ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள மூங்கில்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (46) – ராதிகா (42) தம்பதியர். தற்போது, சூரம்பட்டி நியூ டீச்சர்ஸ் காலனி, காவேரி சிட்டியில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன சிம்கார்டு விற்பனை கடைக்குச் சென்று, சென்னையைச் சேர்ந்த டாக்டர் அமர்நாத் என்பவரின் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்து சிம்கார்டு பெற்றதாக, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
மோசடி தம்பதியினர் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெருந்துறை ஆர்.எஸ். ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த மோசடி தம்பதியைப் பிடித்தனர். அவர்களிடமிருந்த கார், போலி அடையாள அட்டை மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கார்த்திக்கை ஈரோடு மாவட்ட சிறையிலும், அவரது மனைவி ராதிகாவை கோவை பெண்கள் சிறையிலும் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய இவர்களது மகன் சக்தி தர்ஷனை (21) கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியே சென்னிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திக் – ராதிகா தம்பதி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு, கோவை மாவட்டக் குற்றப்பிரிவு, சிங்காநல்லூர், மலையம்பாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பண மோசடி, ஆவண மோசடி மற்றும் இணையவழி சைபர் குற்றங்கள் தொடர்பாக 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தத் தம்பதி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.