தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘எங்கிட்ட பேச மாட்டியா?’ – திருப்பூரில் கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற காதலன்

திருப்பூரில் வேறு நபருடன் போனில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பனியன் தொழிலாளியான பெண் ஒருவரை அவரது கள்ளக்காதலனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிச்சிபாளையம், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கோபால்சாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ராதிகா (36). அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த ராதிகாவுக்கு, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாற, இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். போன் பேச்சு… போதையில் வெடித்த தகராறு! இப்படியான நிலையில், சமீபகாலமாக ராதிகா வேறு ஒரு நபருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததோடு, அருண்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அருண்குமார் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அதிகளவில் மது அருந்தியிருந்த அருண்குமார், ராதிகாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். அப்போது போன் உரையாடலிலேயே இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடங்காத அருண்குமார், நள்ளிரவில் ராதிகாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அருண்குமார், ராதிகாவைக் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதிகா, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராதிகா இறந்துவிட்டதை உணர்ந்த அருண்குமார், வீட்டை விட்டு வெளியேறித் தப்பியோடிவிட்டார். இரவு முழுவதும் வீட்டின் கதவு திறந்தே கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ராதிகா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். ராதிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கொலையாளி அருண்குமாரைப் போலீசார் சல்லடை போட்டுத் தேடி அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கைதிக்கு ‘டார்ச்சர்’, போலீஸூக்கு ‘டிரான்ஸ்பர்’! – தாளவாடி போலீஸ் விவகாரத்தில் எஸ்.பி அதிரடி

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள திகினாரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாது (எ) மகாதேவா (வயது 19). இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. புகார் ஒன்றின் அடிப்படையில் விசாரணைக்காக இளைஞர் மாதுவை தாளவாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரின் ஓய்வு அறையில் மாதுவின் கைகளை சங்கிலியால் கட்டிப் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.  திருட்டு வழக்கு ஒன்றில் மாது கைது செய்யப்பட்ட நிலையில், அவர் செய்யாத மற்றொரு திருட்டு சம்பவத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் இளைஞர் மாது கதறியபோதிலும், காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதையும் ரகசியமாகப் படம் பிடித்த யாரோ இணையத்தில் வெளியிட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. காவல் நிலையத்திற்குள்ளேயே மனித உரிமைகளை மீறும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதனையடுத்து, ‘வீடியோவில் இடம்பெற்றுள்ள மாது (எ) மகாதேவா மீது, தாளவாடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அவர் கடந்த 20.09.2024 அன்று குற்ற வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது அல்ல’ என ஈரோடு மாவட்ட காவல்துறை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.  ‘செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி, போலீசார் தாக்கியது காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு நடந்தபோதிலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என விமர்சனங்கள் கிளம்பின. விவகாரம் பெரிதாகவே, ஈரோடு மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி  இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், இளைஞர் மாதுவை சங்கிலியால் கட்டிப்போட்டு தாக்கியது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாதுவை தாக்கிய தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்ட்டின் லூதர் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். வெறும் ஆயுதப்படை மாற்றத்துடன் இந்த விவகாரத்தை முடித்துவிடாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முறையான வழக்குப் பதிவு செய்து, துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“7 லட்சம் லஞ்சம் கொடுங்க…!” – ஈரோட்டில் கையும் களவுமாகச் சிக்கிய சார்பதிவாளர்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள ராயபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் 51 செண்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் சங்கர் (வயது 42), நிலத்தைப் பதிவு செய்து கொடுக்க ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் பணத்தை பத்திர எழுத்தரான வெற்றியிடம் (வயது 30) கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுத்து பத்திரம் பதிவு செய்வதை விரும்பாத விவசாயி கார்த்திகேயன், இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், ரசாயனம் தடவிய ரூ.7 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கார்த்திகேயனிடம் கொடுத்து, அவற்றை லஞ்சமாக வழங்குமாறு கூறினர். போலீசாரின் திட்டப்படி கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற விவசாயி கார்த்திகேயன், ரூ.7 லட்சம் பணத்தை பத்திர எழுத்தர் வெற்றியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார், லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் சங்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பத்திர எழுத்தர் வெற்றி ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

தோப்புக்கு ‘தோல்வி’, ஜெயக்குமாருக்கு ‘ஜெ’! – விரைவில் பெருந்துறை இடைத்தேர்தல்?  

பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய ஜெயக்குமார், திமுக வேட்பாளரான தோப்பு வெங்கடாச்சலத்தை 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி, ஜெயக்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தோப்பு வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ‘சட்டப்படி ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை’ இந்நிலையில், இந்த வழக்கு இன்று (08.09.2026) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, ‘தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லை’ எனக் கூறி, இந்த வழக்கை நிராகரித்தார்.   அதிமுக வேட்பாளராக தேர்தலில் வென்ற ஜெயக்குமார், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அதையடுத்து பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதேசமயம், ஜெயக்குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாச்சலம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், அதில் தீர்ப்பு வரும்வரை பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. விலகியது தடை? தேர்தல் வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில், பெருந்துறை இடைத்தேர்லுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு, ஜெயக்குமார் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், இடைத்தேர்தல் தடை வழக்கின் இறுதித்தீர்ப்பு செப்டம்பர் 28ஆம் தேதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். தேர்தல் வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாத நிலையில், வழக்குகள் ஏதும் இல்லாத தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் நேற்று (07.09.2026) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், பெருந்துறை தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: முட்டி மோதும் மூவர்; திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ரேஸில் முந்துவது யார்?

ஈரோடு மாவட்ட திமுகவில் கட்சி ரீதியாக பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் தற்போது ‘ஈரோடு வடக்கு மாவட்டம்’ ஆக உள்ளது. இதன் மாவட்டச் செயலாளராக என்.நல்லசிவம் இருக்கிறார். கட்சி மறுசீரமைப்பில், இரண்டு தொகுதிளை ஒரு மாவட்டமாகப் பிரிப்பது என்ற அடிப்படையில் பவானி, அந்தியூர் தொகுதிகள் ‘ஈரோடு வடக்கு மாவட்டம்’ ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கும் இந்தப் பகுதிகள், தற்போது வரை அதிமுகவின் வலுவான கோட்டையாகவே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக அலைக்கு மத்தியிலும் பவானி, அந்தியூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதே அதற்கு சாட்சி. இப்பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சரான கே.சி.கருப்பணனை எதிர்த்து வலுவாக அரசியல் செய்ய ஆட்கள் இல்லாதது, திமுக மாவட்டச் செயலாளரான நல்லசிவம் மீது சொந்தக் கட்சியினரிடையே நிலவும் அதிருப்தி ஆகியவையே இந்தத் தொகுதிகளில் திமுகவின் பின்னடைவுக்குக் காரணமாக இருக்கிறது. இப்படியான சூழலில், திமுகவின் மறுசீரமைப்பில் மாவட்டச் செயலாளராகி கட்சிக்கு வலுசேர்க்கப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இங்கு ரேஸில் இருக்கும் மூன்று பேரில் முந்தப் போவது யார்? முதலாவது, பவானி வடக்கு ஒன்றியச் செயலாளரான கே.ஏ.சந்திரசேகர். இவரின் தந்தை 1964ஆம் ஆண்டே பவானி குருப்பநாயக்கன்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தவர். மொழிப்போர் தியாகியும் கூட. அதேபோல, இவரது தாயார் பவானி வடக்கு ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளராக இருந்தவர். இப்படி பாரம்பரியமான திமுக குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர், தன்னுடைய 13ஆவது வயதிலிருந்து திமுகவில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். 24 ஆண்டுகளாக ஈரோடு திமுக இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் பவானி தொகுதியின் வேட்பாளராகவும் களம் கண்டார். இரண்டாம் நபர், அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். இவருக்கு 2026 தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது அந்தியூர் மத்திய ஒன்றியச் செயலாளாராக உள்ள வெங்கடாசலத்திற்கு 66 வயதாகிறது. புதிய விதிகளின்படி ஒன்றியச் செயலாளர் பதவியும் பறிபோவதால், “இந்த ஒரே ஒருமுறை மட்டும் மாவட்டச் செயலாளர் வாய்ப்பு கொடுங்கள்” என மிகத் தீவிரமாக தலைமையிடத்தில் பேசி வருகிறாராம். எம்.எல்.