ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி மாணவர்களின் நவீன தொழில்நுட்பத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான ‘ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ்’ போட்டி நடைபெற்றது.
10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கினர். தாங்களே சொந்தமாக வடிவமைத்த நவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ரோபோக்களைக் கொண்டுவந்து, அவற்றின் இயக்கம் மற்றும் பயன்பாடுகளைச் செய்து காட்டினர்.
வான்வெளியில் அமைக்கப்பட்ட கடினமான தடைகளை லாவகமாகக் கடந்து செல்வது, குறிப்பிட்ட எடைகளைத் தாங்கிக்கொண்டு இலக்கை அடைவது எனப் பல்வேறு சவாலான பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்பட்டு, அதிவேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட்ட சிறந்த ட்ரோன்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டன.
நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகி எம்.யுவராஜா, முதல்வர் டாக்டர் ஜெயராமன், சென்னை ‘கருடா ஏர் ஸ்பேஸ்’ அமைப்பின் அதிகாரி கே.பி.பொற்செல்வி, இசிஇ (ECE) துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.