி எச்சரிக்கை!

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். முதல் மனைவியை கைவிட்டு, விவாகரத்து பெறாமலேயே மற்றொரு பெண்ணுடன் திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முதல் மனைவி அரசிடம் விண்ணப்பித்தால், பிடித்தம் செய்யப்படும் 20 சதவீத சம்பளம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், திருமண விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலத்திலும் இந்த பிடித்தம் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அசாம் அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே அசாமில் பலதாரத் திருமணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மனைவி ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற பாதுகாப்பை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியா

சிகிச்சைக்காக வந்தவர்கள்… அதிகாலையில் உயிரிழந்த சோகம்! – பதறவைக்கும் கொல்கத்தா சம்பவம்

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான மிர்சா காலிப் தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூ மார்க்கெட் அருகே உள்ள இந்த ஹோட்டலில் அதிகாலை சுமார் 1.45 முதல் 2 மணியளவில் திடீரென தீப்பற்றிய நிலையில், பெரும் புகை மண்டலம் உருவானது. அப்போது பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீயில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஜன்னல்களை உடைத்தும், பல்வேறு வழிகளில் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியின்போது ஹோட்டல் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்ததாகவும் தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேசத்தினர் அதிகம் தங்கும் பகுதியாக நியூ மார்க்கெட் சுற்றுவட்டாரம் உள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனினும், ஆரம்பகட்ட தகவல்களில் ஏசி வெடிப்பு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹோட்டலில் அவசரகால வெளியேறும் வசதி, தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக, மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்குள் அடுத்தடுத்து நடந்த ஹோட்டல் தீ விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, அங்குள்ள ஹோட்டல்களின் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்தியா

கசக்கும் சர்க்கரை விலை… மக்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ் சொல்ல மத்திய அரசின் அதிரடி பிளான்!

பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் சர்க்கரை விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு, பண்டிகை கால தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மகாராஷ்டிராவில் சர்க்கரை விலை கிலோ ரூ.46 வரை உயர்ந்துள்ளது. இதனால் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான 100 சதவீத இறக்குமதி வரியை குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான சூழல் ஏற்பட்டால் சுமார் 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க பதுக்கலுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் இருப்பு கட்டுப்பாடுகள், சர்க்கரை ஆலைகளின் இருப்பு வரம்பை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரையை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தி, அந்த சர்க்கரையை உள்நாட்டு சந்தைக்கு திருப்பிவிடும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலங்களில் கரும்பு அரவையை வழக்கத்தைவிட 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

ரூ.5.54 கோடி முதல்வர் அலுவலகம்… டெண்டருக்கு முன்பே வேலை தொடங்கியதா?

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும் முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு

 “முதல்வரைப் பாராட்டினால் வரி!” – இந்தியாவின் ரூ.214 லட்சம் கோடி கடனை அடைக்க அமைச்சரின் ‘அடடே’ ஐடியா! 

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும்முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

Scroll to Top