களமிறங்கிய ‘பட்டுச்சேலை பவாரியா கும்பல்’… கதறும் பட்டுச்சேலை வியாபாரிகள்!

வடமாநிலங்களில் இருந்து லாரிகளில் வந்து, ஒதுக்குப்புறமான வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் ‘பவாரியா’ கும்பலைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே பாணியில், தற்போது பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் டிப்-டாப்பாக வந்து, பட்டுச்சேலை கடைகளை குறிவைத்து அலறவிடும் ‘பட்டுச்சேலை பவாரியா கும்பல்’ ஒன்று தமிழகத்தில் களமிறங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள செட்டிகாரிச்சியூரைச் சேர்ந்தவர் ஜெயரங்கநாதன். இவர் தனது வீட்டிலேயே ‘ஜே.ஆர்.தேவஸ்ரீ ஹேண்ட்லூம்ஸ்’ என்ற பெயரில் கைத்தறி பட்டுச்சேலைகளை நெய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில், இவரது கடை வாசலில் ஒரு ஸ்கார்பியோ கார் வந்து நிற்க, அதில் இருந்து ‘டிப்-டாப்’ உடையில் 5 பெண்மணிகள் இறங்கியுள்ளனர். உள்ளே நுழைந்ததும் தெலுங்கில் படபடவெனப் பேசி, “கல்யாண பர்சேஸ்… நல்ல காஸ்ட்லியான பட்டுச்சேலைகளைக் காட்டுங்க” எனக் கேட்க, “ஆஹா.. பெரிய பார்ட்டி போலயே! இன்னைக்கு நல்ல வியாபாரம் தான்” என்ற நினைப்பில் ஜெயரங்கநாதனும் அவரது மனைவியும் பட்டுப்புடவைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். சேலைகளைப் புரட்டிப் பார்த்த அந்தக் கூட்டம், “இதெல்லாம் தனியா எடுத்து வைங்க, மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு வந்து வாங்கிக்குறோம்” என கேஷுவலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளது.

அவர்கள் சென்றதும், வேறொரு கடைக்கு அனுப்ப வைத்திருந்த சேலைகளை சரிபார்த்த ஜெயரங்கநாதனுக்குப் பேரதிர்ச்சி! அதில் இருந்த 10 சேலைகளில் வெள்ளி ஜரிகை கொண்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 4 பட்டுச்சேலைகள் மிஸ்ஸாகியிருந்தன. பதறிப்போய் சிசிடிவி பதிவுகளை போட்டுப் பார்த்தபோதுதான் ஆந்திரக் கும்பல் அரங்கேற்றிய தில்லாலங்கடி வேலை தெரியவந்தது.

கடைக்குள் வரும்போது இயல்பாக நடந்து வந்த பெண்கள், வெளியே செல்லும்போது வாத்து போல ‘டக் வாக்’ ஸ்டைலில் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. ஜெயரங்கநாதனின் கவனத்தைத் திசைதிருப்பி, புடவைகளை நைஸாகத் தங்களது கால்களுக்கு நடுவில் மறைத்து திருடிச் சென்றதை ஜெயரங்கநாதன் கண்டுபிடித்தார். இந்த சிசிடிவி ஆதாரத்துடன் மேச்சேரி போலீசில் புகாரளித்தார்.

மேச்சேரியில் தங்களது லீலையை அரங்கேற்றிய பட்டுச்சேலை பவாரியா கும்பல், அடுத்த ஸ்டாப்பாக ஓமலூர் பைபாஸ் சாலையில் உள்ள ‘கோவிந்தராஜ் சில்க்ஸ்’ கடைக்கு வண்டியை விட்டுள்ளது. அங்கும் போய் காஸ்ட்லியான பட்டுச்சேலைகளைக் காட்டச் சொல்லியுள்ளனர். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, 4 பட்டுச்சேலைகளைத் திருடியுள்ளனர். ‘சேலை எல்லாம் நல்லா இருக்கு, நாளைக்கு வாறோம்’ எனச் சொல்லிவிட்டு, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 பட்டுப்புடவைகளுடன் அங்கிருந்தும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு கடைகளில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புடவைகளைச் சுருட்டிய இந்த ‘பட்டுச்சேலை பவாரியாக்கள்’ குறித்து தங்கள் தொழில் சார்ந்த வாட்ஸ்அப் குரூப்புகளில் மேற்படி கடை உரிமையாளர்கள் அலர்ட் மெசேஜ் கொடுத்தபோது தான், சேலத்தில் வேலையைக் காட்டியதற்கு முந்தைய நாள் (செப். 24), இந்தக் கும்பல் திருவண்ணாமலை மாட்டம், ஆரணியில் உள்ள ‘அமுதா சில்க்ஸ்’ பட்டுப் புடவைக் கடையில் புகுந்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 20 பட்டுப்புடவைகளை அசால்ட்டாக அமுக்கியது தெரியவந்தது.

இந்த திருட்டுக் கும்பல் வந்த ஸ்கார்ப்பியோ காரின் நம்பரை வைத்து தட்டித் தூக்கலாம் என நினைத்து அந்தப் பதிவு எண் குறித்த விபரங்களைத் தேடியபோது, அது ஒரு பைக் நம்பர் என்பது தெரியவந்தது. போலி நம்பர் பிளேட் முதற்கொண்டு பக்காவாக திட்டமிட்டுக் களமிறங்கிய இந்தக் கும்பல், தமிழக போலீசாரையே தலை சுற்ற வைத்துள்ளது.  

இதற்கிடையே,  கடந்த 2023-ல் இதைப் போன்றதொரு சம்பவம் மேச்சேரிக்கு சில கி.மீ தொலைவில் உள்ள நங்கவள்ளியில் நடைபெற்றதாகச் சொல்கின்றனர். அங்குள்ள உள்ள ஒரு பட்டுச்சேலைக் கடையில் 10 பேர் கொண்ட ஆந்திரக்  கும்பல் இதேபோல் சேலை திருட முயன்றபோது, உஷாரான கடை ஊழியர்கள் ஷட்டரை மூடுவதற்குள், 8 பேர் எஸ்கேப் ஆகிவிட 2 பெண்கள் மட்டும் சிக்கிக்கொண்டனர். அதே கும்பல் தான் இப்போது மீண்டும் ஆந்திராவில் இருந்து ‘ரீ-என்ட்ரி’ கொடுத்துள்ளதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இப்போதெல்லாம் பட்டுப் புடவை கடைகளுக்குள் வந்து யாராவது தெலுங்கில் பேசி, “காஸ்ட்லியான புடவைகளைக் காட்டுங்க” என்று கேட்டாலே, வியாபாரிகள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

Scroll to Top