October 14, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட கணவன்; துடிதுடித்த இறந்த மனைவி!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாமிலால் (20) – நமிதா (18) தம்பதியர், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதூரில் தங்கி, சத்தி – கோவை சாலையில் உள்ள எக்ஸல் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தனர். நேற்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக சத்தியமங்கலம் வந்தவர்கள், அதன்பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர். ஆட்டோவில் செல்லும்போது தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. இதில் கோபமடைந்த யாமிலால் அவரது மனைவி நமிதாவை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் நமிதாவுக்கு தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோவிலேயே தூக்கி போட்டுக்கொண்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நமீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாமிலாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி… அரிவாளால் வெட்டிய கணவன் – நாமக்கல்லில் நடந்த பகீர் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன் (41). இவரது மனைவி புனிதா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். புனிதா மோகனூர் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கார்த்திகேயன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சமீபத்தில் மனைவி புனிதாவுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் ராஜாஜி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கடந்த அக்.12-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது காரை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு புனிதாவைத் தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை புனிதாவின் அண்ணன் வேலுமணி (42) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் வேலுமணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலுமணியில் தலையில் ஓங்கி வெட்டியதோடு, தடுக்கச் சென்ற புனிதாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். படுகாயமடைந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

நகை, பணம் இல்லைன்னா விட்டுடுவோமா? – வீட்டு உரிமையாளர்களை அதிரவைத்த விசித்திர திருட்டு!

கரூர் மாவட்டம், புகழூர் நான்கு ரோடு அருகேயுள்ள மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (67). தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆண்டாள் (60). சென்னையில் வசிக்கும் தங்களது மகனைப் பார்ப்பதற்காக, செப்டம்பர் 27-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மகன் வீட்டில் 10 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அக்டோபர் 7-ம் தேதிதான் கரூருக்கு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்தபோது வீட்டின் காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் மெயின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீடு அலங்கோலமாகக் கிடந்ததோடு, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20,000 பணம் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வெளியே வந்து பார்த்தபோது தான் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த ஹூன்டாய் வென்யூ காரும் காணமல் போனது தெரியவந்திருக்கிறது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர். வீட்டினுள் புகுந்த கில்லாடித் திருடர்கள், பீரோ, அலமாரி என வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பணமோ, தங்க நகைகளோ சிக்கவில்லை. ‘வந்த மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சே!’ எனத் திருடர்கள் அப்செட்டில் கிளம்ப நினைத்த நேரத்தில்தான், அந்த வீட்டின் கதவருகே உள்ள சுவரில் மாட்டியிருந்த கார் சாவி அவர்களின் கண்ணில் பட்டுள்ளது. அந்தச் சாவியை எடுத்து வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் வெனியூ காரை, சொந்த காரைப் போல கேஷூவலாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் திருடப்பட்ட காரின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர். வீட்டில் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடையாமல், வீட்டிலிருந்த சாவியை வைத்து காரையே தூக்கிச் சென்ற இந்த விசித்திரத் திருட்டுச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை! – மனைவியின் பிரிவால் விபரீத முடிவு 

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). சேலம் லீ பஜாரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வித்யா. இந்தத் தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சாய் ரித்விக் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. குடிப்பழக்கம் உள்ள விஜயகுமார், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, ஒரு மாதத்திற்கு முன்பு வித்யாவிடம் இருந்த குழந்தையை விஜயகுமார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆட்டையாம்பட்டியில் வசிக்கும் தனது தந்தை மற்றும் சகோதரிகளின் பராமரிப்பில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், விஜயகுமார் தனது மகன் சாய் ரித்விக்கை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த விஜயகுமார், நள்ளிரவு சுமார் 12 மணியளவில், தனது பெரியப்பா மகள் ரூபாஸ்ரீக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாததால் குழந்தையுடன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்ததுடன், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மனைவி வித்யாவையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் பதறிப்போய் விஜயகுமாரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தனர். அதற்குள் அவர் மகுடஞ்சாவடி – வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கூட்ஸ் ரயில் முன், தன் பிஞ்சு மகனுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த கோர விபத்தில் விஜயகுமாரும், ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை சாய் ரித்விக்கும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஈரோடு ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பிஞ்சு மகனுடன் சேர்ந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்டம், விளையாட்டுச் செய்திகள்

அரசு மருத்துவர்கள் அலட்சியம்… பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை – தேசியக் கொடியுடன் தர்ணா செய்த தந்தை! 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). கோவை தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக பிரியதர்ஷினி கடந்த அக்டோபர் 7-ம் தேதி உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.  குழந்தையின் எடை 4 கிலோ அளவிற்கு இருந்ததால், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனக்கருதி, சிசேரியன் முறையில் குழந்தையை எடுக்குமாறு மருத்துவர்களிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர்கள் காத்திருந்து சுகப் பிரசவம் செய்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு, அதன் வலது கையில் பிரச்னை இருப்பதையும், கையில் உணர்வுத் திறன் இல்லாததையும் சந்தோஷ்குமார் கவனித்துள்ளார்.  பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், உரிய சிகிச்சை அளித்து அதனை சரிசெய்யாதது ஏன் எனவும் சந்தோஷ்குமார் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை தரப்பிலிருந்து சரியான விளக்கம் கொடுக்காமல் மழுப்பியுள்ளனர். ஒருமாதத்திற்குப் பிறகு தான் குழந்தையின் பிரச்னை குறித்து என்ன செய்யலாம் என தெரியவரும் என மருத்துவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்பு தேசியக் கொடியுடன் தரையில் அமர்ந்து, தன்னுடைய பச்சிளம் குழந்தைக்கு உண்டான பிரச்சினைக்கு நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த உடுமலைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

Scroll to Top