ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஓசைப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவனும், பவானி காடையாம்பட்டியைச் சேர்ந்த மற்றொரு மாணவனும் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1-ல் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். காடையாம்பட்டியைச் சேர்ந்த மாணவன் உயரமாக இருப்பதால் ‘ஒட்டகம்’ என பட்டப்பெயர் வைத்து ஓசைப்பட்டி மாணவன் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், செப். 24-ல் ஓசைப்பட்டி மாணவர் காடையாம்பட்டி மாணவரை மீண்டும் ‘ஒட்டகம்’ என அழைத்ததால் இருவருக்குமிடையே வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குச் சென்ற ஓசைப்பட்டி மாணவரை, காடையாம்பட்டி மாணவன் பின்தொடர்ந்து சென்று கடுமையாகத் தாக்கியதோடு, அவரது தலையைப் பிடித்து சுவற்றில் பலமாக மோதியுள்ளார். இதில் அந்தச் சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளான்.
இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் சொல்ல, பேச்சு மூச்சில்லாமல் கிடந்த மாணவனை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாணவனின் உடல்நிலை மோசமடையவே, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் நிலைமை கவலைக்கிடமாகவே, கோவை ‘ராயல் கேர்’ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நேற்று மதியம் (செப்.25) பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் உறவினர்கள் திரண்டு வந்து, மாணவனின் மருத்துவச் செலவுக்குப் பணமின்றி தவிப்பதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டுமெனவும் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலர் ரவிக்குமார், ஏடிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து ரூ. 1 லட்சம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திடம் வழங்கினர். சிகிச்சைக்கு இந்தத் தொகை போதாது என்பதால், மாவட்ட நிர்வாகமும், அரசாங்கமும் மாணவனின் முழு மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய காடையாம்பட்டி மாணவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, பவானி போலீசார் கைது செய்தனர். பின்னர், ஈரோடு மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.