தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பாறையில் கஞ்சி ஊற்றி சாப்பிட்ட பொதுமக்கள் –  மழை வேண்டி விநோத வழிபாடு! 

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள சாமராயபட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோயில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாறையின் மீது அமைந்துள்ளது.  இங்கு பெருமாள், முருகன், கல்யாண விநாயகர் சன்னதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையன்று மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (அக்.3) சாமராயபட்டி ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கஞ்சி சாதம்  தயாரித்தனர். கோயிலில் சாமி தரிசனம் முடிந்தபிறகு, பாறையின் மீது அமர்ந்த பொதுமக்களுக்கு பாறையில் உள்ள சிறு சிறு குழிகளில் கஞ்சி சாதம் ஊற்றப்பட்டது. நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என இறைவனை வேண்டி கஞ்சி சாதத்தை சாப்பிட்டனர்.  பல தலைமுறைகளாக இந்த வழிபாடு பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சாமராயபட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ‘கேஸ்’ லாரி… 10 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்  

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து, கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு கார்பன் டை ஆக்ஸைடு கேஸை ஏற்றிக்கொண்டு, கேரளாவைச் சேர்ந்த சஜித் (வயது 34) என்பவர் டேங்கர் லாரியை ஓட்டி வந்தார். திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் பிரிவு சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, டேங்கர் லாரியின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. பதறிப்போன டிரைவர் சஜித் லாரியை ஓரம்கட்டி, வண்டியில் இருந்த தீயணைப்புக் கருவியின் மூலம் தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால், சில நொடிகளிலேயே லாரியின் கேபின் பகுதி மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி டேங்க் பகுதிக்கு தீ பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீ விபத்தில் சேதமான டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு கேஸை மற்றொரு காலி டேங்கர் லாரியில் மாற்றினர். இதனால் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரது மாற்றம் செய்யப்பட்டது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

களமிறங்கிய ‘பட்டுச்சேலை பவாரியா கும்பல்’… கதறும் பட்டுச்சேலை வியாபாரிகள்!

வடமாநிலங்களில் இருந்து லாரிகளில் வந்து, ஒதுக்குப்புறமான வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் ‘பவாரியா’ கும்பலைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே பாணியில், தற்போது பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் டிப்-டாப்பாக வந்து, பட்டுச்சேலை கடைகளை குறிவைத்து அலறவிடும் ‘பட்டுச்சேலை பவாரியா கும்பல்’ ஒன்று தமிழகத்தில் களமிறங்கியுள்ளது.  சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள செட்டிகாரிச்சியூரைச் சேர்ந்தவர் ஜெயரங்கநாதன். இவர் தனது வீட்டிலேயே ‘ஜே.ஆர்.