ஏவாக இருந்தபோது அந்தியூர் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்தவர் என்பதும், தொகுதியில் அடர்த்தியாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு ப்ளஸ். ஆனால், தன்னை வளப்படுத்திக் கொண்டவர், கட்சி நிர்வாகிகளை கவனிக்காதது மிகப்பெரிய ‘மைனஸ்’. அடுத்தவர், டி.என்.பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளரான சிவபாலன். இவர் ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தவர் என்பதால், தொகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் நன்கு பரிச்சயம் உள்ளவர். தன்மையான குணம் கொண்டவர்.  கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சிட்டிங் மாவட்டச் செயலாளரான நல்லசிவத்தின் ஆதரவு இவருக்கு இருப்பது ப்ளஸ். அதேதான் இவரின் மைனஸூம் கூட! “இவர் மாவட்டச் செயலாளரானால், நல்லசிவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார், இதனால் கட்சியின் வளர்ச்சி சந்தேகமே! மேலும், கட்சியில் சீனியர்கள் பலர் இருக்கும்போது, தேமுதிகவிலிருந்து வந்தவரை ஆதரித்து மாவட்டச் செயலாளராக்க வேண்டுமா?” என்கின்றனர் உள்ளூர் உடன்பிறப்புக்கள். ரேஸில் இருக்கும் மூவரில், கால் நூற்றாண்டு காலம் இளைஞரணியில் பொறுப்பில் இருந்தவர், ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடனான நெருக்கம், தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இணக்கமாகச் செல்பவர் என்ற அடிப்படையிலும், நிர்வாகிகளின் ஆதரவை தீவிரமாகத் திரட்டிவருவதால் தற்போதைய நிலவரப்படி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ரேஸில் சந்திரசேகரின் கரமே ஓங்கியுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

8 கோடி பங்களா; 7 கிலோ தங்கம், 27 லட்சம் பணம்! – சேலத்தில் சிக்கிய பலே ‘புரோக்கர்’ 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சிவம்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரதாப் (வயது 41). தனது கல்குவாரியை விரிவாக்கம் செய்ய அனுமதி கேட்டு, ஓசூரில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனை சந்தித்துள்ளார். ஆவணங்களைப் பார்த்த அதிகாரி, “15 லட்சம் ரூபாய் கொடுங்க… சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் உடனே கைக்கு வரும்!” எனத் தடாலடியாக லஞ்சம் கேட்டிருக்கிறார். ‘15 லட்சமா?’ என பிரதாப் அதிர்ந்துபோக, மனமிறங்கி லஞ்சத் தொகையை 10 லட்சமாக குறைத்துக் கொண்ட அதிகாரி புருஷோத்தமன், “முதல் தவணையாக 3 லட்ச ரூபாயை சேலத்துல இருக்குற என் ஏஜென்ட் சிவக்குமார்கிட்ட கொடுத்திடுங்க” எனக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், நேராக லஞ்ச ஒழிப்புத் துறையின் கதவுகளைத் தட்டினார். சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான அதிரடிப் படை, ரசாயனம் தடவிய 3 லட்ச ரூபாயை தொழிலதிபர் பிரதாப்பிடம் கொடுத்து அனுப்பியது. திட்டமிட்டபடி சேலம் ஐந்து சாலை சந்திப்பில் வைத்து, இடைத்தரகர் சிவக்குமார் அனுப்பிய உதவியாளரான முருகன் அந்தப் பணத்தை வாங்கிய நொடியில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவரைப் பொறிவைத்து மடக்கிப் பிடித்தனர். முருகன் கொடுத்த தகவலின் பேரில் சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் இடைத்தரகர் சிவக்குமார் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சேலம் தாசநாயக்கன்பட்டியில் உள்ள இடைத்தரகர் சிவக்குமாரின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்ற லஞ்ச ஒழிப்புப் படையினருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெறும் இடைத்தரகரான சிவக்குமார், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அரண்மனை போல் கட்டியிருந்த பிரமாண்ட பங்களாவைக் கண்டு அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், 7 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் அவர் ஆஸ்திரேலியாவில் பல கோடிகளை முதலீடு செய்ததற்கான அதிர்ச்சி தரும் ஆவணங்கள் சிக்கின. ஒரு சாதாரண இடைத்தரகரான சிவக்குமார், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் பலருடன் தொடர்பில் இருந்துவந்ததும், அவர்களோடு கூட்டுசேர்ந்து பல நூறு கோடிகளைச் சுருட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாடு தப்பி ஓடாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தயாராகி வருகின்றனர்.  மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள், அதிகாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் போலி சமூக ஆர்வலர்கள் மற்றும் போலி பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திரட்டி வருகின்றனர். அவர்களின் தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: லெஃப்டில் இண்டிகேட்டர், ரைட்டில் டர்ன்? – தோப்பு வெங்கடாச்சலத்தின் அடுத்த ‘மூவ்’! 

