மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான மிர்சா காலிப் தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூ மார்க்கெட் அருகே உள்ள இந்த ஹோட்டலில் அதிகாலை சுமார் 1.45 முதல் 2 மணியளவில் திடீரென தீப்பற்றிய நிலையில், பெரும் புகை மண்டலம் உருவானது. அப்போது பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீயில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஜன்னல்களை உடைத்தும், பல்வேறு வழிகளில் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியின்போது ஹோட்டல் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்ததாகவும் தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேசத்தினர் அதிகம் தங்கும் பகுதியாக நியூ மார்க்கெட் சுற்றுவட்டாரம் உள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனினும், ஆரம்பகட்ட தகவல்களில் ஏசி வெடிப்பு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹோட்டலில் அவசரகால வெளியேறும் வசதி, தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக, மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்குள் அடுத்தடுத்து நடந்த ஹோட்டல் தீ விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, அங்குள்ள ஹோட்டல்களின் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.