பெருந்துறை ஒரு கோடி கொள்ளை வழக்கு: 4 பேர் அதிரடி கைது! – ரூ.70 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பவானி ரோட்டைச் சேர்ந்த கார் டீலர், ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள்குமார் மற்றும் காஞ்சிக்கோயில் ரோடு தாய் நகரைச் சேர்ந்த அவரது நண்பர் சிவராஜ் ஆகியோர் காஞ்சிக்கோயில் ரோட்டில் சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனர். இதற்காக ‘ஸ்ரீ சாய்’ என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கி நன்கொடை திரட்டி வந்த நிலையில், ரூ. 1 கோடி ரொக்கம் கொடுத்தால் வங்கிக் கணக்கிற்கு ரூ. 1.15 கோடியாக மாற்றித் தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த புரோக்கர் கும்பல் ஒன்று ஆசை வார்த்தை காட்டியுள்ளது.

இதை நம்பி கடந்த அக்டோபர் 28-ம் தேதி கோயில் கட்டும் இடத்தில் ரூ. 1 கோடி ரொக்கத்தைக் கொடுத்தபோது, அந்த புரோக்கர் கும்பல் ஒரு கோடி ரூபாயுடன் காரில் தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி 6 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கம், 2 கார் மற்றும் 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொள்ளை வழக்கில், ஒரு கோடி ரூபாயுடன் தலைமறைவான முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் உப்பிலிபாளையம் ரோலக்ஸ் (எ) விக்னேஸ்வரன் (30), பல்லடம் கணபதிபாளையம் கனகு (எ)கனகராஜ் (25), திருப்பூர் நொச்சிபாளையம் ரோடு 2-வது வீதி விஷ்ணு (எ) வைஷ்ணவ் (28), திருப்பூர் வலையன்காடு விஓசி நகர் ஷாருக்கான் (29) ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த ரூ. 70 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top