‘குடிப்பழக்கம் இல்லாததால் கொன்றோம்!’ – டிராவல்ஸ் உரிமையாளர் கொலையின் பகீர் பின்னணி!

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட டிராவல் உரிமையாளர் கொலையின் அதிர்ச்சிகரமான பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 23-ல் சத்தியமங்கலத்திற்கு வாடகைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் சடலமாகக் கிடந்தது, ஜெயச்சந்திரன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த கார் மாயமாகி இருந்ததோடு, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

கொலையாளிகளைப் பிடிக்க, போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜெயச்சந்திரனின் செல்போன் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக ஈரோடு புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ் (வயது 40) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. அதையடுத்து தன்ராஜைப் பிடித்து விசாரித்தனர்.

தன்ராஜ் தன் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 41) மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த அவரது நண்பர் பாலமுருகன் (வயது 42) ஆகியோருடன் சேர்ந்து, டிரைவர் ஜெயச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆனந்தன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘உசிலம்பட்டி அருகே ஒரு கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடச் சென்றுள்ளனர். ஆனால், அந்தக் கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால், கோயில் உண்டியலை பாதுகாப்புக்காக கோயிலினுள் வைத்து பூட்டியிருந்துள்ளனர். இதனால் மூவரும் ஏமாற்றத்துடன் உசிலம்பட்டிக்குத் திரும்பியுள்ளனர்.

ஏதாவது ஒரு காரைத் திருடி விற்று காசு பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டவர்கள், உசிலம்பட்டி கார் ஸ்டாண்டில் நின்றிருந்த ஜெயச்சந்திரனின் காரைப் பார்த்து, அதிலிருந்த ஜெயச்சந்திரனின் நம்பருக்கு ஃபோன் செய்து, சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர்.

டிரைவரை அதிகளவில் மது குடிக்க வைத்து மட்டையாக்கிவிட்டு, காரை திருடிச் செல்வதே மூவரின் திட்டமாக இருந்துள்ளது. சத்தியமங்கலத்திற்கு வந்தபின் ஜெயச்சந்திரனை மது குடிக்க அழைத்துள்ளனர். ஆனால், ஜெயச்சந்திரனோ தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக்கூறி மறுத்துள்ளார். இதனால் திட்டத்தை மாற்றிய திருட்டுக் கும்பல், ஜெயச்சந்திரனை கொலை செய்துவிட்டு காரை திருடிச்செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, பவானிசாகர் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் அருகே வந்ததும், காரை ஓரம்கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது திடீரென காருக்குள்ளேயே மூவரும் சேர்ந்து டிரைவர் ஜெயச்சந்திரனின் கழுத்தைக் துணியால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசியுள்ளனர். பின்னர் ஜெயச்சந்திரனின் காரைக் திருடிச் சென்ற மூவரும், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஸ்கிராப் கடையில் ரூ.90 ஆயிரத்திற்கு விற்று, பணத்தைப் பங்கிட்டுக் கொண்டதும் தெரியவந்தது.’

மேட்டுப்பாளையம் ஸ்கிராப் கடையிலிருந்த ஜெயச்சந்திரனின் காரை மீட்ட போலீசார், மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனர். இந்த 3 பேரும் ஏற்கனவே கூட்டு சேர்ந்து பைக் திருட்டு, கோயில் உண்டியல் திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பதும் தெரியவந்தது.

மூன்று கயவர்களின் பேராசையால் ஓர் அப்பாவியின் உயிர் பறிபோனதோடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. 

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top