தேவஸ்ரீ ஹேண்ட்லூம்ஸ்’ என்ற பெயரில் கைத்தறி பட்டுச்சேலைகளை நெய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில், இவரது கடை வாசலில் ஒரு ஸ்கார்பியோ கார் வந்து நிற்க, அதில் இருந்து ‘டிப்-டாப்’ உடையில் 5 பெண்மணிகள் இறங்கியுள்ளனர். உள்ளே நுழைந்ததும் தெலுங்கில் படபடவெனப் பேசி, “கல்யாண பர்சேஸ்… நல்ல காஸ்ட்லியான பட்டுச்சேலைகளைக் காட்டுங்க” எனக் கேட்க, “ஆஹா.. பெரிய பார்ட்டி போலயே! இன்னைக்கு நல்ல வியாபாரம் தான்” என்ற நினைப்பில் ஜெயரங்கநாதனும் அவரது மனைவியும் பட்டுப்புடவைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். சேலைகளைப் புரட்டிப் பார்த்த அந்தக் கூட்டம், “இதெல்லாம் தனியா எடுத்து வைங்க, மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு வந்து வாங்கிக்குறோம்” என கேஷுவலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளது. அவர்கள் சென்றதும், வேறொரு கடைக்கு அனுப்ப வைத்திருந்த சேலைகளை சரிபார்த்த ஜெயரங்கநாதனுக்குப் பேரதிர்ச்சி! அதில் இருந்த 10 சேலைகளில் வெள்ளி ஜரிகை கொண்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 4 பட்டுச்சேலைகள் மிஸ்ஸாகியிருந்தன. பதறிப்போய் சிசிடிவி பதிவுகளை போட்டுப் பார்த்தபோதுதான் ஆந்திரக் கும்பல் அரங்கேற்றிய தில்லாலங்கடி வேலை தெரியவந்தது. கடைக்குள் வரும்போது இயல்பாக நடந்து வந்த பெண்கள், வெளியே செல்லும்போது வாத்து போல ‘டக் வாக்’ ஸ்டைலில் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. ஜெயரங்கநாதனின் கவனத்தைத் திசைதிருப்பி, புடவைகளை நைஸாகத் தங்களது கால்களுக்கு நடுவில் மறைத்து திருடிச் சென்றதை ஜெயரங்கநாதன் கண்டுபிடித்தார். இந்த சிசிடிவி ஆதாரத்துடன் மேச்சேரி போலீசில் புகாரளித்தார். மேச்சேரியில் தங்களது லீலையை அரங்கேற்றிய பட்டுச்சேலை பவாரியா கும்பல், அடுத்த ஸ்டாப்பாக ஓமலூர் பைபாஸ் சாலையில் உள்ள ‘கோவிந்தராஜ் சில்க்ஸ்’ கடைக்கு வண்டியை விட்டுள்ளது. அங்கும் போய் காஸ்ட்லியான பட்டுச்சேலைகளைக் காட்டச் சொல்லியுள்ளனர். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, 4 பட்டுச்சேலைகளைத் திருடியுள்ளனர். ‘சேலை எல்லாம் நல்லா இருக்கு, நாளைக்கு வாறோம்’ எனச் சொல்லிவிட்டு, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 பட்டுப்புடவைகளுடன் அங்கிருந்தும் எஸ்கேப் ஆகியுள்ளனர். ஒரே நாளில் இரண்டு கடைகளில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புடவைகளைச் சுருட்டிய இந்த ‘பட்டுச்சேலை பவாரியாக்கள்’ குறித்து தங்கள் தொழில் சார்ந்த வாட்ஸ்அப் குரூப்புகளில் மேற்படி கடை உரிமையாளர்கள் அலர்ட் மெசேஜ் கொடுத்தபோது தான், சேலத்தில் வேலையைக் காட்டியதற்கு முந்தைய நாள் (செப். 24), இந்தக் கும்பல் திருவண்ணாமலை மாட்டம், ஆரணியில் உள்ள ‘அமுதா சில்க்ஸ்’ பட்டுப் புடவைக் கடையில் புகுந்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 20 பட்டுப்புடவைகளை அசால்ட்டாக அமுக்கியது தெரியவந்தது. இந்த திருட்டுக் கும்பல் வந்த ஸ்கார்ப்பியோ காரின் நம்பரை வைத்து தட்டித் தூக்கலாம் என நினைத்து அந்தப் பதிவு எண் குறித்த விபரங்களைத் தேடியபோது, அது ஒரு பைக் நம்பர் என்பது தெரியவந்தது. போலி நம்பர் பிளேட் முதற்கொண்டு பக்காவாக திட்டமிட்டுக் களமிறங்கிய இந்தக் கும்பல், தமிழக போலீசாரையே தலை சுற்ற வைத்துள்ளது.   இதற்கிடையே,  கடந்த 2023-ல் இதைப் போன்றதொரு சம்பவம் மேச்சேரிக்கு சில கி.மீ தொலைவில் உள்ள நங்கவள்ளியில் நடைபெற்றதாகச் சொல்கின்றனர். அங்குள்ள உள்ள ஒரு பட்டுச்சேலைக் கடையில் 10 பேர் கொண்ட ஆந்திரக்  கும்பல் இதேபோல் சேலை திருட முயன்றபோது, உஷாரான கடை ஊழியர்கள் ஷட்டரை மூடுவதற்குள், 8 பேர் எஸ்கேப் ஆகிவிட 2 பெண்கள் மட்டும் சிக்கிக்கொண்டனர். அதே கும்பல் தான் இப்போது மீண்டும் ஆந்திராவில் இருந்து ‘ரீ-என்ட்ரி’ கொடுத்துள்ளதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போதெல்லாம் பட்டுப் புடவை கடைகளுக்குள் வந்து யாராவது தெலுங்கில் பேசி, “காஸ்ட்லியான புடவைகளைக் காட்டுங்க” என்று கேட்டாலே, வியாபாரிகள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘குடிப்பழக்கம் இல்லாததால் கொன்றோம்!’ – டிராவல்ஸ் உரிமையாளர் கொலையின் பகீர் பின்னணி!

