தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“பள்ளி விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்தேனா?” – கே.கே.சி.பாலு ஆவேசம்… 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளை மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாக விவகாரம், கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.  பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசித் தீர்ப்பதாகக் கூறி, ரூ.1 கோடி ரொக்கப் பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு ‘கட்டப் பஞ்சாயத்து’ செய்வதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு மீது ஈரோடு எஸ்.பியிடம் அறக்கட்டளைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பரபரப்பு புகார் அளித்திருந்தார். அறக்கட்டளை தலைவரான மாமனார் ஈஸ்வரமூர்த்திக்கும், பள்ளியின் தாளாளரும் அவரது சொந்த மருமகனுமான பிரவீனுக்கும் இடையே எழுந்த குடும்ப மற்றும் நிர்வாக மோதலில், அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு மிரட்டுவதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘தி வெஸ்ட்’ ஊடகத்திற்கு கொ.ம.தே.க மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு மற்றும் அவரது வழக்கறிஞர் பிரத்யேக விளக்கமளித்துள்ளனர்.   “எந்த மோசடியும் செய்யவில்லை; தேடி வந்தது அவர்தான்!” தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த கே.கே.சி.பாலு, “நான் எந்த மோசடியும் செய்யலைங்க. அப்படி ஏதாவது தப்பு செஞ்சிருந்தாத்தானே பயப்படணும்? அவங்களேதான் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தாங்க. இரண்டு தரப்பும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்க. அந்த ஒப்பந்தத்துல என்ன சொல்லப்பட்டிருக்கோ, அதன்படிதான் நான் நடந்துகிட்டேன். மற்றபடி எந்தப் பணத்தையும், நில ஆவணத்தையும் நான் என்னோட வச்சுக்கலை. எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குங்க! அந்த மனசாட்சிக்கு விரோதமில்லாம, எந்த பைசாவும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, சொந்த உறவுங்கிற முறையில் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி வைக்கத்தான் நான் முயற்சி செஞ்சேன். ஆனா அவங்க அதைச் சரியா பயன்படுத்திக்கலை. அவங்களுக்குள்ள எந்த புரிதலும் இல்லாம போயிடுச்சு.” இந்த விவகாரத்துல நான் தானா போய் தலையிடவே இல்லை. ஈஸ்வரமூர்த்தி ஆளுங்கதான் என் வாசலைத் தேடி வந்தாங்க. ஒரு தடவை இல்லைங்க… நாலு தடவை வந்தாங்க! அதுமட்டுமில்லாம, ஒரு மிகப்பெரிய விஐபியோட ரெகமெண்டேஷன்ல ‘இதை முடிச்சுக்கொடுங்க’னு சொல்லி வந்தாங்க. ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் இதைச் செய்ய வந்தேன். ஆனா, கடைசியில என்னையவே கேவலமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விவகாரத்துல இருந்து நான் ஒதுங்கிட்டேன். ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும், ஆவணத்தையும் பிரவீன்கிட்டேயே கொடுத்துட்டோம். இனி ஈஸ்வரமூர்த்தி பிரவீன்கிட்ட போயி கேட்டுக்க வேண்டியதுதான்!” எனத் தெரிவித்தார். “சட்டப்பூர்வ சமரசமே… கட்டப்பஞ்சாயத்து அல்ல!” கே.கே.சி.பாலுவின் வழக்கறிஞர் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், “இரு தரப்பினரும் தாங்களாகவே முன்வந்துதான் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தார்கள். அதற்காக 90 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஈஸ்வரமூர்த்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தை மீறியதாலேயே, விதிமுறைகளின்படி பணமும் ஆவணங்களும் பிரவீனிடம் ஒப்படைக்கப்பட்டன. சட்டத்தில் Alternate Dispute Resolution – ADR முறைக்கு இடமிருக்கிறது. அதாவது இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் ஒரு பொதுவான நபரை நாடலாம். அதனடிப்படையிலேயே இரு தரப்பும் ஒப்புக்கொண்ட பொதுவான நபராக கே.கே.சி.பாலு பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் ஒன்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் அல்ல; அது ஊருக்கே தெரியும். அவர் இதை ஒரு சேவையாகத் தான் செய்து வருகிறார். அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை ஈஸ்வரமூர்த்தி மீறியதுமே, நீதிமன்றத்தை அணுகிக் கொள்ளுமாறு கூறிவிட்டு கே.கே.சி.பாலு அவர்கள் இதிலிருந்து விலகிவிட்டார். பள்ளியை விற்கச் சொல்லி மிரட்டியதாகக் ஈஸ்வரமூர்த்தி வைத்துள்ள குற்றச்சாட்டில் துளிகூட உண்மையில்லை” என முடித்துக் கொண்டார். ஈஸ்வரமூர்த்தி கொடுத்திருக்கும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் கே.