கரூர் மாவட்டம், புகழூர் நான்கு ரோடு அருகேயுள்ள மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (67). தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆண்டாள் (60). சென்னையில் வசிக்கும் தங்களது மகனைப் பார்ப்பதற்காக, செப்டம்பர் 27-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மகன் வீட்டில் 10 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அக்டோபர் 7-ம் தேதிதான் கரூருக்கு திரும்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்தபோது வீட்டின் காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் மெயின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீடு அலங்கோலமாகக் கிடந்ததோடு, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20,000 பணம் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வெளியே வந்து பார்த்தபோது தான் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த ஹூன்டாய் வென்யூ காரும் காணமல் போனது தெரியவந்திருக்கிறது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர். வீட்டினுள் புகுந்த கில்லாடித் திருடர்கள், பீரோ, அலமாரி என வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பணமோ, தங்க நகைகளோ சிக்கவில்லை.
‘வந்த மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சே!’ எனத் திருடர்கள் அப்செட்டில் கிளம்ப நினைத்த நேரத்தில்தான், அந்த வீட்டின் கதவருகே உள்ள சுவரில் மாட்டியிருந்த கார் சாவி அவர்களின் கண்ணில் பட்டுள்ளது. அந்தச் சாவியை எடுத்து வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் வெனியூ காரை, சொந்த காரைப் போல கேஷூவலாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் திருடப்பட்ட காரின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.
வீட்டில் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடையாமல், வீட்டிலிருந்த சாவியை வைத்து காரையே தூக்கிச் சென்ற இந்த விசித்திரத் திருட்டுச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.