ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்… ‘கூகுள்பே’ மூலம் சிக்கியதன் பின்னணி! 

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவர்களுக்கான டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் நாமக்கல் பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

‘நாமக்கல்லுக்கு வந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம்’ என நிவாஸ் ஆசை காட்டவே, அதை நம்பி கபிலர் மலையைச் சேர்ந்த அந்த இளைஞர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திற்கு வந்த அவரை பைக்கில் பிக்கப் செய்துகொண்ட நிவாஸ், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாக்கியுள்ளார். அவரை மிரட்டி அவரது செல்போனில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.7 ஆயிரத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தக் கும்பல், இதே செயலியைப் பயன்படுத்தி நாமக்கல் அருகேயுள்ள வி.ஜி.பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி வலை வீசியது. அக். 9-ம் தேதி அந்த இளைஞரையும் நாமக்கல்லுக்கு வரவழைத்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, ரூ.10 ஆயிரத்தை பறித்தது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞரும் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பணம் பறித்த கும்பலின் கூகுள்பே விவரங்களை வைத்து தேடினர். இதில், பெரியப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் (19), தீபக் (20), ஜீவ பாரதி (20) மற்றும் சேந்தமங்கலம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த விஜய் (20) ஆகிய நால்வரும் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின் போது, கைதான நால்வரும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்ததும், உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், செய்திகளில் வந்த இதேபோன்று ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களைப் பார்த்து, தாங்களும் இப்படிச் செய்ததாகத் தெரிவித்துள்ளனர். நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிற செய்திகள்

Scroll to Top