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட டிராவல் உரிமையாளர் கொலையின் அதிர்ச்சிகரமான பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 23-ல் சத்தியமங்கலத்திற்கு வாடகைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கிடந்தது, ஜெயச்சந்திரன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த கார் மாயமாகி இருந்ததோடு, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க, போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜெயச்சந்திரனின் செல்போன் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக ஈரோடு புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ் (வயது 40) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. அதையடுத்து தன்ராஜைப் பிடித்து விசாரித்தனர். தன்ராஜ் தன் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 41) மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த அவரது நண்பர் பாலமுருகன் (வயது 42) ஆகியோருடன் சேர்ந்து, டிரைவர் ஜெயச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆனந்தன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘உசிலம்பட்டி அருகே ஒரு கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடச் சென்றுள்ளனர். ஆனால், அந்தக் கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால், கோயில் உண்டியலை பாதுகாப்புக்காக கோயிலினுள் வைத்து பூட்டியிருந்துள்ளனர். இதனால் மூவரும் ஏமாற்றத்துடன் உசிலம்பட்டிக்குத் திரும்பியுள்ளனர். ஏதாவது ஒரு காரைத் திருடி விற்று காசு பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டவர்கள், உசிலம்பட்டி கார் ஸ்டாண்டில் நின்றிருந்த ஜெயச்சந்திரனின் காரைப் பார்த்து, அதிலிருந்த ஜெயச்சந்திரனின் நம்பருக்கு ஃபோன் செய்து, சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர். டிரைவரை அதிகளவில் மது குடிக்க வைத்து மட்டையாக்கிவிட்டு, காரை திருடிச் செல்வதே மூவரின் திட்டமாக இருந்துள்ளது. சத்தியமங்கலத்திற்கு வந்தபின் ஜெயச்சந்திரனை மது குடிக்க அழைத்துள்ளனர். ஆனால், ஜெயச்சந்திரனோ தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக்கூறி மறுத்துள்ளார். இதனால் திட்டத்தை மாற்றிய திருட்டுக் கும்பல், ஜெயச்சந்திரனை கொலை செய்துவிட்டு காரை திருடிச்செல்ல முடிவு செய்தனர். அதன்படி, பவானிசாகர் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் அருகே வந்ததும், காரை ஓரம்கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது திடீரென காருக்குள்ளேயே மூவரும் சேர்ந்து டிரைவர் ஜெயச்சந்திரனின் கழுத்தைக் துணியால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசியுள்ளனர். பின்னர் ஜெயச்சந்திரனின் காரைக் திருடிச் சென்ற மூவரும், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஸ்கிராப் கடையில் ரூ.90 ஆயிரத்திற்கு விற்று, பணத்தைப் பங்கிட்டுக் கொண்டதும் தெரியவந்தது.’ மேட்டுப்பாளையம் ஸ்கிராப் கடையிலிருந்த ஜெயச்சந்திரனின் காரை மீட்ட போலீசார், மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனர். இந்த 3 பேரும் ஏற்கனவே கூட்டு சேர்ந்து பைக் திருட்டு, கோயில் உண்டியல் திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பதும் தெரியவந்தது. மூன்று கயவர்களின் பேராசையால் ஓர் அப்பாவியின் உயிர் பறிபோனதோடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

இளைஞரை நிர்வாணமாக்கி… கத்தி முனையில் ஐபோன், தங்கச் சங்கிலி பறிப்பு – திருநங்கை கும்பல் அட்டூழியம்! 