கே.சி.பாலு தரப்பு விளக்கம் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளும் விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளே இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.  மாமனாருக்கும் மருமகனுக்குமான குடும்பப் பிரச்னையில், பள்ளியில் பயின்றுவரும் சுமார் 750 குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அவர்களின் பெற்றோர் பதற்றத்துடன் உள்ளனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் நலன்கருதியாவது இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு எட்டப்பட்ட வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு  ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.1 கோடி பணம்… ரூ.50 கோடி நில ஆவணங்கள்! ‘கட்டப் பஞ்சாயத்து’ பெயரில் மோசடி? – கொ.ம.தே.க பொருளாளர் கே.கே.சி.பாலு மீது பரபரப்பு புகார் 

பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.1 கோடி பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றை திருப்பித் தராமல் மிரட்டுவதாக கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள இந்தப் புகாரில், பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பணம் மற்றும் நில ஆவணங்கள் பெற்றதாகவும், அரசியல் முக்கியப் புள்ளிகள் சிலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அதிரடி கிளப்பியிருக்கிறார் பள்ளி நிர்வாகத்தில் பிரச்சினை… ‘பஞ்சாயத்து’க்கு சென்ற விவகாரம்!  ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள புகாரில், “ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமத்தில், ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் கீழ், 2014-ம் ஆண்டு முதல் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியை நான் நடத்தி வருகிறேன். பள்ளியின் தாளாளராக இருந்த பிரவீன், பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார். எனவே, அவரை பள்ளி நிர்வாகத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அதனையடுத்து, சென்னிமலை தி.மு.க., ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் சென்னிமலை தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் (எ) சுப்பிரமணி ஆகியோருடன் பிரவீன் சேர்ந்துகொண்டு, பள்ளி சொத்துகளை அபகரிக்க முயன்றார். இப்படியான சூழலில், இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளரான கே.கே.சி. பாலு, அ.தி.மு.க., முன்னாள் பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் கந்தசாமி, கொ.ம.தே.க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பவானியைச் சேர்ந்த கொங்கு ராஜா ஆகியோர் முன்வந்தனர். ‘முன்பணமாக ரூ.1 கோடி… அசல் பத்திரங்களையும் கொடுங்கள்!’ 2025 செப்டம்பர் 1-ம் தேதி பெருந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள கே.கே.சி.பாலுவின் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரச் சொன்னவர்கள், ‘பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு முன்பணமாக ரூ.1 கோடியும், பள்ளியின் பெயரில் உள்ள நிலங்களின் அசல் பத்திரங்களையும் வழங்க வேண்டும்’ எனக் கூறினர். இதனை நம்பி அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரும் கடன் பெற்று, 2025 செப்டம்பர் 9-ம் தேதி ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் பத்திரங்களையும் ஒப்படைத்தேன். ‘பள்ளியை விற்றுவிடு’… மிரட்டல் விடுத்தாரா கே.கே.சி.பாலு? பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஒருகட்டத்தில், ‘பள்ளியை விற்றுவிட்டால் பிரச்னை முடிந்துவிடும்’ எனக்கூறிய கே.கே.சி.பாலு, ‘நான் சொல்லும் ரேட்டுக்கு, நான் சொல்லும் நபருக்கு பள்ளியை எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்னிடம் உள்ள ரூ.1 கோடி பணத்தையும், மூன்று அசல் ஆவணங்களையும் திருப்பித் தர முடியாது. ஆவணங்களை வைத்து நான் பள்ளியை விற்றுவிடுவேன்’ என மிரட்டினார். ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள்! ரூ.1 கோடி பணமும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் மூன்று அசல் பத்திரங்களும் வழங்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அவற்றை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, சொத்துகளை எழுதிக் கொடுக்க மிரட்டிவருகின்றனர். எனவே, கே.கே.சி. பாலு மற்றும் மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரளித்த ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். “தாளாளராக இருந்து பள்ளியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்த பிரவீன் வேறு யாருமல்ல, என்னுடைய இரண்டாவது மருமகன் தான். இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தே, கே.