இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய டிரைவர்; கொடூரமாகத் தாக்கி கோமாவில் தள்ளிய கணவன்
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் கோகுல்ராஜ் (34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் தேவராஜூக்கு தெரிய வந்துள்ளது. அதையடுத்து தன்னுடைய மனைவியைக் கண்டித்தவர், கோகுல்ராஜையும் நேரில் சந்தித்து ‘இனிமேல் என்னுடைய மனைவிக்கு நீ மெசேஜ் அனுப்பினால் நடப்பதே வேறு’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், அதன்பிறகும் கோகுல்ராஜ், தேவராஜின் மனைவிக்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தேவராஜ், அக்.11-ம் தேதி தனது நண்பர்களான நந்தகுமார் (19), பிரசாந்த் (23), தரனேஷ் (23) ஆகியோருடன் சென்று, தனியாக பேச வேண்டுமெனச் சொல்லி கோகுல்ராஜை அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து பேச்சு மூச்சற்று கீழே விழுந்த கோகுல்ராஜை, தூக்கி வந்து அவரது வீட்டினருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்த வந்த கோகுல்ராஜின் குடும்பத்தினர், அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, கோகுல்ராஜ் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கோகுல்ராஜின் தந்தை சிவராஜ், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவராஜ், நந்தகுமார், பிரசாந்த், தரனேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


