மாவட்டப் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது; திடீரென திமுகவிலிருந்து விலகியது… என சமீபகாலமாக ஈரோடு அரசியலில் ‘ஹாட் டாபிக்’ ஆக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம்.
திமுகவிலிருந்து விலகியபோது, “தற்போதைக்கு வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை!” என கூறியிருந்தார். ஆனால், லெஃப்டில் இண்டிகேட்டரைப் போட்டு, ரைட்டில் திரும்பும் சுபாவமுள்ள தோப்பு வெங்கடாச்சலம், கருப்பு சிவப்பு வேட்டியை கழற்றிப் போட்ட கையோடு, அடுத்த கரைவேட்டியைக் கட்டுவதற்கான ‘டீலிங்’கை தொடங்கிவிட்டாராம்.
இதுகுறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம்.
அதிமுகவில் ஐக்கியம்?
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் தொடர விரும்பாத தோப்பு, அதிமுகவுக்கு ‘யூடர்ன்’ அடிக்க, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது விட்டார். ஆனால், எடப்பாடியிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை. இதற்கிடையே, திமுக தலைமை தோப்புவின் கட்சிப் பதவியை பிடுங்கியது.
ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்குமா? உள்ளூரிலுள்ள எடப்பாடியின் நெருங்கிய உறவினர் மூலம் அதிமுகவில் இணைவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியைத் தொடங்கினார். பெருந்துறை தொகுதியுடன் கோபி அல்லது மொடக்குறிச்சி தொகுதியை இணைத்து, அதற்கு தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து பேச்சுவார்த்தைகள் நடந்தது.
ஆனால் அதிமுக தலைமை, ‘முதலில் கட்சியில் இணையச் சொல்லுங்கள். மற்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டது. இதனால் அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காதோ? எனச் சந்தேகப்பட்ட தோப்பு, மற்ற வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தார்.
தாமரையில் தஞ்சம்!
அந்தவகையில், சமீபத்தில் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த, உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் காவி பிரமுகரை நேரில் சந்தித்துப் பேசினார். காவி பிரமுகரின் நெருங்கிய உறவினரும், தோப்புவின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமான தொழிலதிபர் மூலமாக இந்தச் சந்திப்பு நடந்ததாகச் சொல்கின்றனர்.
அப்போது, அதிமுகவில் இணைவதற்காக தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், அது கைகூடாத பட்சத்தில், தனக்கு மாநில அளவிலான முக்கியப் பதவி வழங்கினால், காவிக்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு ‘மேலிடத்தில் பேசி, பாசிட்டிவ் பதில் சொல்வதாக’ காவிப் பிரமுகரும் நம்பிக்கை அளித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் பதவி தர, எடப்பாடி கன்வின்ஸ் ஆனால் அதிமுக; அல்லது உச்சப் பிரமுகரின் ஆசியுடன் காவிக் கட்சியில் மாநிலப் பதவி என முடிவு செய்துள்ளார். இந்த அரசியல் கணக்குகளுக்குப் பிறகே, திமுகவிலிருந்து விலகும் முடிவை தோப்பு எடுத்தார்” என்றனர்.
தோப்பில் ‘இலை’ துளிர்க்குமா..? அல்லது ‘தாமரை’ மலருமா..? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.