November 23, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பூட்டைத் திருடும் புது டிஸைன் திருடர்கள் – திருப்பூரில் நடந்த சுவாரஸ்யம்!

திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தை அடுத்த வலசுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் அப்பகுதியில் சொந்தமாகப் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி இவரது நிறுவனத்திற்கு வந்த நபர் ஒருவர் ‘கம்பெனியில் ஏதாவது வேலை கிடைக்குமா?’ எனக் கேட்டுள்ளனர். இப்போதைக்கு ஆட்கள் தேவையில்லை என கருப்புசாமி சொல்ல, வேலை கேட்டு வந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளனர்.  அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, நிறுவனத்தின் வெளிப்புறக் கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பூட்டு காணாமல் போனதைக் கண்டு சந்தேகமடைந்த கருப்புசாமி, நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் நிறுவனத்தின் முன்பு வந்து இறங்குவதும், அதில் ஒருவர் தன்னிடம் வந்து வேலை கேட்பது போலப் பேச்சுக் கொடுத்துக் கவனத்தைத் திசைதிருப்பிய நேரத்தில், இன்னொருவர் கேட்டில் தொங்கிய பூட்டை நைசாகக் கழற்றி எடுத்துக்கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது. இதேபோல, அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் கேட்டில் இருந்த பூட்டையும் இந்தக் கும்பல் திருடிச் சென்றுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  திருடர்களிடம் இருந்து பாதுகாக்க உபயோகப்படுத்தும் பூட்டையே திருடிக்கொண்டு போனால் என்ன செய்வது என திருப்பூர்வாசிகள் புலம்புகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சரக்கு டிரைவரால் ‘சரக்கு லாரி’ கவிழ்ந்து விபத்து!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது ஸ்விஃப்ட் காரில் சென்று கொண்டிருந்தார்.  குண்டடம் காவல் நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, பல்லடத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று, மூர்த்தியின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணித்த மூர்த்தி உட்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர். கார் மீது மோதிய அதிர்ச்சியில் நிற்காமல் தப்பிக்க முயன்ற டிரைவர், லாரியை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதாமல் இருக்க, லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் லாரியை ஓட்டிவந்த சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த டிரைவர் முத்துப்பாண்டி (54) படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மதுபோதையில் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

தாய், இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து பலி;  பிரசவத்தில் நடந்த விபரீதம் – கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மீது பகீர் புகார்!  

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). வெளிநாட்டில் பணியாற்றி வரும் இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா இரட்டைக் குழந்தைகளைக் கருவுற்றிருந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் மாலினியே முன்னின்று சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடுத்து மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. இதற்கிடையே, பிரசவத்தின்போதே பிரியங்கா சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலைக்குச் சென்றார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்குத் தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பிரசவத்தின்போது சுயநினைவை இழந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தாய் பிரியங்காவும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 12 வருடக் காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவான சூழலில், தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகள் என மூன்று உயிர்களும் அடுத்தடுத்துப் பறிபோன சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் வள்ளிப்பட்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவின் கருத்தரித்தல் மருத்துவமனையின் அலட்சியமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், கவின் கருத்தரித்தல் மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர் மாலினி மீதும் விசாரணை நடத்தி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Scroll to Top