“எப்படி எனக்கு துரோகம் பண்ணலாம்?” – தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது அம்மிக் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொன்ற கணவன்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்டோபர் – பவிலா தம்பதியினர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள், திருப்பூர் வஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. 

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்த கிறிஸ்டோபர், குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவி பவிலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்றிரவு (அக்.10) குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபர், ‘எப்படி எனக்கு துரோகம் பண்ணலாம்!’ என மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே வார்த்தைகள் முற்றி கடும் வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி பவிலாவின் தலையின் மீது, கிறிஸ்டோபர் அம்மிக் கல்லை போட்டுள்ளார். இதில்,மண்டை உடைந்து ரத்தம் கொட்டி பவிலா இறந்தார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்துவிட்டு வீரபாண்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த கிறிஸ்டோபர், எந்தவித சலனமும் இல்லாமல் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் விவரித்துள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவியின் நடந்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரது தலையில் கல்லைப் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top