‘எங்கிட்ட பேச மாட்டியா?’ – திருப்பூரில் கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற காதலன்

திருப்பூரில் வேறு நபருடன் போனில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பனியன் தொழிலாளியான பெண் ஒருவரை அவரது கள்ளக்காதலனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிச்சிபாளையம், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கோபால்சாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ராதிகா (36). அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த ராதிகாவுக்கு, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாற, இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.

போன் பேச்சு… போதையில் வெடித்த தகராறு!

இப்படியான நிலையில், சமீபகாலமாக ராதிகா வேறு ஒரு நபருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததோடு, அருண்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அருண்குமார் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அதிகளவில் மது அருந்தியிருந்த அருண்குமார், ராதிகாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். அப்போது போன் உரையாடலிலேயே இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடங்காத அருண்குமார், நள்ளிரவில் ராதிகாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அருண்குமார், ராதிகாவைக் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதிகா, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராதிகா இறந்துவிட்டதை உணர்ந்த அருண்குமார், வீட்டை விட்டு வெளியேறித் தப்பியோடிவிட்டார். இரவு முழுவதும் வீட்டின் கதவு திறந்தே கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ராதிகா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். ராதிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கொலையாளி அருண்குமாரைப் போலீசார் சல்லடை போட்டுத் தேடி அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Scroll to Top