ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துவரும் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல் இந்த விவகாரம் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் கல்லூரிக்கு வெளியே உள்ள உணவகத்தின் அருகில் நின்று, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு கார் மற்றும் பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்த ஒரு மாணவரை அடித்து உதைத்ததோடு, காப்பாற்றச் சென்ற நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.
அத்தோடு விடாமல், அந்த மாணவரை தரதரவென இழுத்துச் சென்று, காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வெள்ளோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாகக் களமிறங்கி, கடத்தப்பட்ட மாணவனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், கடந்தலில் ஈடுபட்டவர்கள் சக மாணவர்கள் என்பதும், இருதரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துவந்ததும், அதன்காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.
வழக்கு பதியாதது ஏன்?
பொது இடத்தில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருந்தும், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருதரப்பும் பேசி ‘சமரசம்’ செய்துகொண்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.
கடத்தல் என்பது ஜாமீனில் வர முடியாத தீவிரமான குற்றமாகும். கடத்தப்பட்ட மாணவர் புகார் அளிக்கத் தயங்கினாலும், சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று காவல்துறையே சுயமாக வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
கட்டப்பஞ்சாயத்து நிலையமான காவல் நிலையம்!
கடத்தப்பட்ட மாணவர் போலீசில் புகார் கொடுக்கத் தயங்கியது ஏன்? என்பது குறித்து விசாரித்தோம். அதில், கடத்தப்பட்ட மாணவர் திமுக முக்கியப் பிரமுகர் ஒருவரின் மகன் என்பதும், விஷயம் வெளியே தெரிந்தால் தேவையில்லாத சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே, வழக்குப்பதிய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகச் சொல்கின்றனர்.
அதேவேளையில், கடத்தலில் ஈடுபட்ட மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல், சில அரசியல் புள்ளிகள் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கடத்தல் வழக்கு ‘கப்சிப்’பென வெளியே கசியாமல் சுமுகமாக (!) முடித்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.
கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்?
சாதாரண ஏழை எளிய மாணவர்கள் இதுபோன்று தவறு செய்திருந்தால் போலீசார் இதேபோல ‘சுமுகத் தீர்வு’ கண்டு வழக்கை முடித்திருப்பார்களா? அல்லது இந்த விவகாரத்தில் பெரிய இடத்து வாரிசுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சட்டம் தன் கண்களை மூடிக் கொண்டதா?
ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாது, தமிழக அளவில் முக்கியக் கல்லூரியாக கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும், அதனை கல்லூரி நிர்வாகம் அதனை கட்டுப்படுத்தத் தவறினால், எல்லைமீறிய வன்முறைக்கு முக்கியக் காரணியாக அமைந்துவிடும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி.
வன்முறையில் ஈடுபட்டவர்களை “அறிவுரை கூறி அனுப்புவது” அவர்களுக்கு மேலும் துணிச்சலையே தரும். நாளை இதே கும்பல் வேறு ஒரு பெரிய குற்றத்தைச் செய்தால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்களா?
கல்வி நிலையங்களில் ரவுடியிசமும், அதை மூடி மறைக்க அரசியல் அதிகாரமும் கைகோர்க்கும்போது பாதிக்கப்படுவது சாதாரண மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாப்புமே ஆகும். காவல் நிலையம் ‘கட்டப் பஞ்சாயத்து நிலையமாக’ மாறாமல், சட்டத்தின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.