ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (அக்.10) இரவு வயதான பெண் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, அணைப் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் மாட்டிக் கொண்டது.
நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் சேற்றில் சிக்கிய யானையை பெல்ட் கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் சக்கரம் சேற்றில் சிக்கவே மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே, சோர்ந்து போயிருந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். காலையிலிருந்து மாலை வரை போராடியும், யானையை சேற்றிலிருந்து மீட்க முடியவில்லை. சுமார் 35 வயதான யானை என்பதால், சேற்றிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டுள்ளது.
மாலை நேரத்திற்குப் பிறகு அணைப் பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதி மீட்புப் பணிகளை கைவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர். இன்று காலையில் வந்து பார்த்தபோது, சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது.
யானையை எப்படியாவது உயிருடன் மீட்டு வனத்துக்குள் அனுப்பிவிடலாம் என்று பல மணி நேரங்களாகப் போராடியும் அது முடியாமல் போனது, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பின் அணையை ஒட்டிய வனப்பகுதியில் யானையை அடக்கம் செய்தனர்