October 12, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு தூக்கிய ‘கில்லாடி திருடர்கள்’! – போலீசிடம் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் கலாமணி. இவர் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த செப்.16-ம் தேதி இரவு வழக்கம்போல பன்றிகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து கலாமணி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். செப்.17ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் பட்டியின் அருகே பிக்-அப் வாகனம் ஒன்று பின்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் கடந்து சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் பன்றிகளை பிக்-அப் வாகனத்தில் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிசிடிவியில் பதிவான பிக்-அப் வாகனத்தின் நம்பரை வைத்து போலீசார் தேடிவந்த நிலையில், விஜயமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (28) மற்றும் அவிநாசியைச் சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கலாமணியின் பட்டியில் இருந்த பன்றிகளைத் திருடி அவர்களுக்குத் தெரிந்த பண்ணையில் விற்று பணம் பார்த்தது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் விற்ற பண்ணையில் இருந்த 35 பன்றிகளையும், திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய பிக்-அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்டச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது. மற்றொரு குற்றவாளியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய யானை… காப்பாற்றத் துடித்த வனத்துறை… கடைசியில் நடந்த சோகம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (அக்.10) இரவு வயதான பெண் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, அணைப் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் மாட்டிக் கொண்டது. நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் சேற்றில் சிக்கிய யானையை பெல்ட் கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் சக்கரம் சேற்றில் சிக்கவே மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, சோர்ந்து போயிருந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். காலையிலிருந்து மாலை வரை போராடியும், யானையை சேற்றிலிருந்து மீட்க முடியவில்லை. சுமார் 35 வயதான யானை என்பதால், சேற்றிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டுள்ளது. மாலை நேரத்திற்குப் பிறகு அணைப் பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதி மீட்புப் பணிகளை கைவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர். இன்று காலையில் வந்து பார்த்தபோது, சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. யானையை எப்படியாவது உயிருடன் மீட்டு வனத்துக்குள் அனுப்பிவிடலாம் என்று பல மணி நேரங்களாகப் போராடியும் அது முடியாமல் போனது, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பின் அணையை ஒட்டிய வனப்பகுதியில் யானையை அடக்கம் செய்தனர்

Scroll to Top