கே.சி.பாலுவிடம் பஞ்சாயத்துக்கு சென்றேன். ஆனால், என்னிடம் ஒருகோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வாங்கிக்கொண்டு, திருப்பித் தராமல் மோசடி செய்து வருகின்றனர். கே.கே.சி.பாலுவை நல்லவர் என்று நினைத்திருந்தேன். அவர் இப்படியெல்லாம் செய்வார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு மிரட்டல் விடுத்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. பள்ளி சொத்து முறைகேடு தொடர்பாக இதுவரை சுமார் 15 முறை புகார் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இப்போதாவது என்னுடைய பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: ‘அம்பானி’ வரை நட்பு? ‘யார் இந்த ஈரோடு கேசவநாதன்?’ – விக்ரமின் ‘லார் கிப்பான்’ வீடியோவால் சிக்கும் பெரும்புள்ளிகள்!

சர்வதேச அளவில் பாதுகாக்கப்படும் அரிய வகை உயிரினமான ‘லார் கிப்பான்’ குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோவை, நடிகர் விக்ரம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக வனத்துறை விசாரணையில் இறங்க, விக்ரம் வீடியோவில் இருந்த ‘லார் கிப்பான்’, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்தில் இருந்ததும், அது, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனின் பண்ணையில் இருந்து பெறப்பட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு, வனத்துறையின் விசாரணை கேசவநாதன் பக்கம் திரும்பியது. பெருந்துறையில் உள்ள அவரது பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டு வந்த 7 ‘ஆப்பிரிக்கன் சர்வல்’ பூனைகள், 2 ‘லார் கிப்பான்’ குரங்குகள், 2 ‘டஃப்டட் கேப்புசின்’ குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், கேசவநாதனின் பின்னணி அறிந்தவர்களிடம் நாம் விசாரணையில் இறங்க, அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ‘யார் இந்த கேசவநாதன்?’ – வெளிச்சத்திற்கு வரும் சர்வதேச தொடர்புகள்! “பெருந்துறை அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்வலசு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கேசவநாதன். குவாரி தொழில் செய்து வருகிறார். இவர் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் இதை பொழுதுப்போக்காக தொடங்கியவர், நாளடைவில் தனது சொந்த ஊரில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்த்ததோடு, அதன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. கென்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்ற பறவைகள் மற்றும் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் விற்பனையில் இயங்கிவந்த பல்வேறு வெளிநாட்டவர்களின் தொடர்பும் கேசவநாதனுக்குக் கிடைத்துள்ளாகத் தெரிகிறது. ‘அம்பானி’ திருமணத்தில் கேசவநாதன்? இதில் அதிரவைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், 2024-ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற, ஆசியாவின் முன்னணிப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணத்தில், கேசவநாதன் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டதுதான். மல்டி-மில்லியனர்கள் மற்றும் உலகளாவிய பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த திருமண விழாவில், ஈரோட்டில் குவாரி பிசினஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஃபார்ம் நடத்தி வரும் கேசவநாதன் பங்கேற்றார் என்றால், அவரது தொடர்புகளின் எல்லைகளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்(!) ‘முக்கியப் புள்ளிகள்’ சிக்க வாய்ப்பு? கேசவநாதன் என்ற ஒரு தனி நபரிடம், உரிய ஆவணங்கள் இன்றி இத்தனை அரிய வகை உயிரினங்கள் எப்படி வந்தது? அவற்றை எங்கிருந்து பெற்றார்? தற்போது பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களைப் போல, வேறு ஏதாவது உயிரினங்களை இதற்கு முன் வைத்திருந்தாரா? அவற்றை வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? அவரது பின்னணி மற்றும் தொடர்புகள் என்ன? என்பவை எல்லாம் பெரும் கேள்விகளாக எழுகின்றன. இதையெல்லாம் வனத்துறை அதிகாரிகள் ஆழமாக விசாரித்தால், இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு ‘முக்கியப் புள்ளிகள் (!)’ உள்ளனரா என்பது தெரியவரும்” என்றனர். ‘பிள்ளையார் பிடிக்கப்போய்.. குரங்கான கதை’ என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு குரங்கை பிடிக்கப்போய் பல ‘முதலைகள்’ பிடிபடும் போல!

