தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.600-க்காக அக்கப்போர்… நண்பன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சுள்ளான்கள் கைது! 

ஈரோடு திண்டல் அருகேயுள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (வயது 43) தனியார் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர்களது மகன் கோபிநாத் (வயது 22), மேட்டுக்கடையில் உள்ள ஒரு டுவீலர் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரின் நண்பரான ஈரோடு உழவன் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் (வயது 21), கார் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். கோபிநாத் ஜீவானந்தத்திடம் ரூ.600 பணம் கடனாகப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டப்போது, கோபிநாத் ஜீவானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், செப் 20ஆம் தேதி தாங்கள் வேலை செய்யும் ஒர்க்‌ஷாப்பில் இருந்த வாடிக்கையாளரின் காரை எடுத்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தனது தம்பி (17 வயது) மற்றும் நண்பரான ஜேக் (எ) நவீன் (வயது 21) ஆகியோருடன் கோபிநாத்தின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரவு 1.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, கோபிநாத்தின் தாய் ஜோதி ஜன்னல் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்றிருந்த ஜீவானந்தம் உள்ளிட்ட கும்பல் கண்மூடித் திறப்பதற்குள் பெட்ரோல் பாட்டிலில் தீயைக் கொளுத்தி வீட்டின் மீது வீசியுள்ளனர். இதில் ஜன்னல் அருகே நின்ற ஜோதியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய ஜேக் (எ) நவீன், ஜீவானந்தம் மற்றும் அவரின் 17 வயது தம்பி ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். ஜேக் (எ) நவீன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை ஈரோடு நீதிக் குழுமத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘ரெட் லைட்’ ஏரியாவில் ரகசிய வாழ்க்கை..! – 5 வருடங்களுக்குப் பின் சேலம் ‘சூட்கேஸ்’ கொலையாளி சிக்கியது எப்படி? 

சேலம் நகரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சூட்கேஸ் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப் பெண், தனிப்படை போலீசாரிடம் சிக்கிய பின்னணி சினிமாவை விஞ்சுவதாக உள்ளது.   2021ஆம் ஆண்டு அக்., 15ஆம் தேதி, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலுள்ள ஒரு ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிந்தது. அதை திறந்து பார்த்த போது கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு அழுகிய பெண் சடலம் இருந்தது போலீசாரை அதிரவைத்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ் மண்டல் (வயது 27) என்பதும், பெங்களூரூவிலிருந்து சேலம் வந்து பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வந்ததும் தெரியவந்தது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீசார், தேஜ் மண்டலின் ஸ்பாவில் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நிஷிரஃபி ஷேக், அவரது கணவர் லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய நான்கு பேர் இணைந்து இக்கொடூரத்தைச் செய்துவிட்டு தலைமறைவானது அம்பலமானது. ஸ்பா என்ற பெயரில் பலான தொழில் செய்து லட்சங்களை குவிந்த வந்த தேஜ் மண்டல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை தராமல் ஏமாற்றிய ஆத்திரத்தில், தேஜ் மண்டலின் கழுத்தை இறுக்கிக் கொன்று, அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்தக் கும்பல் கொலை சம்பவத்திற்குப் பிறகு தங்களின் சொந்த நாடான வங்கதேசத்திற்குத் தப்பியோடியது. ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதனிடையே, வங்கதேசத்தில் சில காலம் பதுங்கியிருந்த நிஷிரஃபி ஷேக் (வயது 28), போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மீண்டும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தஞ்சமடைந்த அவர், அங்குள்ள ‘ரெட் லைட்’ ஏரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். கொலையாளிகள் பயன்படுத்தி வந்த போலி ஆதார் கார்டை எண்ணை, போலீசார் ‘டிரேஸ்’ செய்துவந்தனர். இந்தச் சூழலில்,  நிஷிரஃபி ஷேக் புனேவில் புதிய அடையாளத்துடன் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சேலம் போலீசாருக்குக் கிடைத்தது. அதையடுத்து சேலம் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சேலம் தனிப்படைப் போலீசார் மகாராஷ்டிரா சென்று, புனே போலீசாரின் உதவியுடன் வீட்டிலிருந்த நிஷிரஃபி ஷேக்கை அதிரடியாகக் கைது செய்து சேலத்திற்குக் கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிஷிரஃபி ஷேக் சிக்கியுள்ள நிலையில், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அவரது முதல் கணவர் உள்ளிட்ட எஞ்சிய மூன்று கொலையாளிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

