October 11, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“எப்படி எனக்கு துரோகம் பண்ணலாம்?” – தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது அம்மிக் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொன்ற கணவன்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்டோபர் – பவிலா தம்பதியினர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள், திருப்பூர் வஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.  மனைவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டவராக இருந்துவந்த கிறிஸ்டோபர், குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவி பவிலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். அந்தவகையில், வழக்கம்போல நேற்றிரவு (அக்.10) குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபர், ‘நீ எனக்கு துரோகம் செய்யுறியா!’ என மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே வார்த்தைகள் முற்றி கடும் வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனையடுத்து இரவு வீட்டில் மனைவி பவிலா தூங்கி கொண்டிருந்த போது, கிறிஸ்டோபர் வீட்டில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு பவிலா பரிதாபமாக இறந்து போயுள்ளார். விஷயமறிந்து அக்கம்பக்கத்தினர் உடனே  வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்துவிட்டு வீரபாண்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த கிறிஸ்டோபர், எந்தவித சலனமும் இல்லாமல் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். அதையடுத்து, கிறிஸ்டோபரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியின் நடந்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரது தலையில் கல்லைப் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

8 ஆயிரம் ரூபாய் செல்போன் தகராறு… கல்லூரி மாணவனை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற +2 மாணவன்! – திருப்பூரில் பயங்கரம்  

திருப்பூர் ஏபிடி சாலை, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்பவரது மகன் ஸ்ரீ ஹரி (வயது 19). தாய் இல்லாததால் பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தவர், கொடுவாய் அருகேயுள்ள ஏ.ஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் மூலமாக இவருக்கு திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த 17 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பள்ளி மாணவன், தான் செல்போன் வாங்க உள்ளதாக ஸ்ரீஹரியிடம் தெரிவித்தபோது, ‘ஒரு ஐபோன் குறைந்த விலைக்கு வருகிறது. அதை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீஹரியிடம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பள்ளி மாணவன் ஐபோன் வாங்கியுள்ளான்.  ஆசையாய் வாங்கிய ஐபோன் வேலை செய்யாமல் பழுதாகி இருந்தது. எனவே, செல்போனை மாற்றிக் கொடுக்குமாறு ஸ்ரீஹரியிடம் கேட்டுள்ளார். செல்போனைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ஸ்ரீஹரி, பணத்தையோ மாற்றுச் செல்போனையோ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பள்ளி மாணவன் ஸ்ரீஹரியை சந்தித்து செல்போன் அல்லது பணத்தைக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஸ்ரீஹரி பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது எனச் சொல்லி, அந்த பள்ளி மாணவனை அடித்ததோடு, அசிங்கமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார்.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த பள்ளி மாணவனின் பெற்றோர், திருப்பூர் பேருந்து நிலையத்தில் சாலையோரம் செருப்புக் கடை வைத்துள்ளனர். இப்படியிருக்க, செல்போன் வாங்க சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, தன்னையும் அடித்த ஆத்திரத்தில் இருந்துவந்த பள்ளி மாணவன், ஸ்ரீஹரியை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டான். இதற்காக தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புதிய கறி வெட்டும் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு, நேற்று மதியம் (அக்.10) சுமார் 2 மணியளவில் ஸ்ரீஹரி வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது வீட்டினருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீஹரியை சந்தித்த பள்ளி மாணவன், சிறிதுநேரம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீஹரியை சரமாரியாக வெட்டத் தொடங்கினான். இதனைக் கண்ட ஸ்ரீஹரியின் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி மாணவன் வெட்டியதில் தலை, கை, கால், கழுத்து, வயிறு என பல இடங்களிலும் பலத்த காயமடைந்து ஸ்ரீஹரி கீழே சரிந்தார். இதையடுத்து பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், கேவிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஹரியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீஹரி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக கேவிஆர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவன் திருப்பூர் நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்தான்.  பணத் தகராறில் கல்லூரி மாணவன் ஒருவன் பள்ளி மாணவனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

லேப்டாப்பில் இருந்த அக்கா, தங்கையின் ஆபாசப் படங்கள்; கணவரை கம்பி எண்ண வைத்த மனைவி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப்பெண், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதால், குமாரபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் தங்கி, அங்குள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து வந்த இளங்கோ, அவ்வப்போது லீவ் போட்டு மனைவியைப் பார்ப்பதற்காக குமாரபாளையத்திற்கு வந்து சென்றுள்ளார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மனைவியை பார்ப்பதற்காக இளங்கோ குமாரபாளையம் வந்துள்ளார்.  அப்போது இளங்கோவின் லேப்டாப்பை பயன்படுத்துவதற்காக அவரது மனைவி திறந்து பார்த்தபோது, அதில் தன்னுடைய அக்கா மற்றும் தங்கையின் புகைப்படங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாக மாற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரின் செல்போனிலும் இந்த ஆபாச படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்.  ஆனால், இது எதுவுமே தனக்கு தெரியாது என்பதைப் போல காட்டிக்கொண்டவர், இந்த விஷயத்தை தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்கள் இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Scroll to Top