மாவட்டப் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது; திடீரென திமுகவிலிருந்து விலகியது… என சமீபகாலமாக ஈரோடு அரசியலில் ‘ஹாட் டாபிக்’ ஆக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். திமுகவிலிருந்து விலகியபோது, “தற்போதைக்கு வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை!” என கூறியிருந்தார். ஆனால், லெஃப்டில் இண்டிகேட்டரைப் போட்டு, ரைட்டில் திரும்பும் சுபாவமுள்ள தோப்பு வெங்கடாச்சலம், கருப்பு சிவப்பு வேட்டியை கழற்றிப் போட்ட கையோடு, அடுத்த கரைவேட்டியைக் கட்டுவதற்கான ‘டீலிங்’கை தொடங்கிவிட்டாராம். இதுகுறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். அதிமுகவில் ஐக்கியம்?   “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் தொடர விரும்பாத தோப்பு, அதிமுகவுக்கு ‘யூடர்ன்’ அடிக்க, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது விட்டார். ஆனால், எடப்பாடியிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை. இதற்கிடையே, திமுக தலைமை தோப்புவின் கட்சிப் பதவியை பிடுங்கியது. ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்குமா? உள்ளூரிலுள்ள எடப்பாடியின் நெருங்கிய உறவினர் மூலம் அதிமுகவில் இணைவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியைத் தொடங்கினார். பெருந்துறை தொகுதியுடன் கோபி அல்லது மொடக்குறிச்சி தொகுதியை இணைத்து, அதற்கு தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் அதிமுக தலைமை, ‘முதலில் கட்சியில் இணையச் சொல்லுங்கள். மற்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டது. இதனால் அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காதோ? எனச் சந்தேகப்பட்ட தோப்பு, மற்ற வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தார்.  தாமரையில் தஞ்சம்! அந்தவகையில், சமீபத்தில் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த, உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் காவி பிரமுகரை நேரில் சந்தித்துப் பேசினார். காவி பிரமுகரின் நெருங்கிய உறவினரும், தோப்புவின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமான தொழிலதிபர் மூலமாக இந்தச் சந்திப்பு நடந்ததாகச் சொல்கின்றனர். அப்போது, அதிமுகவில் இணைவதற்காக தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், அது கைகூடாத பட்சத்தில், தனக்கு மாநில அளவிலான முக்கியப் பதவி வழங்கினால், காவிக்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு ‘மேலிடத்தில் பேசி, பாசிட்டிவ் பதில் சொல்வதாக’ காவிப் பிரமுகரும் நம்பிக்கை அளித்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தர, எடப்பாடி கன்வின்ஸ் ஆனால் அதிமுக; அல்லது உச்சப் பிரமுகரின் ஆசியுடன் காவிக் கட்சியில் மாநிலப் பதவி என முடிவு செய்துள்ளார். இந்த அரசியல் கணக்குகளுக்குப் பிறகே, திமுகவிலிருந்து விலகும் முடிவை தோப்பு எடுத்தார்” என்றனர். தோப்பில் ‘இலை’ துளிர்க்குமா..? அல்லது ‘தாமரை’ மலருமா..? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.  

