35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு தூக்கிய ‘கில்லாடி திருடர்கள்’! – போலீசிடம் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் கலாமணி. இவர் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த செப்.16-ம் தேதி இரவு வழக்கம்போல பன்றிகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து கலாமணி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். செப்.17ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் பட்டியின் அருகே பிக்-அப் வாகனம் ஒன்று பின்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் கடந்து சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் பன்றிகளை பிக்-அப் வாகனத்தில் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சிசிடிவியில் பதிவான பிக்-அப் வாகனத்தின் நம்பரை வைத்து போலீசார் தேடிவந்த நிலையில், விஜயமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (28) மற்றும் அவிநாசியைச் சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கலாமணியின் பட்டியில் இருந்த பன்றிகளைத் திருடி அவர்களுக்குத் தெரிந்த பண்ணையில் விற்று பணம் பார்த்தது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் விற்ற பண்ணையில் இருந்த 35 பன்றிகளையும், திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய பிக்-அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது. மற்றொரு குற்றவாளியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Scroll to Top