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள சின்னியம்பாளையம் கண்ணாங்காடுமேட்டைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22).  ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப். 25ஆம் தேதி மாலை, ஈரோடு சோலார்புதூரில் உள்ள டாஸ்மாக் பாருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இருவர், ஆகாஷிடம் மது குடிக்க பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். ஆகாஷ் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள் ஆகாஷின் கையிலிருந்த ஐஃபோனை பறித்துள்ளனர்.  “செல்போன் வேண்டுமென்றால் இந்த விலாசத்துக்கு வா!” என, சோலார் அருகேயுள்ள பாலுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். தன்னுடைய செல்போனை மீட்க வேண்டும் என்கிற பதற்றத்தில் ஆகாஷூம் அங்கு சென்றுள்ளார். அந்த வீட்டுக்குள் நுழைந்த மறுநொடியே டாஸ்மாக் பாரில் செல்ஃபோனை பறித்த 2 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆகிய மூவரும் கதவை உள்பக்கமாகப் பூட்டி, ஆகாஷின் உடைகளைக் கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி மிரட்டி உட்கார வைத்துள்ளனர். ஜி பே மூலம் ஆகாஷின் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களது அக்கவுண்ட்டிற்கு மாற்றியுள்ளனர். மேலும், ரூ.2 லட்சம் பணம் கேட்டு அக்கும்பல் ஆகாஷை கடுமையாகத் தாக்கியுள்ளது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஆகாஷ் சொல்ல, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். அங்கிருந்து தப்பிவந்த ஆகாஷ், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பாலுசாமி நகரைச் சேர்ந்த சசிகுமார் (வயது 34), திருநங்கை சுபி என்ற நந்தினி (வயது 22) மற்றும்  46 புதூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் ஈரோடு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி திருநங்கை சுபி (எ) நந்தினியை கோவை பெண்கள் மத்திய சிறையிலும், சசிக்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கோபியில் உள்ள மாவட்டச் சிறையிலும் அடைத்தனர். கைது செய்யப்பட்ட திருநங்கை மீது ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கு இருப்பதாகவும், சசிகுமார் மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஸ்விஃப்ட் காரில் வாழைத்தார் திருட்டு – சிக்கிய காய்கறி வியாபாரி!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டமுத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (வயது 40). இவர் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். சமீபத்தில் இவரது தோட்டத்திற்கு அருகேயுள்ள கருப்புசாமி மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரது தோட்டத்தில் வாழைத்தார்கள் திருடு போயின. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பிரபாகரனும், அவரது தந்தை செளந்தரராஜனும் தினமும் இரவு நேரங்களில் தங்களுடைய தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை (செப். 27) சுமார் 4.30 மணியளவில் தோட்டத்தில் சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் வாழத்தார்களை வெட்டி சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்விஃப்ட் காரில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த பிரபாகரன் மற்றும் அவரது தந்தை, பக்கத்து தோட்டத்து விவசாயிகள் உதவியுடன் வாழைத்தாரை காரில் ஏற்றிக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து, சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வாழைத்தாரை திருடியவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 31) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவிநாசியில் காய்கறிக் கடை வைத்துள்ள வேல்முருகன், தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப நாட்களில் இரவு நேரத்தில் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு தோட்டங்களில் நோட்டமிட்டு, வாழைத்தார்களை திருடி வந்ததுடன், அவற்றை தன்னுடைய கடையில் வைத்து வியாபாரமும் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து, வேல்முருகன் திருடிய ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள 16 வாழைத்தார்கள், திருட்டிற்குப் பயன்படுத்திய ஸ்விஃப்ட் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கழுத்து எலும்பை உடைத்து கொலை… போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை! – டிராவல்ஸ் உரிமையாளருக்கு நடந்தது என்ன? 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகேயுள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த செப்.23 ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துகிடந்தவர் குறித்த தகவல் எதுவும் இல்லாததால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், உயிரிழந்தவரின் ஃபோட்டோவை போலீசாரின் வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்து, அவர் யாரென அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரமாபிரபா (வயது 48) என்ற பெண்மணி தனது உறவினர்களுடன் பவானிசாகர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். ‘செப்.22 ஆம் தேதி இரவு, சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு செல்வதாக ஸ்விப்ட் டிசையர் காரில் கிளம்பிய என்னுடைய கணவர் ஜெயச்சந்திரன் (வயது 50) வீடு திரும்பவில்லை. அவருக்கு ஃபோன் செய்தாலும் போகவில்லை. அதையடுத்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் நான் புகார் கொடுக்கச் சென்றபோது, வாய்க்காலில் கிடைத்த சடலத்தின் ஃபோட்டோவை செல்ஃபோனில் காட்டினார்கள். அது எனது கணவர் ஜெயச்சந்திரன் தான் என்பது தெரியவந்தது’ என பவானிசாகர் போலீசாரிடம் கூறியுள்ளார்.  அதன்பிறகு தான் வாய்க்காலில் சடலமாகக் கிடந்தது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50) என்பதும், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த அவர்  சத்தியமங்கலத்துக்கு வாடகைக்கு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், ஜெயச்சந்திரனின் உடல் கிடந்த இடத்தில் அவர் ஓட்டிவந்த கார் இல்லாததும், செல்போன், பர்ஸ் ஆகியவையும் காணாமல் போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில், ஜெயச்சந்திரனின் கழுத்து எலும்பு உடைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் இயற்கையாக உயிரிழக்கவில்லை, கழுத்தை நெரித்தோ அல்லது பலமாகத் தாக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றினர். சத்தியமங்கலம் டி.எஸ்.பி முத்தரசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜெயச்சந்திரனின் செல்ஃபோன் ஹிஸ்டரி மற்றும் டவர் லொகேஷனை வைத்து அவரை மதுரையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு அழைத்து வந்தது யார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? வாடகைக்கு வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமா? அல்லது காரை திருடுவதற்காக வாடகைக்கு அழைத்துவந்து திட்டமிட்டுக் கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘ஒட்டகம்’ என கூப்பிட்ட ஒரே காரணம்… கழிவறையில் +1 மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் – கொலை முயற்சி வழக்கில் சக மாணவன் கைது!

