ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள சின்னியம்பாளையம் கண்ணாங்காடுமேட்டைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த செப். 25ஆம் தேதி மாலை, ஈரோடு சோலார்புதூரில் உள்ள டாஸ்மாக் பாருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இருவர், ஆகாஷிடம் மது குடிக்க பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். ஆகாஷ் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள் ஆகாஷின் கையிலிருந்த ஐஃபோனை பறித்துள்ளனர்.
“செல்போன் வேண்டுமென்றால் இந்த விலாசத்துக்கு வா!” என, சோலார் அருகேயுள்ள பாலுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். தன்னுடைய செல்போனை மீட்க வேண்டும் என்கிற பதற்றத்தில் ஆகாஷூம் அங்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டுக்குள் நுழைந்த மறுநொடியே டாஸ்மாக் பாரில் செல்ஃபோனை பறித்த 2 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆகிய மூவரும் கதவை உள்பக்கமாகப் பூட்டி, ஆகாஷின் உடைகளைக் கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி மிரட்டி உட்கார வைத்துள்ளனர். ஜி பே மூலம் ஆகாஷின் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களது அக்கவுண்ட்டிற்கு மாற்றியுள்ளனர்.
மேலும், ரூ.2 லட்சம் பணம் கேட்டு அக்கும்பல் ஆகாஷை கடுமையாகத் தாக்கியுள்ளது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஆகாஷ் சொல்ல, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிவந்த ஆகாஷ், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பாலுசாமி நகரைச் சேர்ந்த சசிகுமார் (வயது 34), திருநங்கை சுபி என்ற நந்தினி (வயது 22) மற்றும் 46 புதூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மூவரையும் ஈரோடு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி திருநங்கை சுபி (எ) நந்தினியை கோவை பெண்கள் மத்திய சிறையிலும், சசிக்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கோபியில் உள்ள மாவட்டச் சிறையிலும் அடைத்தனர். கைது செய்யப்பட்ட திருநங்கை மீது ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கு இருப்பதாகவும், சசிகுமார் மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.