September 29, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘குடிப்பழக்கம் இல்லாததால் கொன்றோம்!’ – டிராவல்ஸ் உரிமையாளர் கொலையின் பகீர் பின்னணி!

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட டிராவல் உரிமையாளர் கொலையின் அதிர்ச்சிகரமான பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 23-ல் சத்தியமங்கலத்திற்கு வாடகைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கிடந்தது, ஜெயச்சந்திரன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த கார் மாயமாகி இருந்ததோடு, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க, போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜெயச்சந்திரனின் செல்போன் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக ஈரோடு புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ் (வயது 40) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. அதையடுத்து தன்ராஜைப் பிடித்து விசாரித்தனர். தன்ராஜ் தன் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 41) மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த அவரது நண்பர் பாலமுருகன் (வயது 42) ஆகியோருடன் சேர்ந்து, டிரைவர் ஜெயச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆனந்தன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘உசிலம்பட்டி அருகே ஒரு கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடச் சென்றுள்ளனர். ஆனால், அந்தக் கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால், கோயில் உண்டியலை பாதுகாப்புக்காக கோயிலினுள் வைத்து பூட்டியிருந்துள்ளனர். இதனால் மூவரும் ஏமாற்றத்துடன் உசிலம்பட்டிக்குத் திரும்பியுள்ளனர். ஏதாவது ஒரு காரைத் திருடி விற்று காசு பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டவர்கள், உசிலம்பட்டி கார் ஸ்டாண்டில் நின்றிருந்த ஜெயச்சந்திரனின் காரைப் பார்த்து, அதிலிருந்த ஜெயச்சந்திரனின் நம்பருக்கு ஃபோன் செய்து, சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர். டிரைவரை அதிகளவில் மது குடிக்க வைத்து மட்டையாக்கிவிட்டு, காரை திருடிச் செல்வதே மூவரின் திட்டமாக இருந்துள்ளது. சத்தியமங்கலத்திற்கு வந்தபின் ஜெயச்சந்திரனை மது குடிக்க அழைத்துள்ளனர். ஆனால், ஜெயச்சந்திரனோ தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக்கூறி மறுத்துள்ளார். இதனால் திட்டத்தை மாற்றிய திருட்டுக் கும்பல், ஜெயச்சந்திரனை கொலை செய்துவிட்டு காரை திருடிச்செல்ல முடிவு செய்தனர். அதன்படி, பவானிசாகர் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் அருகே வந்ததும், காரை ஓரம்கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது திடீரென காருக்குள்ளேயே மூவரும் சேர்ந்து டிரைவர் ஜெயச்சந்திரனின் கழுத்தைக் துணியால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசியுள்ளனர். பின்னர் ஜெயச்சந்திரனின் காரைக் திருடிச் சென்ற மூவரும், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஸ்கிராப் கடையில் ரூ.90 ஆயிரத்திற்கு விற்று, பணத்தைப் பங்கிட்டுக் கொண்டதும் தெரியவந்தது.’ மேட்டுப்பாளையம் ஸ்கிராப் கடையிலிருந்த ஜெயச்சந்திரனின் காரை மீட்ட போலீசார், மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனர். இந்த 3 பேரும் ஏற்கனவே கூட்டு சேர்ந்து பைக் திருட்டு, கோயில் உண்டியல் திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பதும் தெரியவந்தது. மூன்று கயவர்களின் பேராசையால் ஓர் அப்பாவியின் உயிர் பறிபோனதோடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

இளைஞரை நிர்வாணமாக்கி… கத்தி முனையில் ஐபோன், தங்கச் சங்கிலி பறிப்பு – திருநங்கை கும்பல் அட்டூழியம்! 

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள சின்னியம்பாளையம் கண்ணாங்காடுமேட்டைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22).  ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப். 25ஆம் தேதி மாலை, ஈரோடு சோலார்புதூரில் உள்ள டாஸ்மாக் பாருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இருவர், ஆகாஷிடம் மது குடிக்க பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். ஆகாஷ் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள் ஆகாஷின் கையிலிருந்த ஐஃபோனை பறித்துள்ளனர்.  “செல்போன் வேண்டுமென்றால் இந்த விலாசத்துக்கு வா!” என, சோலார் அருகேயுள்ள பாலுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். தன்னுடைய செல்போனை மீட்க வேண்டும் என்கிற பதற்றத்தில் ஆகாஷூம் அங்கு சென்றுள்ளார். அந்த வீட்டுக்குள் நுழைந்த மறுநொடியே டாஸ்மாக் பாரில் செல்ஃபோனை பறித்த 2 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆகிய மூவரும் கதவை உள்பக்கமாகப் பூட்டி, ஆகாஷின் உடைகளைக் கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி மிரட்டி உட்கார வைத்துள்ளனர். ஜி பே மூலம் ஆகாஷின் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களது அக்கவுண்ட்டிற்கு மாற்றியுள்ளனர். மேலும், ரூ.2 லட்சம் பணம் கேட்டு அக்கும்பல் ஆகாஷை கடுமையாகத் தாக்கியுள்ளது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஆகாஷ் சொல்ல, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். அங்கிருந்து தப்பிவந்த ஆகாஷ், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பாலுசாமி நகரைச் சேர்ந்த சசிகுமார் (வயது 34), திருநங்கை சுபி என்ற நந்தினி (வயது 22) மற்றும்  46 புதூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் ஈரோடு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி திருநங்கை சுபி (எ) நந்தினியை கோவை பெண்கள் மத்திய சிறையிலும், சசிக்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கோபியில் உள்ள மாவட்டச் சிறையிலும் அடைத்தனர். கைது செய்யப்பட்ட திருநங்கை மீது ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கு இருப்பதாகவும், சசிகுமார் மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Scroll to Top