எவ்வளவு ‘ஸ்பீடு’ போகுதுன்னு பாக்கலாம்… விபரீத விளையாட்டால் அப்பளமாய் நொறுங்கிய ரூ.2 கோடி சொகுசு கார்! 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கிஷோர். அப்பகுதியைச் சேர்ந்த பிரபல சேமியா நிறுவன உரிமையாளரின் மகன் எனச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தம் புதிய BMW M4 COMPETITON காரை வாங்கியுள்ளார். தனது நண்பரான விஸ்வக் சக்கரவர்த்தி என்பவரிடம் புது காரை காண்பிப்பதற்காக திருப்பூருக்கு வந்துள்ளார். கிஷோர் விஸ்வக் சக்கரவர்த்தியை தனது புதிய BMW காரில் ஏற்றிக்கொண்டு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சென்றுள்ளார். அப்போது புது கார் எவ்வளவு ஸ்பீட் போகிறது என்பதை பரிசோதிப்பதற்காக, மிக அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது. குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் அருகே முன்னே சென்ற ஈச்சர் சரக்கு வேனை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேனின் பின்புறத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில்  வட்டமடித்து சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, எதிர்ப்புற சாலையில் பாய்ந்து சென்று நின்றது. கார் மிக அதிவேகத்தில் வந்ததால், விபத்தின்போது சுமார் 100 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் அதன் பின்புற டயர் கழன்று சுமார் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில், காரை ஓட்டிவந்த கிஷோர் லேசான காயங்களுடன் தப்பிக்க, விஸ்வக் சக்கரவர்த்தி பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள விஸ்வக் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பிறந்தநாள் விழா, இறந்தநாளாக மாறிய சோகம் – அதிவேகத்தால் பலியான கல்லூரி மாணவன், மாணவி!

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கந்தம்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவுதம் (வயது 21). கரூர் தலவபாளையத்தில் உள்ள குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு EEE படித்து வந்தார். இவருடன், நாமக்கல் மாவட்டம், மோகனூர் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மதுப்பிரியா (வயது 20), நாமக்கல் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் காமினி (வயது 20), நாமக்கல் அலைவாய்பட்டியைச் சேர்ந்த அருள் மகள் அனுசியா (வயது 20) மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முத்துசாமி மகள் தேவதர்ஷினி (வயது 20) ஆகிய 4 மாணவிகளும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்வதற்காக கெளதம், தனது உறவினர் காரை வாங்கி வந்துள்ளார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், கெளதம் மற்றும் 4 மாணவியரும், பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் கரூருக்கு கிளம்பியுள்ளனர். மாலை 5 மணியளவில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் தனியார் பள்ளி அருகே அதிவேகமாக சென்றபோது, கவுதமின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி நொறுங்கியது. இதில், காரை ஓட்டிய கவுதம் மற்றும் காரின் முன் இருக்கையில் பயணித்த மதுப்பிரியா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த மற்ற 3  மாணவிகளும் படுகாயமடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காயமடைந்த மாணவிகளை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பிரேதப் பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவுதம் மற்றும் மதுப்பிரியாவின் உடல்களைப் பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதது காண்போரை கலங்கடித்தது. இந்த விபத்து தொடர்பாக, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘லாபம் கொட்டும்… நிறைய முதலீடு செய்யுங்க’ – ஆன்லைன் செயலியை நம்பி ரூ.16 லட்சத்தை பறிகொடுத்த நபர்!

‘பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’ என ஆசை வார்த்தை காட்டி, பெருந்துறையைச் சேர்ந்தவரிடம் ரூ.16.19 லட்சத்தை ஆன்லைன் செயலி மூலம் சுருட்டிய கும்பலை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களைச் சமூக வலைதளங்களில் தேடி வந்த நிலையில், அவரது வாட்ஸ்-அப்க்கு பங்குச்சந்தை தொடர்பான ஆலோசனைகள் வந்துள்ளது. ‘எந்த நிறுவன பங்குகளை எப்போது வாங்கினால் லாபம் கிடைக்கும்?’ என அந்த மெசேஜில் இருந்த தகவல்களின்படி கார்த்திகேயன் முதலீடு செய்ய, அவருக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துள்ளது. கார்த்திகேயன் தங்களின் வலையில் விழுந்துவிட்டதை உறுதி செய்த அந்த ஆன்லைன் கும்பல், தங்களுடைய சீட்டிங் வேலையை காட்டத் தொடங்கியது. ‘இந்த பிரத்யேக செயலியை (App) பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம்’ எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். அதை முழுமையாக நம்பிய கார்த்திகேயன், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.16.19 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அவர் பணத்தை முதலீடு செய்யச் செய்ய, டிரேடிங்கில் அந்தப் பணம் பல்கிப் பெருகி, லட்சக்கணக்கில் லாபம் வந்ததைப் போல செயலியில் காட்டியுள்ளது. இதைப்பார்த்த கார்த்திகேயன்,  தன் பணம் பெருகி வருகிறது என்ற ஆசையில் இருந்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, ஆன்லைன் செயலியில் காட்டிய பெரிய தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தபோது, அந்த ஆன்லைன் செயலியே போனிலிருந்து மாயமாகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், இது குறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ்-அப் எண்களை வைத்து ஆன்லைன் மோசடிக் கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கைகூடாத காதல்… சோகத்தில் கல்லூரி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு! 