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஓசைப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவனும், பவானி காடையாம்பட்டியைச் சேர்ந்த மற்றொரு மாணவனும் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1-ல் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். காடையாம்பட்டியைச் சேர்ந்த மாணவன் உயரமாக இருப்பதால் ‘ஒட்டகம்’ என பட்டப்பெயர் வைத்து ஓசைப்பட்டி மாணவன் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், செப். 24-ல் ஓசைப்பட்டி மாணவர் காடையாம்பட்டி மாணவரை மீண்டும் ‘ஒட்டகம்’ என அழைத்ததால் இருவருக்குமிடையே வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அதையடுத்து, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குச் சென்ற ஓசைப்பட்டி மாணவரை, காடையாம்பட்டி மாணவன் பின்தொடர்ந்து சென்று கடுமையாகத் தாக்கியதோடு, அவரது தலையைப் பிடித்து சுவற்றில் பலமாக மோதியுள்ளார். இதில் அந்தச் சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் சொல்ல, பேச்சு மூச்சில்லாமல் கிடந்த மாணவனை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாணவனின் உடல்நிலை மோசமடையவே, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் நிலைமை கவலைக்கிடமாகவே, கோவை ‘ராயல் கேர்’ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று மதியம் (செப்.25) பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் உறவினர்கள் திரண்டு வந்து, மாணவனின் மருத்துவச் செலவுக்குப் பணமின்றி தவிப்பதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டுமெனவும் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலர் ரவிக்குமார், ஏடிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து ரூ. 1 லட்சம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திடம் வழங்கினர். சிகிச்சைக்கு இந்தத் தொகை போதாது என்பதால், மாவட்ட நிர்வாகமும், அரசாங்கமும் மாணவனின் முழு மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய காடையாம்பட்டி மாணவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, பவானி போலீசார் கைது செய்தனர். பின்னர், ஈரோடு மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘நாங்க என்ன குப்பையா… இல்ல கொத்தடிமையா?’ – அதிகாரிகளின் அலட்சியத்தால் அரளிவிதையை சாப்பிட்ட டாஸ்மாக் ஊழியர்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – பண்ணாரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 3588-ல் சேல்ஸ்மேன் ஆகப் பணியாற்றி வருபவர் வேலுசாமி. இவர் கடந்த செப். 17-ல், தனக்கு ஒரு வாரமாகவே உடல்நிலை சரியில்லை என்றும், கால் மரத்துப்போய் நிற்கக்கூட முடியவில்லை எனச் சொல்லி கடையின் சூப்பர்வைசரான பழனிசாமியிடம் லீவ் கேட்டுள்ளார். ஆனால், பழனிசாமி லீவ் கொடுக்க மறுத்ததோடு ‘ஒழுங்காகப் போய் வேலையைப் பார். இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போ!’ என்று வேலுசாமியிடம் கடுமையாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, வேலுசாமி மறுநாள் காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆனந்தகுமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது உடல்நிலை குறித்து விளக்கியதோடு, சூப்பர்வைசர் தன்னிடம் நடந்துகொண்ட முறை குறித்தும் சொல்லி லீவ் கேட்டுள்ளார். ஆனால், மாவட்ட மேலாளரோ, ‘என்ன நடிக்கிறீயா? இப்ப பைக்கில தானே வந்த, எனக்கும் தான் கால் மரத்துப்போகுது’ என அலட்சியமாகப் பேசியதோடு, ‘அந்த ஆளை வெளியே போகச்  சொல்லு’ என வேலுசாமியை விரட்டியடித்துள்ளார். உயரதிகாரிகளின் இந்த செயல்பாடுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வேலுசாமி, செப். 