“காதலி கொடுத்த 3,400 லிப்ஸ்டிக் முத்தம்!” – போலீஸில் வசமாய்ச் சிக்கிய காதலன், நடந்தது என்ன?

காதலனை மகிழ்விக்க காதலி செய்த ‘சின்ன’ காரியம், கடைசியில் காதலனுக்குப் பெருத்த ஆப்பாக முடிந்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இவர் தனது காரில் வீதியைச் சுற்றி வந்தபோது, வழியில் சென்ற பொதுமக்கள் அனைவரும் காரையே வியப்புடன் உற்றுப் பார்த்தனர். காரணம், அந்த காரின் வெளிப்புறம் முழுவதுமே ‘சிகப்பு லிப்ஸ்டிக்’ முத்தத் தடங்களால் நிரம்பியிருந்தது!

வெளிநாடுகளில் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்த ஆதித்யாவின் காதலி, அதேபோலத் தனது காதலனின் காரிலும் செய்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காகக் காரின் பம்பர் முதல் கூரை வரை சுமார் 4 மணி நேரம் பொறுமையாக நின்று, கிட்டத்தட்ட 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களைப் பதித்து காரையே ‘ரெட் கார்ப்பேட்’ போல மாற்றியுள்ளார்.

முத்த அடையாளங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட காரை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. வீடியோவுக்கு சுமார் 55 லட்சம் பார்வைகள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், முத்த மழையில் நனைந்த காரைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் ஆச்சரியமடைந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். நொடிப் பொழுதில் ‘கிஸ் கார்’ (Kiss Car) புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவியது.

சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ, அப்படியே போக்குவரத்து காவல்துறையின் கண்ணிலும் பட்டது. வீடியோவில் தெளிவாகத் தெரிந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து, காரையும் அதன் உரிமையாளரான ஆதித்யாவையும் தூக்கினர்.

அதனையடுத்து, பொது இடங்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் காரில் மாற்றங்கள் செய்ததாகக் கூறி, ஆதித்யாவிற்குப் போக்குவரத்து போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

அதுமட்டுமின்றி, “முதல்ல அந்த முத்தத்தையெல்லாம் வண்டியை விட்டுத் துடைச்சிட்டு அப்புறமா வண்டியை எடு!” என உத்தரவிட்டனர். இதையடுத்து, 4 மணி நேரமாக காதலி ஆசையாகப் பதித்த 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் ஆதித்யா வாளித் தண்ணீரையும் துணியையும் வைத்து தேய்த்துத் தேய்த்து துடைத்து காரைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்.

காதலின் அடையாளமாகத் தொடங்கி, கடைசியில் அபராதத்திலும் வாளித் தண்ணீரிலும் முடிந்த இந்த ‘முத்தக் கார்’ சம்பவம் தற்போது இணையத்தில் மீம்ஸ்களாகப் பறந்து கொண்டிருக்கிறது!

– தி வெஸ்ட் செய்திப் பிரிவு

*****

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!

👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

பிற செய்திகள்

Scroll to Top