“யார்கிட்டதான் போன் பேசுவியோ?” – கண்டித்த தாய்; இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவரது கணவர் சின்னப்பையன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் நதியா (வயது 19), பெரியசோரகையில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நதியாவுக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உள்ளனர். ராஜாத்தி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

கடந்த 10-ந் தேதி வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றிருந்த ராஜாத்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது நதியா வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் ராஜாத்தி, “லீவ் நாளிலாவது வீட்டில் வேலைகளைச் செய்யக்கூடாதா? ஆடு, மாடெல்லாம் தீவனம் இல்லாம இருக்கு… அப்படி நாள் முழுக்க யார்கிட்டதான் போன் பேசுவியோ?” என நதியாவைக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன்பின், நதியா வீட்டின் உள் அறையில் படுக்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை 7.30 மணி ஆகியும் அவர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. தாய் ராஜாத்தி அறைக் கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே பார்த்தபோது, நதியா வீட்டின் கூரையில் இருந்த இரும்பு ஆங்கிளில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு  அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து நதியாவை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நதியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Scroll to Top