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: மூடப்பட்ட கதவுகள்… அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் தோப்பு வெங்கடாச்சலம்?

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். சமீப காலமாக, அவரின் அரசியல் கணக்குகள் எதுவும் கைகூடாமல் போனதால், அரசியலுக்கு ‘முழுக்கு’ போட்டுவிடலாமா என, தீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஷயம் அறிந்தவர்களிடம் பேசினோம்.  தேர்தல் தோல்வி… கொந்தளித்த தோப்பு! “2026 சட்டமன்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் தான் தோற்றதற்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி தரப்பின் உள்ளடி வேலைகள் தான் முக்கியக் காரணம் என தோப்பு நம்புகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆராய தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வுக்குழு பெருந்துறை வந்தபோது, ‘நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு ஏதவாது தெரிய வேண்டுமென்றால், தொகுதி மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றதோடு, இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினால் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன், கட்சித் தலைமை தான் முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக, 2026 பொதுத்தேர்தலுக்கு செலவு செய்த தொகையையும் கட்சி கொடுக்க வேண்டும்’ என்று கள ஆய்வுக் குழுவினரிடம், தோப்பு கறாராகப் பேசியுள்ளார். ‘ராஜினாமா’ அஸ்திரம்…  தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடனே, தி.மு.க தலைவர் ஸ்டாலின், செல்வராஜை அழைத்துப் பேசி சமாதானப்படுத்த, தன்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இதே உத்தியை தோப்பு கையாள நினைத்தார். ராஜினாமா அஸ்திரத்தை கையிலெடுத்தால் தலைமை சமாதானத்திற்கு வரும். அப்போது முத்துசாமி ஆதரவாளர்களைத் தூக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்கச் சொல்லி ‘டிமாண்ட்’ வைக்கலாம் என திட்டமிட்டார். தலைமை இதற்கு இணங்காவிட்டால், தி.மு.க-விலிருந்து விலகி, கட்சி மாறுவதற்கும் தயாராகி வந்தார். தோப்புவின் எதிர்த்தரப்பு, இந்தத் தகவல்களை எல்லாம் அறிவாலயத்தில் போட்டுக் கொடுத்தது. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி! தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் த.வெ.கவுக்கு படையெடுத்துவரும் நிலையில், தி.மு.க-வில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இப்படியான நிலையில், தோப்பு கட்சி தாவினால் தி.மு.க-வின் இமேஜ் ‘டேமேஜ்’ ஆகும் என நினைத்த தலைமை, தோப்பு வகித்து வந்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியைப் பிடுங்கியது. இந்த அதிரடி பதவி பறிப்பால் தோப்பு அரண்டு போனதாகச் சொல்கின்றனர். த.வெ.க எண்ட்ரியை தடுத்த அரசியல் எதிரி! த.வெ.க-வில் ஐக்கியமாகிவிட தோப்பு காய்நகர்த்தி வந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த, தனது அரசியல் எதிரியான பெருந்துறை ஜெயக்குமாருக்கு, பெருந்துறை தொகுதியை மட்டும் கொண்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை த.வெ.க., தலைமை கொடுத்தது. இதனால் தோப்புவின் த.வெ.க திட்டமும் கானல் நீரானது.   ‘தோப்பு வேண்டாம்’ – கறார் எடப்பாடி! மீண்டும் அ.தி.மு.க-விற்கு யூ-டர்ன் அடிக்க நினைத்த தோப்பு, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பினாராம். எடப்பாடியோ, ‘பெருந்துறை ஜெயக்குமார் நம்பிக்கை துரோகி என்றால், தோப்பு நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்க!  எப்ப வேணும்னாலும் அவர் நம்ம காலை வாரி விடுவாரு. இப்போ இருக்குற பிரச்னையே போதும்’ என, ஒரு பெரிய கும்பிடு போட்டிருக்கிறார். இதனால், தோப்புவின் அ.தி.மு.