‘மதம் வேறு… மனிதம் ஒன்றே!’ – திருப்பூரில் 5 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கிய இஸ்லாமியர்கள்
‘மதம் வேறாக இருந்தாலும் மனிதம் ஒன்றுதான்’ என்பதை உணர்த்தும் வகையில், திருப்பூரில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அசைவ விருந்து வழங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வு, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூரும் மிலாடி நபி விழா, ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள குலாம் காதர் கார்டன் பகுதியில், குலாம் காதர் கார்டன் மிலாடி கமிட்டி சார்பில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. கமிட்டி தலைவர் குலாம் காதர் யாசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்ச்சியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி அப்பகுதி பொதுமக்கள் அனைவரையும் அழைத்து அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்திய காட்சிகள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

