ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த திங்களூர் அருகேயுள்ள பெரும்பாளி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு நீண்ட காலமாகவே பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டு வந்ததோடு, மயானத்திற்குச் செல்லும் வழியும் ஆதிக்கச் சாதியினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாராவது இறந்தால் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சடலத்தைச் சுமந்து சென்று, திங்களூர் ஊராட்சியில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் அடக்கம் செய்யும் அவல நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த சென்னி என்பவர் காலமானார். மயானத்தில் உடலத்தை அடக்கம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்ததால், இறுதிச் சடங்கின்போது இடையூறு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதியம் 1.30 மணியளவில் இறந்தவரின் உடலை ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கு திரண்ட 20-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் உடலை மயானத்திற்குள் எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்ற ரிதுபரன் என்பவர், போனில் யாரோ ஒருவரிடம் பேசிவிட்டு, பட்டியலின மக்களை நோக்கி, “இங்கதான் புதைப்பீங்களா… பண்ணாடிச்சிக்கிட்ட நாளைக்கு எதுக்கும் நீங்க வரக்கூடாது!” என அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நடக்கும்போது, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்புப் பிரிவு காவலர் கைலாஷ், நில வருவாய் ஆய்வாளர் அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி, கிராம உதவியாளர் கவிதா என அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர்.
அதிகாரிகள் கண்முன்னே, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் ரிதுபரனின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால், அங்கு நின்ற காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இப்பகுதி மக்களுக்காக ஊராட்சி நிதியிலிருந்து 2.90 லட்சம் செலவில் மயானத்திற்கு சுற்றுச்சுவர், போர்வெல், எரிமேடை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், சர்வே எண் 74/5-ல் உள்ள 0.17 ஹெக்டர் நிலம் ‘சர்க்கார் புறம்போக்கு மயானம்’ என கிராமக் கணக்கில் தாக்கலாகியுள்ளதோடு, இந்த மயானம் ‘அனைத்து மக்களுக்கும் பொதுவானது’ என பெருந்துறை வட்டாட்சியர் 17.02.2025-ல் அறிக்கை அளித்துள்ளார். இருப்பினும், அந்த மயானத்தைப் பயன்படுத்த விடாமல் ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர்.
பொது மயானத்தில் சடலத்தைப் புதைக்க விடாமல் தடுத்து, பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்கொடுமையைத் தடுக்கத் தவறிய திங்களூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர் கைலாஷ், வருவாய் ஆய்வாளர் அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி, உதவியாளர் கவிதா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை அளிக்கக் கோரி மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பது, ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய அவமானம். இது வெறும் சம்பவம் மட்டுமல்ல; ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.