சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும்முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.