19-ல் தேதியன்று தனது வீட்டினருகே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாகச் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலுசாமி, தற்போது உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்கொலை முயற்சியின் போது அரளிவிதையை சாப்பிட்டுக் கொண்டே நடந்த சம்பவங்களை விளக்கி, வேலுசாமி தன்னுடைய செல்ஃபோனில் செல்ஃபி வீடியோவாக எடுத்து தன்னுடைய சக ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.  அதில் பேசும் வேலுசாமி, “ 23 வருஷமாக மாடு மாதிரி உழைச்சிருக்கேன். தினமும் 10 மணி நேரம் நிக்கிறோம். கால் எல்லாம் மரத்துப்போச்சு. மெடிக்கல் லீவ் எங்களோட உரிமை. அதைக்கேட்டா அசிங்கப்படுத்துவீங்களா? நாங்க என்ன குப்பையா? இல்ல நவீன கொத்தடிமையா?” என்றதோடு டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில், ஊழியரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் நடந்துகொண்ட டாஸ்மாக் சூப்பர்வைசர் பழனிசாமி மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆனந்தகுமார் ஆகிய இருவரிடமும் உரிய விசாரணை நடத்தித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சரிசெய்ய, தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அவை கண்டுகொள்ளப்படுவது இல்லை. குடி குடிப்பவருக்கு மட்டும் ஆபத்து இல்லை, அதை விற்பனை செய்பவருக்கு ஆபத்து தான் போல!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘காட்டிக் கொடுத்த ஜிபே’ – கையும் களவுமாகச் சிக்கிய ‘கல்லா’ அதிகாரிகள்   

‘கையில ரொக்கமா லஞ்சம் வாங்கினாத்தானே சிக்குவோம்!’ என ஐடியா மணி போல யோசித்து, ‘ஜி-பே பண்ணிடுங்க பாஸ்’ என டிஜிட்டல் முறையில் கல்லா கட்டிய அரசு அதிகாரிகளை ரெய்டு நடத்தி அதிர வைத்திருக்கிறது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை! கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி வரை ஒப்பந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்குச் சொந்தமான 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (செப். 22) சோதனையில் நடத்தினர்.   அந்தவகையில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் 12 பேர் கொண்ட டீம், மாலை 4 மணியளவில் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நுழைந்தது. இரண்டு பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, நகராட்சி அலுவலகத்தை தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனைகளின் போது அலுவலக மேஜை டிராயர்கள், ஃபைல்கள் ஆகியவற்றையே அதிகாரிகள் தேடுவார்கள். ஆனால் இம்முறை, நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்களையும் அதிரடியாகப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புப் படையினர், அவர்களின் ஜி-பே, போன்பே உள்ளிட்ட UPI ஆப்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அலசி ஆராய்ந்தனர். இரவு 11 மணி வரை சுமார் 7 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற இந்த ரெய்டில், கணக்கில் காட்ட முடியாத சந்தேகத்திற்கு இடமான முறையில் ஜி-பே மூலம் மட்டும் ரூ.6,53,767 பெறப்பட்டது தெரியவந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் அரவிந்த் என்பவரது ஜி-பே கணக்கில் ரூ.5,53,767 பணமும், நகராட்சி மேலாளர் செல்வகுமார் என்பவரது கணக்கில் ரூ.1,00,000 பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்தவித உரிய ஆவணங்களையோ அல்லது நியாயமான விளக்கத்தையோ அளிக்க முடியாமல் இரு அதிகாரிகளும் திணறிப் போயினர். இதனைத் தொடர்ந்து, கணக்கில் வராத பணத்தை ஆன்லைனில் பெற்ற லஞ்சப் பணம் என சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மேலாளர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்தச் சோதனையின் போது சிக்கிய சந்தேகத்திற்குரிய 11 முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளின் பற்றிய விசாரணையில் இறங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி வேட்டை, ‘இனி ஜி-பேவில் வாங்கினாலும் தப்பிக்க முடியாது’ என ஊழல் அதிகாரிகளிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top