சினிமா

சினிமா

“என்னதான் விளம்பரம் செய்தாலும்…” திருப்பூர் ரசிகர்களிடம் ரியோ ராஜ் வைத்த கோரிக்கை!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ், வர்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இப்படம் திரையிடப்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு படக்குழுவினர் திடீரென வருகை தந்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், நடிகர் ரியோ ராஜ், நடிகை வர்த்திகா உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்கிற்குள் நுழைந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். அப்போது ரசிகர்களிடம் பேசிய படக்குழுவினர், “படத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறோம். அதன்படி திருப்பூருக்கும் வந்துள்ளோம்” என்றனர். நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “திரையரங்குகளில் எங்கள் படத்தை மக்கள் ரசித்துப் பார்ப்பதும், படம் மக்களுக்கு பிடித்திருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். என்னதான் விளம்பரம் செய்தாலும், மக்களின் வாய்மொழி விமர்சனம்தான் ஒரு படத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தச் சின்னப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்” என்றார்.

சினிமா

சொதப்பிய ‘ஜெயிலர் 2’ பாடல்? – சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘Ala Bolelo’ நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஜெயிலர்’ படத்தின் ‘Kaavaalaa’, ‘Hukum’ போன்ற பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே, முதல் தடவை கேட்கையிலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் அனிருத்தின் வழக்கமான மேஜிக் ஹூக் இதில் இல்லை என்றும், “below average”, “Boring” என்றும், ஆக இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.  அதேபோல், பாடலில் இடம்பெற்றுள்ள மலையாள வரிகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என கேரள ரசிகர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், “தலைவரின் மாஸ் பாட்டிற்கு நடனமாட எத்தனையோ முன்னணி நடிகைகள் காத்துக்கிடக்கும் போது, மார்க்கெட் இழந்த இனியாவை ஆடவைத்து ஏனய்யா இம்சை செய்கிறீர்கள்?” என காஸ்டிங் தேர்வை நோக்கியும் ரசிகர்கள் தங்களின் கடும் அதிருப்தியைக் கொட்டி வருகின்றனர்.  மொத்தத்தில், மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ‘Ala Bolelo’ பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இணையத்தில் இதைப் பற்றிய மீம்களும் விமர்சனப் பதிவுகளுமே தற்போது வைரலாகி வருகின்றன. 

சினிமா

பாக்ஸ் ஆபீஸில் லோகேஷ் கனகராஜ் ‘சம்பவம்’ – வசூல் இத்தனை கோடியா?

இயக்குநராக பல வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக கதாநாயகனாக களமிறங்கிய ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களைக் கொண்டாட வைத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநராக ‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ், தற்போது நடிகராகவும் அறிமுகப் படத்திலேயே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து தமிழ் சினிமா வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சினிமா

“மோசமான படம்” என்ற ஒரே வார்த்தையால் நடந்த அதிசயம்! – ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடிக்கு எகிறிய வசூல்

“இது 2026-ம் ஆண்டின் மோசமான படமாக இருக்கலாம்!” — சீனாவில் வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பற்றி ரசிகர்கள் வைத்த கமெண்ட் இதுதான். ஆனால், அதுவே அந்தப் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான ‘நியூ லாய்’ (Niu Lai) திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் — இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது. நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே டிக்கெட் வாங்கியிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதன்பிறகு கதாபாத்திரங்களின் அசைவுகள், அனிமேஷன் தரம், குரல், கதை என அனைத்தையும் ரசிகர்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர். “மாணவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது”, “AI-யைவிட மோசம்” என விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வமும் அதே வேகத்தில் அதிகரித்தது. “இவ்வளவு மோசமா? அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வமே திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அழைத்து வந்தது. அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்! Maoyan வசூல் தரவுகளின்படி, தற்போது ‘நியூ லாய்’ 1.49 கோடி யுவானைத் தாண்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ.19–20 கோடி வசூலைக் குவித்துள்ளது. அதாவது, வெறும் ரூ.1 லட்சத்தில் தொடங்கிய வசூல் சில நாட்களில் ரூ.20 கோடியை நெருங்கியிருக்கிறது! பிரம்மாண்ட படங்களுடன் வசூல் பட்டியலில் இந்தப் படத்தின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. அதைவிட ஆச்சரியம், இந்த 86 நிமிட அனிமேஷன் படத்தை உருவாக்கியது வெறும் இருவர் மட்டுமே — சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங். தாய்–மகன் எனக் கூறப்படும் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் உழைத்து, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளை தாங்களே கவனித்துள்ளனர். நல்ல படம் என்ற விளம்பரம் தோல்வியடைந்த நிலையில், “மோசமான படம்” என்ற விமர்சனமே ஒரு படத்தை ரூ.20 கோடி வசூல் செய்ய வைத்திருக்கிறது! சினிமாவில் சில நேரங்களில் எதிர்மறை விளம்பரம்கூட எவ்வளவு பெரிய ஆயுதமாக மாறும் என்பதற்கு ‘நியூ லாய்’ ஒரு வித்தியாசமான உதாரணமாகியுள்ளது.

சினிமா

‘4 நாளில் இத்தனை கோடியா..?’ – ஃபாக்ஸ் ஆபீஸை திணறடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்துடன் உருவான இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் 1.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலைக் குவித்து, சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் நிரூபித்துள்ளது. மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் போன்ற பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். ரிலீசான வெறும் 4 நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதால், வரவிருக்கும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன!

சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ‘ஜெயிலர் 2’ First single ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “The Feast is ready!” என்ற மாஸ் அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழு, ரஜினியின் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் லுக்கை மீண்டும் ரசிகர்கள் முன் கொண்டு வந்துள்ளது. 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அனிருத்தின் இசையும் பார்க்கப்பட்ட நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது முதல் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ‘காவாலா’, ‘ஹுக்கும்’ என முதல் பாகத்தில் இசையால் அதிரவைத்த அனிருத், இந்த முறை என்ன மாஸ் சம்பவம் செய்யப்போகிறார்? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக். நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

அனிருத்–காவ்யா மாறன் டும் டும் டும்? எந்த நாட்டில் திருமணம் நடக்குது தெரியுமா?

தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ காவ்யா மாறன் இருவருக்கும் திருமணம் நடைபெறப் போவதாகச் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. ஏற்கனவே இவர்களைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், தற்போது வருகிற நவம்பர் மாதம் தீபாவளிக்குப் பிறகு கிரேக்க நாட்டில் (Greece) இவர்களது பிரம்மாண்டமான ‘டெஸ்டினேஷன் வெடிங்’ நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் அனிருத்தின் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன், அனிருத்தின் திருமணம் குறித்துப் பேசிய சில கருத்துகள் இந்தத் தகவலுக்கு மேலும் இறக்கை கட்டிப் பறக்க வைத்துள்ளன.  இருப்பினும், இந்தத் திருமணம் குறித்த செய்திகள் எதுவுமே அதிகாரப்பூர்வமாக இரு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்படவில்லை. அனிருத் அல்லது காவ்யா மாறன் குடும்பத்தினர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடும் வரை, சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்தச் செய்திகளை வெறும் ‘தகவல்’ அல்லது ‘வதந்தி’ என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அனிருத்–காவ்யா மாறன் திருமணப் பேச்சு இன்று மீண்டும் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 

Scroll to Top