September 12, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘சிம் கார்டு’ வாங்க போலி ஆவணம்: ஈரோட்டில் சிக்கிய ‘சீட்டிங் தம்பதி’ 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள மூங்கில்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (46) – ராதிகா (42) தம்பதியர். தற்போது, சூரம்பட்டி நியூ டீச்சர்ஸ் காலனி, காவேரி சிட்டியில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன சிம்கார்டு விற்பனை கடைக்குச் சென்று, சென்னையைச் சேர்ந்த டாக்டர் அமர்நாத் என்பவரின் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்து சிம்கார்டு பெற்றதாக, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். மோசடி தம்பதியினர் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெருந்துறை ஆர்.எஸ். ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த மோசடி தம்பதியைப் பிடித்தனர். அவர்களிடமிருந்த கார், போலி அடையாள அட்டை மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கார்த்திக்கை ஈரோடு மாவட்ட சிறையிலும், அவரது மனைவி ராதிகாவை கோவை பெண்கள் சிறையிலும் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய இவர்களது மகன் சக்தி தர்ஷனை (21) கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியே சென்னிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கைது செய்யப்பட்ட கார்த்திக் – ராதிகா தம்பதி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு, கோவை மாவட்டக் குற்றப்பிரிவு, சிங்காநல்லூர், மலையம்பாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பண மோசடி, ஆவண மோசடி மற்றும் இணையவழி சைபர் குற்றங்கள் தொடர்பாக 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தத் தம்பதி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘எங்கிட்ட பேச மாட்டியா?’ – திருப்பூரில் கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற காதலன்

திருப்பூரில் வேறு நபருடன் போனில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பனியன் தொழிலாளியான பெண் ஒருவரை அவரது கள்ளக்காதலனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிச்சிபாளையம், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கோபால்சாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ராதிகா (36). அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த ராதிகாவுக்கு, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாற, இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். போன் பேச்சு… போதையில் வெடித்த தகராறு! இப்படியான நிலையில், சமீபகாலமாக ராதிகா வேறு ஒரு நபருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததோடு, அருண்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அருண்குமார் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அதிகளவில் மது அருந்தியிருந்த அருண்குமார், ராதிகாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். அப்போது போன் உரையாடலிலேயே இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடங்காத அருண்குமார், நள்ளிரவில் ராதிகாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அருண்குமார், ராதிகாவைக் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதிகா, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராதிகா இறந்துவிட்டதை உணர்ந்த அருண்குமார், வீட்டை விட்டு வெளியேறித் தப்பியோடிவிட்டார். இரவு முழுவதும் வீட்டின் கதவு திறந்தே கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ராதிகா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். ராதிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கொலையாளி அருண்குமாரைப் போலீசார் சல்லடை போட்டுத் தேடி அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Scroll to Top