10 காரில் பந்தாவாகப் போய் மாஸ் காட்டுவது, பவுன்சர் புடை சூழ வலம் வருவது, அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக தன்னை ப்ரமோட் செய்வது என இன்ஸ்டாகிராமில் அலப்பறை செய்துவந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் வெற்றிவேல் என்பவர், பாலியல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.என்.பாளையம் ராமர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 33). இவர், ‘வி.கே. புரமோசன்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்ததுடன், குறைந்த விலையில் வீட்டுமனைகள், தோட்டங்களை வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தார். இவரது அலவலகத்தில் 10 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
அக்டோபர் 2-ம் தேதி தனது அலுவலகத்தில் பணியாற்றும் 21 வயது இளம்பெண் ஒருவரிடம், “அக்கவுண்ட்ஸ் நோட்டுக்களை எடுத்துக்கிட்டு என்னோட வீட்டுக்கு வா!” என வெற்றிவேல் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்ற பெண் ஊழியரிடம் வெற்றிவேல் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து கூச்சலிடவே “வெளியே சொன்னால் நடப்பதே வேறு” என்று மிரட்டி அனுப்பியுள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட அந்தப் பெண்ணிடம், அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் விசாரித்தபோது தான் விஷயம் வெளியே வந்தது. இருவரும் சேர்ந்து வெற்றிவேலிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் அநாகரிகமாகப் பேசியதுடன், அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேறச் சொல்லி தாக்க முற்பட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெற்றிவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெற்றிவேலின் பின்புலத்தை ஆராய்ந்த போது, ஷாக்கிங் ஆன பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
பணம் சம்பாதிக்க பயிற்சி!
வெற்றிவேல், 2 வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கத்தில் ‘பண்ணாரியம்மன் மென்ஸ் வேர்’ என்ற பெயரில் சிறியதாக ஒரு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமான மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
சமீபகாலமாக ரியல் எஸ்டேட் புரோக்கராக வலம்வரத் தொடங்கியவர், குறைந்த விலையில் வீட்டுமனை, நிலம் வாங்கித் தருவதாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி பத்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்று, ஏராளமான கிரயங்களை முடித்து லட்சக் கணக்கில் கமிஷன் பார்த்துள்ளார்.
மேலும், தன்னைப்போலவே ரீல்ஸ் போட்டு பணம் சம்பாதிப்பது எப்படி? என 50-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி கொடுத்ததுடன், அவர்களிடம் தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரான்சைஸை எடுத்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனச் சொல்லி பணத்தைக் கறந்துள்ளார்.
ஆளுங்கட்சி அடையாளம்!
இவ்வாறு, ரியல் எஸ்டேட் கமிஷன், பிரான்சைஸ் தொகை என குறுகிய காலத்தில் பல லட்சங்களைக் குவித்த வெற்றிவேல், தனது அலுவலகத்தில் விஜய் படம், காரில் தவெக கொடி என தன்னை ஒரு தவெக பிரமுகராக அடையாளப்படுத்தி வந்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனான சந்திப்பை ரீல்ஸ் போட்டு, தனக்கு மிகப்பெரிய அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதைப் போல சீன் காட்டியுள்ளார். செங்கோட்டையன் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக இருப்பதால் அவருடன் நெருக்கமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு, நில விவகாரங்களில் அதனைப் பயன்படுத்தி ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
‘கருணை வள்ளல்’ அவதாரம்!
ரியல் எஸ்டேட் புரோக்கர், ஆளுங்கட்சி பிரமுகர் என்ற பில்டப்புகளைத் தாண்டி தன்னை ஒரு கருணை வள்ளலாகக் காண்பிப்பதற்காக, கோயில்களுக்கு நன்கொடை அளிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது போன்றவற்றையும் ரீல்ஸ் ஆகப் போட்டு, தன்னை ஓர் கலியுகக் கர்ணனாக புரமோட் செய்திருக்கிறார்.
மேலும், தன்னுடைய வீடியோவிற்கு கமெண்ட்டில் ஹார்ட்டின் விடும் பெண்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 2.5 செண்ட் நிலத்தை இலவசமாகத் தருவதாக விநோத ஆஃபர்களையும் அள்ளிவிட்டுள்ளார்.
இத்துடன் நிறுத்தாமல், மேலாடையின்றி ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, பவுன்சர் பாதுகாப்போடு வலம் வருவது, தன்னை ஒரு டான் போல பாவித்து துப்பாக்கியைக் காட்டி கெத்தாக ரீல்ஸ் போடுவது என இவரின் ரீல்ஸ் அட்ராசிட்டிகளின் பட்டியல் நீள்கிறது. இப்படிப்பட்ட பில்டப் ரீல்ஸ்களால் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக்கொண்ட வெற்றிவேலின் சுயரூபம் பெண் ஊழியரிடம் அத்துமீறிய விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது.
வெற்றிவேலின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆராய்ந்தால், வேறு ஏதாவது பெண்களிடமும் தவறாக நடந்துள்ளாரா? என்பது தெரியவரும்.
சிறிய துணிக்கடை வைத்திருந்தவர், மிகக் குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாகி செல்வச் செழிப்புடன் வலம் வந்தது எப்படி? என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்தால், வெற்றிவேல் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது.