அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியர் அதிரடி கைது!
ஈரோடு – பெருந்துறை சாலை குமலன்குட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் விஜயசாரதி (45). இவர், கடந்த நவ.19-ல் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் பள்ளியின் தலைமையாசிரியர் தங்கமணியிடம் சென்று தங்களுக்கு நடந்தவற்றை விவரித்துள்ளனர். என்ன நடந்தது? என மாணவிகளிடம் அவர் முழுமையாக விசாரித்த பிறகு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் விஜயசாரதியை அழைத்து விசாரித்துள்ளனர். இதற்கிடையே, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்துள்ளனர். இதில், ஆசிரியர் விஜயசாரதியின் அத்துமீறல்கள் உறுதியானது. அதன்பின்னர், விஜயசாரதியை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

