அரசு மருத்துவர்கள் அலட்சியம்… பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை – தேசியக் கொடியுடன் தர்ணா செய்த தந்தை! 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). கோவை தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக பிரியதர்ஷினி கடந்த அக்டோபர் 7-ம் தேதி உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தையின் எடை 4 கிலோ அளவிற்கு இருந்ததால், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனக்கருதி, சிசேரியன் முறையில் குழந்தையை எடுக்குமாறு மருத்துவர்களிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர்கள் காத்திருந்து சுகப் பிரசவம் செய்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு, அதன் வலது கையில் பிரச்னை இருப்பதையும், கையில் உணர்வுத் திறன் இல்லாததையும் சந்தோஷ்குமார் கவனித்துள்ளார். 

பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், உரிய சிகிச்சை அளித்து அதனை சரிசெய்யாதது ஏன் எனவும் சந்தோஷ்குமார் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார்.

இதற்கு மருத்துவமனை தரப்பிலிருந்து சரியான விளக்கம் கொடுக்காமல் மழுப்பியுள்ளனர். ஒருமாதத்திற்குப் பிறகு தான் குழந்தையின் பிரச்னை குறித்து என்ன செய்யலாம் என தெரியவரும் என மருத்துவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்பு தேசியக் கொடியுடன் தரையில் அமர்ந்து, தன்னுடைய பச்சிளம் குழந்தைக்கு உண்டான பிரச்சினைக்கு நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த உடுமலைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Scroll to Top