சரக்கு டிரைவரால் ‘சரக்கு லாரி’ கவிழ்ந்து விபத்து!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது ஸ்விஃப்ட் காரில் சென்று கொண்டிருந்தார். 

குண்டடம் காவல் நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, பல்லடத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று, மூர்த்தியின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணித்த மூர்த்தி உட்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர்.

கார் மீது மோதிய அதிர்ச்சியில் நிற்காமல் தப்பிக்க முயன்ற டிரைவர், லாரியை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதாமல் இருக்க, லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் லாரியை ஓட்டிவந்த சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த டிரைவர் முத்துப்பாண்டி (54) படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவர் மதுபோதையில் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top