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: கடத்தப்பட்ட ‘கொங்கு கல்லூரி’ மாணவன்: வழக்குப்பதிவு செய்யாத போலீஸ்! – பின்னணியில் நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துவரும் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல் இந்த விவகாரம் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்ன நடந்தது? கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் கல்லூரிக்கு வெளியே உள்ள உணவகத்தின் அருகில் நின்று, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு கார் மற்றும் பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்த ஒரு மாணவரை அடித்து உதைத்ததோடு, காப்பாற்றச் சென்ற நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.  அத்தோடு விடாமல், அந்த மாணவரை தரதரவென இழுத்துச் சென்று, காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வெள்ளோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாகக் களமிறங்கி, கடத்தப்பட்ட மாணவனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், கடந்தலில் ஈடுபட்டவர்கள் சக மாணவர்கள் என்பதும், இருதரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துவந்ததும், அதன்காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்தது. வழக்கு பதியாதது ஏன்? பொது இடத்தில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருந்தும், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருதரப்பும் பேசி ‘சமரசம்’ செய்துகொண்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. கடத்தல் என்பது ஜாமீனில் வர முடியாத தீவிரமான குற்றமாகும். கடத்தப்பட்ட மாணவர் புகார் அளிக்கத் தயங்கினாலும், சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று காவல்துறையே சுயமாக வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமுண்டு. கட்டப்பஞ்சாயத்து நிலையமான காவல் நிலையம்! கடத்தப்பட்ட மாணவர் போலீசில் புகார் கொடுக்கத் தயங்கியது ஏன்? என்பது குறித்து விசாரித்தோம். அதில், கடத்தப்பட்ட மாணவர் திமுக முக்கியப் பிரமுகர் ஒருவரின் மகன் என்பதும், விஷயம் வெளியே தெரிந்தால் தேவையில்லாத சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே, வழக்குப்பதிய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகச் சொல்கின்றனர். அதேவேளையில், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல், சில அரசியல் புள்ளிகள் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கடத்தல் வழக்கு ‘கப்சிப்’பென வெளியே கசியாமல் சுமுகமாக (!) முடித்து வைக்கப்பட்டிருக்கிறதாம். கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்? சாதாரண ஏழை எளிய மாணவர்கள் இதுபோன்று தவறு செய்திருந்தால் போலீசார் இதேபோல ‘சுமுகத் தீர்வு’ கண்டு வழக்கை முடித்திருப்பார்களா? அல்லது இந்த விவகாரத்தில் பெரிய இடத்து வாரிசுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சட்டம் தன் கண்களை மூடிக் கொண்டதா? ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாது, தமிழக அளவில் முக்கியக் கல்லூரியாக கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும், அதனை கல்லூரி நிர்வாகம் அதனை கட்டுப்படுத்தத் தவறினால், எல்லைமீறிய வன்முறைக்கு முக்கியக் காரணியாக அமைந்துவிடும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. வன்முறையில் ஈடுபட்டவர்களை “அறிவுரை கூறி அனுப்புவது” அவர்களுக்கு மேலும் துணிச்சலையே தரும். நாளை இதே கும்பல் வேறு ஒரு பெரிய குற்றத்தைச் செய்தால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்களா? கல்வி நிலையங்களில் ரவுடியிசமும், அதை மூடி மறைக்க அரசியல் அதிகாரமும் கைகோர்க்கும்போது பாதிக்கப்படுவது சாதாரண மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாப்புமே ஆகும். காவல் நிலையம் ‘கட்டப் பஞ்சாயத்து நிலையமாக’ மாறாமல், சட்டத்தின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோட்டில் சிக்கிய ‘மான் கறி’ மாஃபியா! – ‘விவிஐபி கஸ்டமர்கள்’ சிக்குவார்களா? 

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சிலர் மான்களை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்து வருவதாக ஈரோடு வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில், சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த சச்சின் (வயது 29) மற்றும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 39) ஆகியோர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.  இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் பிடித்து விசாரித்தனர். மான் வேட்டைக்கான துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது? என விசாரித்தபோது, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் அருகேயுள்ள எழுதிங்கள்பட்டியில் கறிக்கடை நடத்திவரும் சந்தோஷ் (வயது 32) என்பவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியதாகத் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, ஈரோடு வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் தலைமையிலான வனத்துறையினர் எழுதிங்கள்பட்டியில் உள்ள சந்தோஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், இரண்டு ஏர்கன்கள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் ஆகியவை சிக்கின. இதனையடுத்து சந்தோஷ், சதீஷ், சச்சின் ஆகிய மூவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.  மேலும் நடைபெற்ற விசாரணையில், சந்தோஷ் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கிகளை அவரே சொந்தமாக தயாரித்து வந்ததும் தெரியவந்தது. வனத்துறையினர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை, திருச்சியில் வைத்து வனத்துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னணியில் பெரும்புள்ளிகள் (!) மான் வேட்டையில் ஈடுபட்டு அதன் கறியை விற்பனை செய்து வந்தவர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்வர்கள் இதையே தொழிலாகச் செய்து வந்துள்ளனர். அப்படியென்றால் வேட்டையாடப்பட்ட மானின் கறியை, அவர்கள் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தனர்? மானின் தோல், கொம்புகள் உள்ளிட்டவற்றையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனரா? என்பது குறித்த தகவல்களும் விசாரணையில் பெறப்பட்டதா?  சட்டவிரோதமாக பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மான் கறியை சாதாரண நபர்கள் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. எனவே, பல விவிஐபிக்கள் (!) இவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்திருக்கவும், இந்த சட்டவிரோத காரியத்திற்கு அதிகார வர்க்கத்தின் ஆசியும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.  மான் கறியை விற்பனை செய்வதைப் போலவே, மான் கறியை வாங்குவதும் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடிய கடுங்குற்றம் ஆகும். எனவே, மான்கறி வாடிக்கையாளர்களான பெரும்புள்ளிகள் (!) மீதும் வனத்துறையினரின் நடவடிக்கை பாயுமா? அல்லது வழக்கம்போல பெரும்புள்ளிகள் பக்கம் விசாரணையின் கரங்கள் நீளாமல், இத்துடன் முடிக்கப்படுமா..?   