ஈரோடு, பெரியசேமூர் தென்றல் நகர் பகுதியைச்  சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரம்யாஸ்ரீ (வயது 26). பெற்றோருடன் சூரம்பட்டி குமணன் வீதியில் வசித்து வந்தார். எம்.இ. பட்டதாரியான ரம்யாஸ்ரீ, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது இவருக்கும், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், ரம்யாஸ்ரீக்கு அந்த இளைஞர் மீது காதல் வந்துள்ளது. ஆனால், அந்த இளைஞரோ, “நீங்கள் என்னை விட 2 வயது மூத்தவர். இதனால் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” எனக்கூறி, ரம்யாஸ்ரீயின் காதலை ஏற்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.  இதனால் ரம்யாஸ்ரீ மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞர் ஏற்கனவே காதலித்து வந்த ஒரு பெண்ணை, இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததும் ரம்யாஸ்ரீ மேலும் உடைந்து போயுள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞரின் தாயார் ரம்யாஸ்ரீக்கு போன் செய்து, “என்னுடைய மகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்தால், அவனது குடும்ப வாழ்க்கையில் உன்னால் பிரச்னை வந்துவிடும். எனவே, இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்ய வேண்டாம்!” எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல் சோகத்தில் மூழ்கியிருந்த ரம்யாஸ்ரீ, கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். தொடர்ந்து நீடித்த மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீசார், ரம்யாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஆர்டரே பண்ணல… ஆனா பேங்க்ல இருந்து ரூ.1.76 லட்சம் காலி! – ஈரோடு ஊழியருக்கு நேர்ந்த பகீர் சம்பவம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்மையன்புதூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (56). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், வீட்டில் இருந்தபடியே மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது குறித்து ஆன்லைனில் தேடியுள்ளார். அவர் தேடிய சில மணி நேரங்களிலேயே அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், மிகவும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பெற இந்த ஷாப்பிங் செயலியைப் இன்ஸ்டால் செய்யுங்கள் எனக் கூறி ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.  ஆஃபர் ஆசையால் அந்த லிங்கை க்ளிக் செய்து செயலியைத் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியைத் திறந்து பொருட்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியலை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்துள்ளார். எந்தவொரு பொருளையும் அவர் ஆர்டர் செய்யவில்லை, பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை.  ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமலேயே ரூ. 1,76,099 மாயமாகியிருப்பது தெரியவந்து அதிர்ந்து போனார். இழந்த  பணத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓடும் ரயிலில் கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம் – சிக்கிய 50 வயது ‘சில்மிஷ’ ஆசாமி!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரூவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூரூவில் இருந்து மதுரைக்குச் செல்ல மைசூரு–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், 17ஆம் தேதி அதிகாலை ஈரோடு ஸ்டேஷனைத் தாண்டி ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதே பெட்டியில் இளம்பெண்ணின் இருக்கைக்கு மேலே உள்ள இருக்கையில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், மெதுவாக அப்பெண்ணின் அருகில் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்டு சக பயணிகள் திரண்டு, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரைப் பிடித்து கரூர் ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகரைச் சேர்ந்த செல்வவிநாயகன் (வயது 50) என்பது தெரிந்தது.  சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு ரயில் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், செல்வவிநாயகனை ஈரோடு ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Uncategorized, தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஏன் ஸ்கூலுக்கு வரல..?” – கேள்வி கேட்ட தலைமையாசியரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கர்னல் (54). இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்கள் 6 பேர், தினசரி வகுப்புகளுக்கு வராமல், நேரடியாக காலாண்டுத் தேர்வெழுத மட்டும் வந்துள்ளனர். இந்தத் தகவல் பள்ளியின் தலைமையாசிரியரான கர்னல் கவனத்துக்கு சென்றுள்ளது. அதையடுத்து அவர் அந்த மாணவர்களை அழைத்து, பள்ளிக்கு தொடர்ச்சியாக வராததற்கான காரணத்தைக் கேட்டு விசாரித்துள்ளார். மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்ல,  “ஸ்கூலுக்கு தொடர்ந்து வராமல், தேர்வெழுத அனுமதிக்க முடியாது” எனச் சொல்லி கண்டித்து அனுப்பியுள்ளார்.   சிறிது நேரத்தில் திபுதிபுவென தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த அந்த பிளஸ் டூமாணவர்கள், தலைமையாசிரியரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாணவர்கள் தாக்கியதில் தலைமையாசிரியர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. காயமடைந்த தலைமையாசிரியரை கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பள்ளிக்குத் திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை தனித்தனியாக அழைத்து  விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் அவர்கள், “தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான செயல். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் வழியை மறிப்பியா?” – 70 வயது முதியவர் மீது டிராக்டரை ஏற்றிச் சாய்த்த கொடூரன்! 

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளநாயக்கர் (வயது 70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவருக்கும் இடையே தோட்டத்திற்குச் செல்லும் வண்டித்தடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் ரங்கசாமி தனது டிராக்டரில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காளநாயக்கர், ரங்கசாமியின் டிராக்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். “வண்டித்தடப் பிரச்சனை முடியும் வரை, இந்தப் பாதையில் வரக்கூடாது!” என  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த ரங்கசாமி, தான் ஓட்டி வந்த டிராக்டரை முதியவர் காளநாயக்கர் மீது ஏற்றியுள்ளார். டிராக்டர் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் துடிதுடித்து இறந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் பவானி போலீசார் காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பவானி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தேடி வருகின்றனர். வண்டித்தடப் பிரச்சனையில் 70 வயது முதியவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top