நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப்பெண், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதால், குமாரபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தங்கி, அங்குள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து வந்த இளங்கோ, அவ்வப்போது லீவ் போட்டு மனைவியைப் பார்ப்பதற்காக குமாரபாளையத்திற்கு வந்து சென்றுள்ளார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மனைவியை பார்ப்பதற்காக இளங்கோ குமாரபாளையம் வந்துள்ளார்.
அப்போது இளங்கோவின் லேப்டாப்பை பயன்படுத்துவதற்காக அவரது மனைவி திறந்து பார்த்தபோது, அதில் தன்னுடைய அக்கா மற்றும் தங்கையின் புகைப்படங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாக மாற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரின் செல்போனிலும் இந்த ஆபாச படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்.
ஆனால், இது எதுவுமே தனக்கு தெரியாது என்பதைப் போல காட்டிக்கொண்டவர், இந்த விஷயத்தை தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்கள் இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, இளங்கோவின் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.