தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரிய வகை ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) குரங்குடன் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் கேசவநாதனிடம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை என நடிகர் விக்ரம் மற்றும் ரங்கநாதன் தரப்பில் வனத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் பெருந்துறை பண்ணையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
பெருந்துறை பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகை குரங்குகளை வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் தொழிலதிபர் கேசவநாதனிடம் இல்லாதது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த 3 லார் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகக் தொழிலதிபர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட 7 ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது பண்ணையிலேயே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஒரு பெரும் நெட்வொர்க் சிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர்.