க பிளானும் சுக்குநூறாக உடைந்துள்ளது. அண்ணாமலையிடம் அடைக்கலமா? மற்றொரு பக்கம், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் தோப்பு இணையப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதற்கு துளியும் வாய்ப்பில்லை. ஏனென்றால், 2026 தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணாமலை பெருந்துறை வந்தபோது, தோப்பு வெங்கடாசலம் தரப்பு கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டதாக கடுமையாக விளாசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவும் தன்னுடைய தேர்தல் தோல்விக்குக் காரணம் என நினைத்த தோப்பு, கடந்த ஜூலை மாதம், அண்ணாமலை மீது வழக்கு தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் திட்டம் எதுவும் கைகூடாததால், பறிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவியை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என, தன்னுடைய நண்பரான செந்தில்பாலாஜியை தோப்பு நாடியிருக்கிறார். ஆனால் அவரோ, ‘நானே இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறேன். எனவே, இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்துவிட்டாராம்”. அரசியலில் இருந்து ஓய்வு? பதவியைப் பிடுங்கி தூக்கிக் கிடாசிய தி.மு.க; துளியும் மதிக்காத அ.தி.மு.க; அடைக்கப்பட்ட த.வெ.க கதவு போன்றவற்றால், என்ன செய்வதெனத் தெரியாமல் தோப்பு கடும் விரக்தியில் இருக்கிறாராம். பதவி – அதிகாரம் என அனைத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோப்பு, ‘சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாமா? அல்லது முழுமையாக அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாமா?’ என தீவிர யோசனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து, தோப்பு வெங்கடாச்சலத்தின் கருத்தை அறிய, அவரிடம் பேசினோம். “நான் த.வெ.க-வில் சேர்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல, அ.தி.மு.க-வில் சேர்வதற்கு எடப்பாடியிடம் தூது அனுப்பியதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. என்னுடைய தேர்தல் தோல்விக்கு சில நிர்வாகிகளின் உள்ளடி வேலையும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தான் இதற்குக் காரணம் என நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை.  நான் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என்னை நம்பி கொடுத்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்ல நான் நினைக்கவில்லை. அது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகும். அப்படியொரு தவறை நான் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தப் பதவியும் வேண்டாம் என கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். எனவே, பதவி பறிக்கப்பட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் தற்போது தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராகவே தொடர்கிறேன். என்னை நம்பி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பேனா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார்.  தனிமரம் ‘தோப்பு’ ஆகாது. ஆனால், தன்னுடைய செயல்பாடுகளினால் ‘தோப்பு’ தனிமரமாகி நிற்கிறது!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோட்டுக்கு அடித்தது ஜாக்பாட்! – ₹130 கோடி முதலீடு செய்யும் தனியார் நிறுவனம்! 

பிரபல விளையாட்டு மற்றும் ‘ஆக்டிவ்வேர்’ உடைகள் உற்பத்தி நிறுவனமான டெக்னோஸ்போர்ட் (TechnoSport), ஈரோட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசுடன் ₹130 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் கணிசமாக உயருவதுடன், ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் தனது ஆடைகளின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 25 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெக்னோஸ்போர்ட், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் மாடலை பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 66 பிரத்யேக ஷோரூம்கள் மூலம் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், வரும் 2027 நிதியாண்டிற்குள் தனது வருவாயை ₹1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய ₹130 கோடி விரிவாக்க முதலீடு, கொங்கு மண்டலத்தின் ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top