“மோசமான படம்” என்ற ஒரே வார்த்தையால் நடந்த அதிசயம்! – ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடிக்கு எகிறிய வசூல்

“இது 2026-ம் ஆண்டின் மோசமான படமாக இருக்கலாம்!” — சீனாவில் வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பற்றி ரசிகர்கள் வைத்த கமெண்ட் இதுதான். ஆனால், அதுவே அந்தப் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான ‘நியூ லாய்’ (Niu Lai) திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் — இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது. நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே டிக்கெட் வாங்கியிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதன்பிறகு கதாபாத்திரங்களின் அசைவுகள், அனிமேஷன் தரம், குரல், கதை என அனைத்தையும் ரசிகர்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர். “மாணவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது”, “AI-யைவிட மோசம்” என விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வமும் அதே வேகத்தில் அதிகரித்தது. “இவ்வளவு மோசமா? அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வமே திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அழைத்து வந்தது.

அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்! Maoyan வசூல் தரவுகளின்படி, தற்போது ‘நியூ லாய்’ 1.49 கோடி யுவானைத் தாண்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ.19–20 கோடி வசூலைக் குவித்துள்ளது. அதாவது, வெறும் ரூ.1 லட்சத்தில் தொடங்கிய வசூல் சில நாட்களில் ரூ.20 கோடியை நெருங்கியிருக்கிறது! பிரம்மாண்ட படங்களுடன் வசூல் பட்டியலில் இந்தப் படத்தின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. அதைவிட ஆச்சரியம், இந்த 86 நிமிட அனிமேஷன் படத்தை உருவாக்கியது வெறும் இருவர் மட்டுமே — சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங். தாய்–மகன் எனக் கூறப்படும் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் உழைத்து, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளை தாங்களே கவனித்துள்ளனர். நல்ல படம் என்ற விளம்பரம் தோல்வியடைந்த நிலையில், “மோசமான படம்” என்ற விமர்சனமே ஒரு படத்தை ரூ.20 கோடி வசூல் செய்ய வைத்திருக்கிறது! சினிமாவில் சில நேரங்களில் எதிர்மறை விளம்பரம்கூட எவ்வளவு பெரிய ஆயுதமாக மாறும் என்பதற்கு ‘நியூ லாய்’ ஒரு வித்தியாசமான உதாரணமாகியுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top