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: ‘பிரித்துப் போடு!’ – கட்சி மறுசீரமைப்பில் எம்.பி பிரகாஷின் சித்து விளையாட்டு… கொந்தளிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற  திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியை மறுசீரமைக்க நிர்வாக ரீதியான பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனையடுத்து, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என 110 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து தலைமை அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகள் ஈரோடு கிழக்கு மாவட்டம் (ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி), ஈரோடு மத்திய மாவட்டம் (ஈரோடு மேற்கு, பெருந்துறை), ஈரோடு வடக்கு மாவட்டம் (பவானி, அந்தியூர்), ஈரோடு மேற்கு மாவட்டம் (கோபி, பவானிசாகர்) என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தான் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும் மாநகராட்சிகளைத் தவிர, மற்ற மாநகராட்சிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள், ஒரே கட்சி மாவட்டத்தில் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு கிழக்கு மாவட்டத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மத்திய மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது மாநகர திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில், ஈரோடு  எம்.பி-யும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ.பிரகாஷ்  இருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகள் மற்றொரு மாவட்டமாகவும் பிரிக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊர் அமைந்துள்ள மொடக்குறிச்சி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்தி வரும் பிரகாஷ், மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டால், மாவட்ட தலைநகரத்தில் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாது என நினைக்கிறார். எனவே, மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, பெருந்துறை தொகுதியை மத்திய மாவட்டத்தில் தள்ளிவிட்டு, ஈரோடு கிழக்கு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் . மாநகராட்சியில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு கட்சி மாவட்டங்களில் சேர்க்கப்பட்டால், கட்சி நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுவதுடன், கட்சிப் பணிகளிலும் தொய்வு ஏற்படும். எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் பிரகாஷ் தன்னுடைய சுயநலத்திற்காக மாநகராட்சியில் உள்ள இரண்டு தொகுதிகளையும் பிரித்துப் போட்டு ‘கேம்’ ஆடியுள்ளார். இந்த மாவட்ட பிரிப்பு பின்னணியில், மாநகரில் ஆதிக்கம் செலுத்துவதைத் தாண்டி, மற்றொரு கணக்கும் இருக்கிறது.  அதாவது, தனது சொந்தத் தொகுதியான மொடக்குறிச்சியில் எம்.பி பிரகாஷின் செயல்பாடுகள் மீது கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பிரகாஷ் போட்டியிட்டால் தேறுவது சிரமம். அதேபோல, அதிமுகவின் கோட்டையான பெருந்துறையில் களமிறங்கினாலும் அவருக்குத் தோல்வி உறுதி. எனவே, மாவட்ட தலைநகரும், சிறிய தொகுதியுமான ஈரோடு கிழக்கு தொகுதியை தன்னுடைய மாவட்டத்தில் சேர்த்துக் கொண்டால், மொடக்குறிச்சி தொகுதி இல்லையென்றால் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு வென்றுவிடலாம் என்ற சுயநலக் கணக்கோடு, கட்சியின் மறு சீரமைப்பிலும் தன்னுடைய சித்து விளையாட்டை பிரகாஷ் அரங்கேற்றியுள்ளார். கட்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஈரோடு கிழக்கு மட்டும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை ஒரே மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சியை மற்றொரு மாவட்டமாகவும் தலைமை மாற்றி அறிவிக்க வேண்டும்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மறு சீரமைக்க முயற்சிக்கும் திமுக தலைமை, மறுபடியும் உள்ளடி அரசியலுக்கு ஆதரவு கொடுக்குமா? அல்லது தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Scroll to Top